Saturday 4th of December 2021 02:18:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இனமோதல் 79!

எங்கே தொடங்கியது இனமோதல் 79!


'நான் மிகுந்த வருத்தத்துடனும் ஆழ்ந்த கவலையுடனும் உங்கள் முன் உரையாற்றுகிறேன். என்னைச் சுற்றி நடந்த அழிவுகளைப் பார்க்கும்போதும் வன்முறை எழுச்சிகளைப் பார்க்கும்போதும் அது மிகுந்த துயரத்தைத் தருகிறது. இந்த வன்முறைகள் குறிப்பாகத் தமிழ் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே வளர்ந்து வந்த தவறான உணர்வுகளும் மற்றும் சந்தேகமுமே காரணம். நம்பிக்கையீனம் இருக்கும்போது மனக் குறைகள் இருக்கும்போது மக்களை வன்முறைகளை நோக்கி இட்டுச் செல்வது சுலபமானது. முதன்முதலாக 1976ல் எமது தாய் நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கான, ஒன்றுபட்ட இலங்கையை இரண்டு தேசங்களாகப் பிரிப்பதற்கான இயக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2,500 ஆண்டுகளாக ஒன்றுபட்டிருந்த தேசத்தை பிரிப்பதற்கும் சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். இந்தப் பிரிவினைவாத இயக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதைத் தடை செய்யாத பொறுப்பை ஏற்க வேண்டிய அரசாங்கங்களில் நானும் அங்கத்தவனாக இருந்துள்ளேன். ஆகவே இன்று காலை அமைச்சரவையானது தேசத்தைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை நாடாளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் இரண்டாவதாக நாட்டைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை சட்டவிரோதமானவையாக்கித் தடை செய்யும் வகையிலும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியினர் சட்டவாக்க சபையில் அமரமுடியாது என்பதுடன் அவர்கள் நாட்டின் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இணைய முடியாது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் நாட்டின் பிரிவினை தடுக்கப்படுவதோடு, பிரிவினைக்காகப் பேசுபவர்கள் அதைச் செய்யமுடியாத நிலை வரவேண்டுமென்ற சிங்கள மக்களின் இயற்கையான விருப்பையும் கோரிக்கையையும் வேறு எவ்விதத்திலும் திருப்பதிப்படுத்த முடியுமென எனக்கோ எனது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை'.

இன அழிப்பு நடவடிக்கைகள் படுகொலைகள் மற்றும் சொந்தழிப்புகள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் ஜுலை 28ம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தொலைக்காட்சியில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியாகும்.

இக்கலவரங்கள் நிறுத்தப்பட்டது அரசாங்கத்தாலோ அல்லது இராணுவத்தினராலோ அல்லது கலகமடக்கும் பொலிஸாராலோ அல்ல: ஒரு வதந்தியால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மருதானை குட்செட் வீதியில் விடுதலைப் புலிகள் இறங்கிச் சுட்டவாறே முன்னேறி வருகின்றனர் என்ற அந்த வதந்தி மருதானையில் தொடங்கி மின்னல் வேகத்தில் கொழும்பு நகரமெங்கும் பரவி விட்டது. அத்துடன் வீதிகள் திடீரென வெறிச்சோடி விட்டன. வன்முறைக் கும்பல்களும், அவர்களை வழி நடத்திய பிக்குமாரும் எங்கு போய்ச் சேர்ந்தனர் என அறியமுடியாத வகையில் காணாமல் போய்விட்டனர்.

புலிகள் பற்றிய வதந்திக்குக் கூட பயந்து நடுங்குமளவுக்கு அவர்களின் வீரத்தின் போலித்தனத்தை உணர முடிந்தது. சாதாரண அப்பாவி மக்களைக் கொன்று குவித்த வன்முறையாளர்கள் புலிகளுடன் மோதித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் துணிவின்றி ஓடி மறைந்து கொண்டனர்.

அதேவேளையில் அன்று பிற்பகல் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜே.ஆர். அப்பேரழிவுகளுக்காகத் தான் கவலைப்படுவதாகக் கூறினாரேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கவோ, காரணமானவர்களைக் கண்டிக்கவோ இல்லை. மாறாகக் குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதே சுமத்தினார். 1976ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தனிநாட்டுத் தீர்மானம் தாய்நாட்டை இரு தேசங்களாகப் பிரிப்பதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அதற்கு சிங்கள மக்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்களெனவும் அந்த இயக்கத்தை நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்திருக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் நாடு பிரிபடுவதைத் தடுக்கவே சிங்கள மக்கள் வன்முறைகளில் இறங்கினர் என்ற அர்த்தப்பட அவர் உரையாற்றியதன் மூலம் இடம்பெற்ற கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தினார். மேலும் அவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிவினை கோரும் இயக்கங்களைத் தடை செய்யப்படுவதற்கு சட்டம் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தான் விரும்பவில்லையெனவும் சிங்கள மக்களின் விருப்பத்துக்காகவே மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அதேநேரத்தில் அவ்வன்முறைகளில் அரசாங்கத்துக்கோ, சில அமைச்சர்களுக்கோ, அரச படைகள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ இனவாதப் பௌத்த பிக்குகளுக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போலவும் அவை நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான இயல்பான சிங்கள மக்களின் எழுச்சி போலவும் வலியுறுத்தும் வகையிலேயே அவரின் உரை அமைந்திருந்தது.

அப்படி அவர் அப்படி உரையாற்றுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் அமைந்திருந்தன.

இக்கலவரங்களின்போது கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகரின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. உயர் ஸ்தானிகர் ஆப்ரகாமின் செயலாளர் ஐயர் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக நிலைமைகளைக் கண்டறிய 28ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பியிருந்தார்.

இரண்டாவது 1977 இன அழிப்புக் கலவரங்கள், 1981ல் யாழ்.நூலகம், நகரம் என்பன எரித்தழிக்கப்பட்டமை உட்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கம் தொடர்பான கண்டனங்கள் எழுந்தன. எனவே 1983ல் அப்படியான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பி அது தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எனவும் அதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் நம்ப வைக்க வேண்டியிருந்தது.

மூன்றாவது ஐ.நா. மனித உரிமைக் கோட்பாடுகளை மீறும் பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டு வருவது, பிரிவினையைத் தடைசெய்வது மீண்டும் இனக் கலவரங்கள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியெனக் காட்டவும் வேண்டியிருந்தது.

அதேவேளையில் நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு தங்களுக்கு உதவும்படி அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கோரிக்கை வைத்ததன் மூலம் பெரும் ஆபத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்ற உதவி கேட்கிறார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சித்தார்.

அடுத்தகட்டமாக ஜே.ஆர்.ஜயவர்த்தன, 3,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை 2 இலட்சத்துக்கு அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வடக்குக் கிழக்கிலும் இந்தியாவிலும் தஞ்சமடைந்தமை போன்ற கொடுமைகளுக்கான பழியை எவ்வித ஆதாரமும் இல்லாத போதும் இடதுசாரிகள் மேல் போட்;டார். அவ்வகையில் ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி என்பன ஜுலை 30ம் திகதி தடை செய்யப்பட்டன. அத்துடன் கலவரத்தின் சூத்திரதாரிகள் என ரோஹண விஜயவீர, சரத் முத்தட்டுகம, வாசுதேவ நாணயக்கார ஆகிய தலைவர்கள் உட்பட 31 பேரின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகள் என்றுமே இனவாதக் கொள்கைகளை ஆதரித்ததில்லை. ஜே.வி.பி. கூட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே குரலெழுப்பி வந்தது. அவர்கள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவிட்டாலும் என்றும் இனவாதிகளாக இருந்ததில்லை. அவர்கள் இனக்கலவரத்தைத் தூண்டினர் என்பது அப்பட்டமான பொய் மட்டுமின்றி, மோசமான ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்பட்டது.

எனினும் 1983 ஜுலை 30ஆம் திகதி இத்தடை அறிவிக்கப்பட்டதுடன் அதை நியாயப்படுத்தி, மக்களை நம்ப வைக்கும் நோக்குடன் அமைச்சரவைப் பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

அவ்வறிக்கையில், ஜுலை கலவரத்தின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட நான்கு திட்டங்கள் இருந்ததாகவும் முதலாவது சிங்கள தமிழ் மோதலை உருவாக்கி இரு இனங்களுக்குமிடையேயும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்குவது, இரண்டாவது சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவது, மூன்றாவது சிங்களவர் மத்தியிலுள்ள பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்துவது, நான்காவது, ஆயுதப் படைகளுக்குள் பிளவுகளை உருவாக்கி தங்களின் ஆதரவாளர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அவர்கள் வடக்கிலுள்ள பிரிவினைவாதிகளுடன் பேச்சுகளை நடத்தி வருவதாகவும் மக்கள் வதந்திகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இடதுசாரிகளைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதையும் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பான மேற்குலகின் கண்டனங்களைத் தவிர்க்க முடியுமெனவும் ஜே.ஆர்.நம்பினார்.

இவ்வாறு தென்னிலங்கையில் தன் எதிர்ப்புச் சக்திகளுக்கு வேலியிட்ட ஜே.ஆர். வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நசுக்கும் வகையிலும் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையிலும் அரசியலமைப்புக்கு 6வது திருத்தத்தைக் கொண்டு வந்து பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.

05.08.1983 அன்று பிரிவினைவாதத் தடைச் சட்டம் எவ்வித எதிர்ப்புமின்றி 150 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இலங்கையில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ இலங்கைக்குள் ஒரு தனிநாடு அமைக்கும் நோக்கத்துடன் பிரசாரம் செய்தால் அல்லது செயற்பாட்டால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ அந்த நோக்கத்துக்கு ஆதரவளித்தாலோ அல்லது நிதியுதவி வழங்கினாலோ அவர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படுவதுடன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச பணியாளர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக 3 மாதங்களுக்குள் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் தம் பதவிகளை இழக்கவேண்டிவரும்.

போராளிக் குழுக்கள் முதலில் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டாமெனத் தமிழ் ஊழியர்களை வேண்டிக் கொண்டபோதிலும், அப்படி சத்தியப் பிரமாணம் செய்யாவிடில் முழு அரச பணியாளர்களும் வேலைகளை இழக்கவேண்டிவருமாதலால் விடுதலைப் புலிகள் அரச பணியாளர்களைச் சத்தியப்பிரமாணம் செய்யும்படியும் அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லையெனவும் பிரபாகரனின் கையெழுத்துடன் ஒரு அறிவித்தலை வெளியிட்டனர்.

ஏற்கனவே மன்னாரில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை விட்டு விலகுவதென முடிவெடுக்கப்பட்டது. அவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் தமது பதவி விலகலை ஜுலை 21ம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அவர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்யாமையாலும் விடுமுறை அறிவியாது 3 மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமுகமளிக்காமையாலும் த.வி.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேரும் பதவியிழந்தனர்.

அவர்கள் பங்குபற்றிய ஜுலை 21ம் திகதி கூட்டமே அவர்கள் பங்குபற்றிய இறுதிக் கூட்டமாக அமைந்துவிட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப அடுத்த பொதுத் தேர்தல் வரை இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதன் மூலம் ஜனநாயகத்தின் கதவுகள் மொத்தத் தமிழ் அரசியலுக்கும், தமிழ் மக்களுக்கும் பூட்டப்பட்டு விட்டன. அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தை விடவேறு மார்க்கம் இல்லையென்ற நிலை ஜே.ஆர்.ஜயவர்த்தனாவாலேயே உருவாக்கப்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE