Monday 29th of November 2021 05:04:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
சீனாவின் கறுப்புப் பட்டியலில் இலங்கை மக்கள் வங்கி! - நா.யோகேந்திரநாதன்!

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இலங்கை மக்கள் வங்கி! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளை ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இப்பசளை தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டிருந்ததாக இலங்கையின் விஞ்ஞான ஆய்வாளர்கள் தெரிவித்ததை அடுத்தே இப்பசளையின் இறக்குமதி ரத்துச் செய்யப்பட்டது.

ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட இப்பசளைக்கான கொடுக்குமதி இலங்கை மக்கள் வங்கி மூலம் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதனுடைய முதலாவது கடன் தவணையைச் செலுத்த வில்லையெனக் கூறப்பட்டு, மக்கள் வங்கி சீனாவின் வர்த்தக கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டு விட்டதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் அறிவித்துள்ளார். அதேவேளையில் இப்பசளை இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஒரு தரப்பால் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட, அதன் முடிவுக்கமைய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை பசளையைத் திருப்பி அனுப்பும் சம்பவமும் சீனா மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் இணைக்கும் சம்பவமும் அதிரடியாக இடம்பெற்றுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்து இன்றுவரை சீனாவுக்கும் இலங்கைக்குமிடையே மிக நெருக்கமான நல்லுறவே நிலவி வந்துள்ளது. கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எனப் பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தது. தற்சமயமும் கொழும்பிலிருந்து களனிவரை தூண்களில் அமைக்கப்படும் நெடுஞ்சாலையைச் சீனா நிறுவி வருகிறது.

இப்படியான நிலையில் சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கலாம்.

எனினும், ஜனாதிபதியோ, பிரதமரோ நிதியமைச்சரோ இதுவரை இவ்விடயம் தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. அது மட்டுமின்றி இவ்விடயம் தொடர்பாக இலங்கைத் தரப்பிலிருந்து எவரும் சீனத் தூதுவருடன் தொடர்பு கொண்டு மேற்படி சம்பவம் தொடர்பாக விளக்கமளித்ததாகவோ கறுப்புப் பட்டியல் விவகாரத்தை ரத்துச் செய்யும்படி கோரியதாகவோ தெரியவில்லை.

அதேவேளையில் பசளையின் தரம் நிர்ணயம் செய்யப்படாமலே எவ்வாறு கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது பற்றியோ இதை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றியோ இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது பற்றியோ இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்விடயம் மஹிந்தானந்த அளுத்கம, சமல் ராஜபக்ஷ் ஆகிய இரு அமைச்சர்களின் அமைச்சுகளுடன் சம்பந்தப்பட்டதெனவும் கூறப்படுகிறது.

நல்லெண்ண அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய திட்டங்களை இடைநிறுத்தியது. அந்த நிலையில் சீனா அவற்றுக்கான செலவினங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தது. எனவே ஏற்கனவே 33% மட்டுமே சீனாவுக்கு வழங்கப்பட்ட துறைமுக நகரத்தின் பங்கை முழுமையாகவும் 30 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கும் இலங்கை சீனாவுக்கு வழங்கவேண்டி வந்தது.

அதிலிருந்து சீனா ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்குத் தாராளமாகவே உதவி செய்த போதிலும் தனது பொருளாதார, வர்த்தக நலன்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் விட்டுக் கொடுக்காது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். எனவே தான் சீனா சேதனப் பசளை விடயத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

சீன உரம் திருப்பி அனுப்பப்பட்ட அதேவேளையில் இந்தியாவிலிருந்து திரவ நைதரசன் உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. மெனோ நைதரசன் திரவ உரம் ஒரு சேதனப் பசளையா என்ற கேள்வி இங்கு எழுத்தான் செய்கிறது. இந்திய உரம் கப்பலில் வருகிறது, விமானத்தில் வருகிறது எனச் செய்திகள் வந்தபோதிலும் தற்சமயம் இரு விமானங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன சேதனப் பசளை நிறுத்தப்பட்டு இந்திய இரசாயனப் பசளை இறக்குமதி செய்யப்படுவது ஏதாவது உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பொதுவாகவே அண்மைக் காலமாக இலங்கையின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதாவது இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் என்பவற்றுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவிலிருந்து நைதரசன் பசளை இறக்குமதி செய்யப்படுவதும் இம்முயற்சியின் ஒரு பகுதியாகுமெனவும் சிலரால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 வீதப் பங்குகள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் எரிவாயு விநியோக உரிமையும் அமெரிக்காவுக்கே வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது. இதற்கு எதிராக எரிபொருள் மின்சக்தி அமைச்சர் உதயன் கம்மன்பில உட்பட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும் மின்சார சபைத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, பெற்றோலியம் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், துறைமுக அதிகார சபைத் தொழிலாளர் அமைப்புகள், நீர்வழங்கல் சபை தொழிலாளர்கள் எனப் பல தரப்பினரும் மேற்படி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் தனது திட்டத்திலிருந்து பின்வாங்கும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இன்னொரு புறம் திருமலை துறைமுகத்தின் எண்ணெய் குதங்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக அமெரிக்கப் போர்க் கப்பல்கள் திருமலைத் துறைமுகத்துக்கு வரவும், தரித்து நிற்கவும் வாய்ப்புகள் ஏற்படும். அண்மையில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போயுள்ளன. இதுபற்றி இலங்கைக்கான சீனத் தூதுவர் கருத்து வெளியிடுகையில் இலங்கை அணுவாயுதப் போருக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்படலாமென எச்சரித்துள்ளார்.

நாட்டில் உணவுப் பொருட்கள் உட்பட சகல அத்தியாவசியப் பொருட்களினதும் நிர்ணய விலைகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பொருட்களின் விலைகளை இறக்குமதியாளர்களும் உள்ளூர் வர்த்தக முதலைகளுமே தீர்மானிக்கும் நிலையில் பொருட்களின் விலைகள் படுமோசமாக அதிகரித்துள்ளன. எரிபொருள், எரிவாயு, சீனி, அரிசி போன்ற பொருட்களுக்குச் செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதும் அதையொட்டிவிலைகள் அதிகரிப்பும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மக்கள் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கடன்களை வழங்குவதுண்டு. அவற்றில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், அரச செலவினங்களைக் குறைத்தல் என்பனவாகும். அரச செலவினங்களைக் குறைத்தல் என்பதிலேயே ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க மறுத்தல், பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்கி முழுச்சுமையையும் மக்கள் மீது சுமத்துதலும் அடங்கும்.

இந்த நிலையில்தான் இலங்கை அமெரிக்கா உட்பட மேற்குலகை திருப்தி செய்யும் வகையில் மக்கள் எதிரிப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. சீனப் பசளையைத் தடை செய்ததும் அந்த நோக்கத்தின் ஒரு பகுதியா என்ற சந்தேகமும் உண்டு.

எப்படியிருப்பினும் அமெரிக்க இந்திய மற்றும் மேற்கு நாடுகளினதும் சீனாவினதும் போட்டிக் களமாக மாறிக் கொண்டுள்ள நிலையில் அதன் பகடைக்காய்களாக மக்களைப் பலி கொடுப்பதை ஆட்சியாளர்கள் கனகச்சிதமாகச் செய்து வருகின்றனர்.

ஆனால் இன்று மக்கள் மத்தியில் எழுந்துவரும் எதிர்ப்பலைகளுக்கும் எழுச்சிப் போராட்டங்களுக்கும் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பது உலக வரலாறாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

09.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்காபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE