Friday 29th of March 2024 10:00:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாடு ஒரே சட்டத்தில் இலங்கையின் எதிர்காலம்! - நா.யோகேந்திரநாதன்!

ஒரே நாடு ஒரே சட்டத்தில் இலங்கையின் எதிர்காலம்! - நா.யோகேந்திரநாதன்!


ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வினாலும் ஆளும் பொதுஜன முன்னணியினாலும் தேர்தலின்போது மக்கள் முன் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட கோட்பாடாகும்.

அவ்வகையில் அண்மையில் ஜனாதிபதியால் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அதைத் திட்டமிடவும், ஆலோசனை வழங்கவுமென கலகொட அத்த ஞானசார தேரரின் தலைமையில் ஒரு ஜனாதிபதிச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இது ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டமை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை அமுல்படுத்தவா அல்லது ஒரே இனம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை அமுல்படுத்தவா என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

ஞானசார தேரருக்கெனத் தனியான ஒரு வரலாறு உண்டு. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மேல் தாக்குதல் தொடுத்து அவற்றைச் சேதப்படுத்துவதிலும் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை வீதியில் தூக்கி எறிவதிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதிலும் அவர்களின் பாங்கோசை ஒலி பெருக்கியில் ஒலிபரப்பப்படுவதையும் தடுப்பதிலும் தலைமை கொடுத்துச் செயற்பட்டவர் அவர். பேருவளை தர்க்கா நகர் பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம் இன அழிப்புக் கலவரங்களைத் தொடங்கி வைத்தவர். அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் இவரின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

அதேவேளையில் கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து வன்முறைகளில் ஈடுபட்டது மட்டுமின்றி, குருவானவரையும் தாக்கிக் காயப்படுத்தியிருந்தார். இவ்வாறே நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் குளத்துக்கு அருகாமையில் நீதி மன்றக் கட்டளையை மீறி அப்பகுதி விகாரையின் பீடாபதியின் உடலைத் தகனம் செய்தவர்.

ஏற்கனவே இவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் ஜனாதிபதி்யின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

முஸ்லிம்கள், கிறீஸ்தவர்கள், இந்துக்கள் எனப் பௌத்தர்கள் அல்லாத ஏனைய மதங்கள் மேல் விரோதக் கொள்கை கொண்ட ஒருவர், நாட்டின் நீதித்துறையை மதிக்காத ஒருவர் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் அவரின் சட்ட விரோத நடவடிக்கைகளை ஜனாதிபதியும், அரசாங்கமும் அங்கீகரிக்கின்றனர் என்பது அர்த்தமா என்ற கேள்வி எழுகிறது.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்பது இனங்களின் தனித்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும் என்றே கருதப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் விவாகச் சட்டம், வடக்கில் தேச வழமைச்சட்டம் போன்றவை இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

அப்படியான நிலையிலும் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனவிரோத சிந்தனை கொண்ட ஒருவரின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையானது நிச்சயமாக இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமென நம்ப முடியாது.

தற்சமயம் தங்கள் உரிமைப் பிரச்சினைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் 100 நாட்களைத் தாண்டியும் இன்னும் தீர்வு எட்டப்படவுமில்லை, எட்டப்படும் அறிகுறிகள் தென்படவுமில்லை. அதேவேளை மருத்துவத் தாதியர் அமைப்புகள், ரயில்வேப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக முன்னறிவித்தல் கொடுத்துள்ளனர்.

அதேவேளை அரிசி, கோதுமை, பால்மா, சீனி உட்பட அத்தியாவசியத் தேவைப் பொருட்களின் விலையுயர்வு காரணமாகவும் எரிபொருள் விலையுயர்வு அச்சுறுத்தல் காரணமாகவும் மக்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.

அதேவேளையில் அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி தான் அரிசி விலையையும், பருப்பு விலையையும் கவனிப்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்படவில்லையெனவும், எதிர்காலச் சந்ததிக்கு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நோக்கமெனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இன, மத, ஒடுக்குமுறைகளை முன்னெடுக்க ஒரு செயலணி அமைப்பதாலோ, அரச பணியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமலோ, மக்களை பட்டினி போடுவதாலோ எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா என யாரும் அவரிடம் கேட்கவுமி்ல்லை! அவரும் அது பற்றி விளக்கம் எதுவும் கொடுக்கவுமில்லை.

அதேவேளையில் கொழும்பு பொருளாதார மத்திய நிலையத்தின் பிரதான வர்த்தகர் ஒருவர் தற்சமயம் மரக்கறிகளின் வரத்து அரைவாசிக்கு மேல் குறைவடைந்து விட்டதாகவும் அவற்றின் தரமும் தரமிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

இந்த நிலையில் விவசாயிகள் தங்களுக்கு இரசாயனப் பசளைகளை வழங்கும் படி கோரி நாடு பரந்தளவில் போராட்டங்களை நடத்திய வருகின்றனர். காலம் காலமாக இரசாயனப் பசளைகளுக்கு இசைவாக்கம் பெற்றுவிட்ட விளை நிலங்கள், விதைகைள் என்பன சேதனப் பசளைகளுக்கு உரிய விளைச்சலை வழங்கப் போவதில்லை. எனவே நெல்லு, மரக்கறி என்பனவற்றின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். எனவே அரிசி உட்பட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை தவிர்க்க முடியாது.

ஆனால், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம இரசாயனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லையெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும் இரசாயன உரமின்மையால் பெரும் உற்பத்தி வீழ்ச்சியை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு வெகுவிரைவில் பெரும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அரிசி இறக்குமதி பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

ஆனால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கவுள்ளது பற்றி எவரும் கவலைப்படவோ மாற்று ஏற்பாடுகள் பற்றிய முயற்சிகளை மேற்கொள்ளவோ முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை.

எப்படியிருந்த போதிலும் உற்பத்தி வீழ்ச்சி, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, அரச பணியாளர்களின் போராட்டங்கள், அந்நியச் செலாவணி தட்டுப்பாடு எனப் பலவித நெருக்கடிகளையும் கடும் எதிர்ப்புகளையும் அரசாங்கம் சந்தித்து வருகிறது.

இப்படியான ஒரு நிலையில் தான் ஒரு நாடு – ஒரே சட்டம் செயலணி உருவாக்கமும் அதற்கு இன, மத வெறி கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டதும் இடம் பெற்றுள்ளன.

இது தற்சமயம் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பி மீண்டும் இனவாதச் சேற்றுக்குள் அமுக்கி இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதா இந்த நியமனம் எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

நாடு நெருக்கடிகளைச் சந்திக்கும் போதெல்லாம் சிறுபான்மை மக்களைப் பகடைக் காய்களாக்கி இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இலங்கை அரசியலில் அப்படி ஒன்றும் புதிய விடயமல்ல.

சிங்கள மக்கள் மீண்டும் இத்தகைய ஏமாற்றுகளின் பின்னால் இழுபட்டுப் போகாமல், தாம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவார்களா இல்லையா அல்லது தொடர்ந்தும் இனவாதத்தின் பின்னால் இழுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளப்போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

02.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE