Monday 29th of November 2021 06:12:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல்? - 80!

எங்கே தொடங்கியது இனமோதல்? - 80!


இந்தியாவைத் தலையிட வைத்த இன அழிப்பு வன்முறைகள்! - நா.யோகேந்திரநாதன்!

'அண்மையில் தமிழ் மக்கள் மீது இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் பற்றி இந்திய நாடாளுமன்றமும் இந்திய மக்களும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இந்தியா எப்போதும் இத்தகைய வன்முறைகளையும் கொலைக ளையும் பாகுபாட்டையும் கண்டித்து வந்துள்ளது. அதிலும் பாதுகாப்பற்ற மக்களுக் கெதிராக அவை நிகழ்த்தப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

இலங்கையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் இந்தியா மதிக்கிறது. மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதில்லை. எனினும் இரு நாட்டு மக்களுக்குமிடையேயுள்ள கலாசார, வரலாற்று மற்றும் நெருங்கிய உறவுகள் காரணமாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமிடையேயுள்ள நெருங்கிய தொடர்புகள் காரணமாக அங்கு நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைப் பாதிக்காது எனக் கூறிவிட முடியாது'.

இது இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கையின் பிரபல சட்டத்தரணியும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் சகோதரருமான எச்.டபிள்யூ. ஜயவர்த்தன இலங்கையில் இடம்பெற்ற 83 இன அழிப்புகள் தொடர்பாக இந்தியத் தரப்புடனான முதற் சுற்றுப் பேச்சு மேற்கொண்டபோது தெரிவித்த கருத்தாகும்.

1983 இன அழிப்பு வெறியாட்டத்தை அடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு சென்றிருந்தார். அப்போது அவர் இலங்கை அரசாங்கத்தின் நடவ டிக்கைகள் தொடர்பாகத் தன் அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்திருந்தார். அவ் வேளையில் அவை தொடர்பாக விளக்கமளிக்கவும் பேச்சுகளை நடத்தவும் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க ஒரு தூதுக்குழுவை அனுப்புவதாக அமைச்சர் நரசிம் மராவிடம் ஜே.ஆர்.ஜயவர்த்தன வாக்குறுதியளித்திருந்தார். அதன் காரணமாக எச்.டபிள்யூ. தலைமையிலான குழுவினர் 1983 ஓகஸ்ட் 11ம் திகதி டெல்லி சென்று இறங்கினர்.

அதே தினத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் ஆகியோர் சென்னையில் போயிறங்கினர். அவர்களை உள்விவகார அமைச்சர் வெங்கட சுப்பையா, வெளிவிவகாரச் செயலர் பாஜ்பாய் ஆகியோர் டெல்லியிலிருந்து சென்னை வந்து வரவேற்றனர்.

அதேவேளையில் 1983 வன்முறைகளையடுத்து, இந்தியாவுக்கு இலங்கையிலிருந்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கடல் வழியாகப் படகுகளில் அகதிகளாகச் சென்றடைந்திருந்தனர். இன்னொருபுறம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க. உட்பட பல கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஒருநாள் விடுமுறை அறிவித்து தமிழகம் பரந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோர் இவ்விவகாரத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கும்படி பிரதமர் இந்திரா காந்திக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தனர்.

தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கன்னடம் ஆகிய மாநிலங்களிலும் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஓகஸ்ட் 11ம் திகதி இந்தியத் தரப்பினருக்கும் எச்.டபிள்யூ.ஜயவர்த்தன குழுவினருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது ஆரம்பத்தில் திருமதி இந்திரா காந்தி மேற்படி கருத்துகளை முன்வைத்தபோது எம்.டபிள்யூ.ஜயவர்த்தன அதற்குப் பதிலளித்தார். அவர் ஜனாதிபதி ஜயவர்த்தன இப்பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அதன் அடிப்படையாக மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தல். தமிழை ஒரு தேசிய மொழியாக ஏற்று அதன் பாவனையை முன்னெடுத்தல், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டால் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல், பயங்கரவாத நடவடிக்கைகளும் வன்முறைகளும் முற்றாக நிறுத்தப்படுமானால் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடரப்படாமலிருத்தல் போன்ற விடயங்கள் முன் வைக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அது போதுமானதல்ல என எச்.டபிள்யூ.ஜயவர்த்தனவிடம் நேரடியாகக் கூறிய திருமதி இந்திரா காந்தி, சர்வகட்சி மாநாடு போன்ற விடயங்களைக் குழப்பும் வகையிலான முயற்சிகளை ஏற்றுக் கொள்ளமுடியாதெனவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நேரடியாகவே அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டுமெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதற்கு இலங்கைக் குழுவினர் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாத வரையும் அரசாங்கம் அவர்களுடன் பேசமுடியாதெனக் கூறவே இந்திரா காந்தி அது தொடர்பாகத் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேசமுடியுமெனத் தெரிவித்தார். அது தொடர்பாக எச்.டபிள்யூ.ஜயவர்த்தன ஜே,ஆர்.ஜயவர்த்தனவிடம் பேசிவிட்டு முடிவைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அதையடுத்துப் பிரதமர் தான் அப்பேச்சுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறிவிட்டு இரண்டாவது சுற்றுப் பேச்சுகளை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இரு தரப்புப் பிரதிநிதிகளும் இணைந்து தயாரித்த அந்த அறிக்கையில், 'ஒன்றிணைந்த நாட்டுக்குள்' என வரும் வார்த்தைகளை இலங்கைத் தரப்பினர், 'ஒரே நாட்டுக்குள்' என மாற்ற வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் எச்.டபிள்யூ.ஜயவர்த்தன இந்தியப் பிரதமரின் கருத்தைத் திரிபுபடுத்தும் உரிமை எவருக்குமில்லையெனக் கூறி மறுத்து விட்டார்.

2015ம் ஆண்டில் ரணில் - மைத்திரி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்பு முயற்சிகளின் போதும் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் 'ஒன்றிணைந்த' மற்றும் 'ஒரே நாட்டுக்குள்' என்பவற்றின் அர்த்தங்கள் தொடர்பாக குத்துவெட்டுப்பட்டமை நினைவிருக்கலாம்.

எச்.டபிள்யூ.ஜயவர்த்தன இந்திரா காந்தியுடனான பேச்சுகளை முடிவு செய்து கொண்டு இலங்கை திரும்பிய பின்பு ஓகஸ்ற் மாதம் 14ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியினரை இந்தியப் பிரதமர் டில்லியில் சந்தித்தார்.

அதில் அமிர்தலிங்கம் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு தொட்டு 1978ம் ஆண்டு அரசியலமைப்பு வரைப் படிப்படியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமையையும் அவற்றுக்கெதிராக நடத்தப்பட்ட சாத்வீகப் போராட்டங்களுக்கு இன அழிப்பு வன்முறைகளே பதிலாக வழங்கப்பட்டமையையும் சம அந்தஸ்துக் கோரிக்கை, சமஷ்டிக் கோரிக்கை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் அவற்றின் பலனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டு ஏமாற்றப்பட்டமையும் காரணமாகவே தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டமையையும் திருமதி இந்திரா காந்திக்கு விலாவாரியாக முன்வைத்தார். மேலும் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்பும் கூட மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்குகொண்ட போதிலும் அது செயற்படுத்தப்படவில்லை என்பதை அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டினார்.

இரண்டு மணி நேரம் நடந்த இப்பேச்சுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கருத்துகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டறிந்து கொண்ட பிரதமர் இலங்கை பிளவுபடுவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதெனவும் இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கென ஒரு சுயாட்சிப் பிரதேசம் என்ற தீர்வை ஏற்றுக்கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதுடன் சிங்கள மக்களின் ஒட்டு மொத்த நலன்களுக்குப் பாதுகாப்பு ஏற்படாத வண்ணம் தமிழ் மக்களைச் சுயகௌரவத்துடனும் பாதுகாப்புடனும் உரிமையுள்ள மக்களாக வாழ வைப்பதே தனது நோக்கமெனவும் தெரிவித்தார். நாடு என்ற வகையில் தான் ஒரு பக்கநிலைப்பாட்டை எடுக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.

அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்தி செய்யும் வகையில் தீர்வு அமையுமானால் நான் அதற்கு உடன்படுவதாகக் கூறி பிரதமர் இந்திராவின் முன்மொழிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்திரா காந்தியுடனான சந்திப்பின்போது அவர் வழங்கிய வாக்குறுதிகளில் திருப்தி கொண்டிருந்த அதேவேளையில் ஜே,ஆர்.ஜயவர்த்தனவும் திருமதி இந்தியா காந்தியுடன் எச்.டபிள்யூ.ஜயவர்த்தன குழுவினர் நடத்திய பேச்சுகளும் அதன் முடிவும் தனக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதினார்.

அதற்கு முக்கிய காரணமும் இருந்தது.

வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள், இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல்கள், தமிழ் மக்கள் மீதான கொடூர இனஅழிப்புகள் இடம்பெற்ற நிலையில் ஜுன் 27ஆம் திகதி பிற்பகல் ஊரடங்குச் சட்டம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமைகள் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் ஜுலை 28ம் திகதி இந்திரா காந்தி வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியிருந்தார். அவர் இங்கு வந்த இந்தியத் தூதரகத்தைப் பார்வையிட்ட பின்பு ஜே.ஆரைச் சந்தித்து இந்தியத் தூதுரகம் தாக்கப்பட்டதையிட்டு தனது அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு, இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதுவுமே பேசாது, அன்றே இந்தியா திரும்பி விட்டார். அவர் அவ்வாறு நடந்து கொண்டது ஜே,ஆருக்கு உள்ள10ர ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

திருமதி இந்திரா காந்தி உள்நாட்டிலும் பிராந்திய மட்டத்திலும் ஒரு இரும்புப் பெண்மணி எனப் பெயர் பெற்றிருந்தார். அவர் எதிர்ப்புகளையோ, ஏனையவரின் அபிப்பிராயங்களையோ பொருட்படுத்தாமல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவராகவே பார்க்கப்பட்டார்.

அவரின் பசுமைப் புரட்சி இயக்கத்துக்கு இடையூறாயிருந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பீடங்களிலிருந்த நிலப்பிரபுத்துவ பிராமணிய மேலாதிக்க சக்திகளின் அதிகாரத்தை நீக்கிவிட்டு சாதாரண நடுத்தர மக்களின் கைக்குக் கொண்டு வந்தார்.

இந்தியாவில் இப்படியான நடவடிக்கை என்பது அதிதுணிச்சலானதும் புரட்சிகரமான துமாகும்.

பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அவரது அவாமிக் கட்சி 1971ல் இடம்பெற்ற தேர்தலில் அரசாங்கமைக்குமளவுக்கு பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனால் மேற்குப் பாகிஸ்தானின் பூட்டோவின் மக்கள் கட்சியும் கிழக்கில் அவாமி லீக்கும் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தனர். எனவே பூட்டோ ஜனாதிபதியாகவும், முஜுபிர் ரஹ்மான் பிரதமராகவும் பதவியேற்பதாக இருவரும் உடன்பாட்டுக்கு வந்தனர். அப்போ ஜனாதிபதியாயிருந்த இராணுவத் தளபதி ஜஹீர்கான் ஆட்சியைக் கையளிக்க மறுத்து வந்தார்.

அவ்வகையில் அவாமி லீக்கின் புரட்சிகரப் பிரிவும் கிழக்கு பாகிஸ்தானிலுள்ள பாகிஸ்தான் படைத் தளபதிகளும் இணைந்து பங்களாதேஷ் விடுதலைப் படையென்ற அமைப்பை உருவாக்கினர். அதையடுத்து முஜுபிர் ரஹ்மான் 04.04.1971 சுதந்திர பங்களாதேஷ் நாட்டை பிரகடனப்படுத்தினார். அதையடுத்து இராணுவ அரசு முஜுபிர் ரஹ்மானையும் எனைய தலைவர்களையும் கைது செய்கிறது. உடனடியாகவே பங்களாதேஷ் விடுதலைப் படையின் தலைமையில் புரட்சி வெடிக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவம் வகைதொகையின்றி மக்களை வேட்டையாடுகிறது. 10 இலட்சம் மக்கள் பங்களாதேஷை விட்டு வெளியேறி இந்தியாவுக்குள் தஞ்சமடைகின்றனர்.

இந்திரா காந்தி எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக இந்தியப் படைகளை பங்களாதேஷுக்குள் இறக்குகிறார். சில நாட்களில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைய போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. முஜுபிர் ரஹ்மான் பங்களாதேஷின் அதிபராக்கப்படுகிறார்.

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பில் 3,000 பேர் கொல்லப்பட்டதும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தமையும் அடிப்படையாகக் கொண்டு இந்திரா ஒரு படையிறக்கத்தை இலங்கையில் மேற்கொள்ளக் கூடுமென ஜே,ஆர். அஞ்சியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

அப்படி ஒரு நிலைமை ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றமை தனக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே ஜே.ஆர்.கருதினார்.

எனினும் அவர் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் கை ஓங்கி விட்டதை அவர் புரிந்து கொண்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தை என்பதைத் துரும்புச் சீட்டாகப் பாவித்து தந்திரமான முறையில் இழுத்துப் பறித்து நீர்த்துப் போக வைத்துவிட முடியுமென அவர் நம்பினார்.

ஆனால் அவருக்குப் பூட்டுப் போடுவதற்கான வலுவான திட்டத்தை இந்திய வெளிவிவகாரப் புலனாய்வுப் பிரிவான 'றோ' ஏற்கனவே திட்டமிட்டு விட்டதை அவர் புரிந்து கொள்ளச் சில காலம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE