Wednesday 24th of April 2024 06:52:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
புறக்கணிக்கப்படும் மக்கள் நலன்கள்! - நா.யோகேந்திரநாதன்!

புறக்கணிக்கப்படும் மக்கள் நலன்கள்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட “பண்டோரல்” அறிக்கையில் வெளிவந்த சில தகவல்கள் மக்களைத் திகைப்படைய வைத்துள்ளன. தனிநபர்களிடம் இவ்வளவு பெருந்தொகையான சொத்துகள் நேர்மையான முறையில் சேர்த்திருக்கமுடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது..

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஆளும் ராஜபக்ஷ் குடும்பத்தைச் சேர்ந்தவருமான திருமதி நிருபமா ராஜபக்ஷ் சொத்து விபரம் 350 கோடி என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இச்சொத்து நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா செலவு செய்யும் ஒரு குடும்பத்துக்கு 18 தலைமுறைகளுக்குப் போதுமானதெனக் கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்னுமொரு தகவலும் வெளிவந்துள்ளது.

அதாவது நாட்டின் எரிபொருள் தேவைக்காக ஓமான் நாட்டிலிருந்து 3.6 பில்லியன் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஏற்கனவே இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஒரு தனி நபரின் கணக்கில் அரசாங்கத்தின் கணக்கில் அகப்படாமல் இவ்வளவு பெருந்தொகைப் பணம் முடங்கிக் கிடக்க அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை எரிபொருள் தேவைக்காக வட்டிக்குக் கடன் வேண்டிய நிலை நிலவி வருகிறது.

இப்படியான நாட்டைச் சுருட்டி ஒருசிலர் தங்கள் சொந்தச் சட்டைப் பையில் முடக்கும் சம்பவங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல் இடம்பெறுகிறதா அல்லது அரசாங்கத்தின் மறைமுகமாக ஆதரவுடன் இடம் பெறுகின்றனவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

உள்நாட்டில் நாட்டு நிலைமையும் நாட்டு மக்களின் நிலைமையும் படுமோசமான கட்டத்துக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த முயற்சிகளெல்லாம் படுதோல்வியில் முடிந்துவிட்டன. தற்சமயம் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது உள்ளூர் வர்த்தக முதலைகளும் இறக்குமதியாளர்களுமே என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே, அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் வரிசையில் நிற்க வேண்டியளவுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் விலைகளும் மக்கள் வாங்க முடியாதளவுக்கு அதிகரித்துவிட்டன.

அதேவேளையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துவிட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகப்பட இடமில்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது எரிபொருளின் விலையில் உயர்வு காரணமாகச் சகல பொருட்களின் விலைகளிலும் தாக்கம் ஏற்படுத்தும்.

எனவே சகல பொருட்களின் விலையும் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாது.

இப்படியான ஒரு அவல நிலையைத் தடுத்து நிறுத்துவதானால் அரசாங்கம் சில இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும். ஊழல், மோசடி, லாப வேட்கை, பதுக்கல், நிர்வாகத் திறமையின்மை முதலியன எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம்கொடாது கட்டுப்படுத்தப்படவேண்டும். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பல நேர்மையான உயர் நிர்வாக அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அதே பொருட்கள் சுங்கத்திலிருந்து அகற்றப்படாமல் பழுதடையும் நிலையும் அதிக தெண்டம் செலுத்தி மீட்கவேண்டிய நிலையும் நிலவுமளவுக்கு நிர்வாகச் சீர்கேடுகள் கோலோச்சுகின்றன. தட்டிக் கேட்பவர்களோ, தடுக்க முயல்பவர்களோ தாமாகவே பதவிகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

ஊழல்கள், மோசடிகள் உட்படப் பயங்கரக் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றில் நிறுத்தப்பட்டவர்கள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலைமைகள் ஊழல் மோசடிப் பேர் வழிகளுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு ஒரு பெரும் முரண்பாடான நிலை நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

ஒன்று – பெரும் வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், ஊழல் மோசடிப் பேர்வழிகள் சுதந்திரமாகத் தங்கள் வருவாயைப் பல மடங்காகப் பெருக்கி வருகின்றனர். நிறைவேற்று அதிகாரம், இராணுவமயப்பட்ட நிர்வாகம் என்பன இருந்தும் அவற்றை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மட்டுமின்றி மோசடிகள் முதல் ஆட்கடத்தல், படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு விடயம் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்பு வாழ்க்கைச் செலவு இரண்டு அல்லது மூன்று மடங்கு என்ற வகையில் உயர்வடைந்து விட்டது. எனவே சம்பள உயர்வு கோரியும், வேறு நிவாரணங்களை வேண்டியும் பல்வேறு தரப்பட்ட மக்களிடமும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு 100 நாட்களைத் தாண்டிவிட்டது. இவ்வாறே மருத்துவத் தாதியர் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறே ரயில்வே துறையினரும் தமது போராட்டத்துக்கான முன்னறிவிப்பை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைச் செலவு உயர்வு, ஊதியப் பற்றாக்குறை என்பவற்றால் மூச்சுத் திணறும் மக்களுக்குப் போராட்டத்தில் இறங்குவதைவிட வேறு வழியிருக்கவில்லை.

உண்மையான மக்கள் அரசாங்கமென்றால் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும்.

ஆனால் போராட்டம் நடத்துபவர்கள் தேசப்பற்றற்ற துரோகிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்களை எதிரி்களாக்கி அவர்களின் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வியைப் பாழடிக்கிறார்கள் எனக் கூறிப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே அரச தரப்பினர் மோதல்களை ஏற்படுத்துகின்றனர்.

அண்மையில் பொதுசன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் குட்டி ஆராய்ச்சி உரையாற்றும்போது ஆசிரியர்கள், அதிபர்கள் ஒன்றியச் செயலாளர் யோசேப் ஸ்டாலினுக்கு அரசர் காலத்தில் வழங்கப்பட்டது போன்ற தண்டனை வழங்கப்படவேண்டுமெனவும், அனுமதிக்கப்பட்டால் தானே முன்னின்று அதை நடத்தத் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.

கோல்பேஸ் திடலில் கட்டி வைத்து சாகுமட்டும் சவுக்கால் அடிப்பது, கழுத்தில் கல்லைக் கட்டி கண்டிக் குளத்தில் போட்டுக் கொல்வது, இரு கால்களையும் பிணைக்கப்பட்ட இரு மூங்கில்களில் கட்டி விட்டுப் பிணைப்பை அறுத்துவிட சம்பந்தப்பட்டவர் உடல் இரண்டாகப் கிழிந்து உயிரிழப்பர்.

குட்டி ஆராய்ச்சி இதில் எந்தத் தண்டனையைக் கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை.

ஆனால் இவர் 350 கோடி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட நிருபமா ராஜபக்ஷ்வுக்குத் தண்டனை கொடுக்கப் போவதாகக் கூறவில்லை.

இதிலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு சிறு கூட்டத்தின் நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழு நாட்டையுமே படுபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதே முக்கியமாகும்.

ஆனால் இன்றைய நெருக்கடி நிலை மக்களின் வாழ்வு நிலையை அதளபாதாளத்திற்கு தள்ளும் அதேவேளையில்கூட அரசாங்கமும் தாங்களாகவே ஆட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

26.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE