Monday 29th of November 2021 06:27:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திக்க முனைகிறது? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திக்க முனைகிறது? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு நெருக்கடிமிக்கதொரு காலப்பகுதியை எதிர்நோக்கியுள்ளமை தெரிகிறது. இலங்கையை மிக நீண்டகால நட்பு நடாடாகவும் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் எதிர்கொள்வதற்கு சீனாவுடனான உறவை பலப்படுத்திய இலங்கை தற்போது இந்தியாவையும் மேற்கையும் நோக்கி நகர்வதாக விளங்குகின்றது. இச்சூழலில் இலங்கையை எதிர்கொள்ள சீனா அணுகுமுறை மாற்றங்களை செய்ய நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கையிலிருந்து வெளியாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இலங்கை-சீன உறவில் ஏற்பட்டு வரும் இந்திய போக்கையும் அதில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தேடுவதாகவும் இக்கட்டுரை அமையவுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சசெய்தியை உறுதிப்படுத்துவதற்கு முடியாத போதும் அவ்வாறான செய்திக்கான மறுப்பை சீனத்தூதரகம் வழங்காத நிலையில் அவ்வகை முயற்சிக்கான வாய்ப்புக்களை அவதானிப்பது அவசியமாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு தரப்பு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ள இச்சந்தர்ப்பத்தில் அச்செய்தி முக்கியமானதாகவும் அதிக அரசியல் உரையாடலை ஏற்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகிறது. அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரோடு 11.11.2021அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது. இதுபொறுத்து இரு பிரதான விடயங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் உரையாடப்பட்டு வருகிறது. ஒன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவையும் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் அதிகம் நம்பியிருப்பதாகவும் அந்நாடுகளுடனேயே அதிகம் நெருக்கமான உறவை பேணிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவகையில் தமிழ் மக்களின் அரசியல் வலதுசாரி மனநிலையோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அணுகுவதாகவும் அதற்கான முக்கியத்துவமே தமிழ் மக்களின் நெருக்கடிக்கு பின்னால் உள்ள பிரச்சினை என்றும் உரையாடப்பட்டது. அத்தகைய உரையாடல் ஏறக்குறைய சரியானதொன்றாகவே காணப்படுகிறது. இந்தியா உட்பட அமெரிக்கா மற்றும் மேற்கினை திருப்திப்படுத்தும் விதத்தில் சீனா மீதான எதிர்ப்புவாதத்தையும் நிராகரிப்பையும் தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள பெரும்பான்மை கட்சிகள் வெளிப்படுத்தி வந்தன. இதனை எதிர்கொள்ள தமிழ்த்தரப்பு அதனோடு சேர்ந்த தமிழ் மக்களின் மனோநிலையும் கட்டமைக்கப்பட்டிருந்தது. இரண்டு தென்னிலங்கை ஆட்சியாளர்களும் புலமையாளர்களும் தமிழ்த்தரப்போடு சீனா உரையாடுவதை ஒருபோதும் அங்கீகரிக்காத மனநிலையை கொண்டிருந்தது. காரணம் சீனா தமிழ்த்தரப்பு உரையாட ஆரம்பித்தல் தென்னிலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பாதிக்கப்படுவதோடு அரசியல்ரீதியாக சர்ச்சையான முடிவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென அச்சப்பட்டது. இவை எல்லாவற்றையும் கடந்து சீனா முள்ளவாய்க்கால் யுத்தத்தை கையாண்டமை ஏனைய நாடுகள் போன்று பங்கெடுத்தது மாத்திரமின்றி இலங்கை இராணுவத்துக்கான ஆயுத தளபாட உதவிகளை காலியில் இயங்கிய ஆயுதக்களஞ்சியத்தினூடாக தொடர்ச்சியாக பரிமாற்றிக்கொண்டிருந்தது என்றும் போரை வெற்றி கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியுமென்ற தூரநோக்கை கொண்டு செயற்பட்டதென அறிய முடிகிறது. அவ்வாறான சூழலில் சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உரையாடலுக்காக அணுக ஆரம்பித்துள்ளது. இக்கேள்விக்கான பதில் அதிகம் உரையாட வேண்டியது. முதலாவது, சீனாவின் உரக்கப்பல் இலங்கையின் விவசாய தரப்பினரால் நிராகரிக்கப்பட்டமை பலத்த நெருக்கடியை இலங்கை-சீன உறவில் ஆரம்பித்துள்ளது. உரக்கப்பலை பரிசோதித்தது மட்டுமன்றி அதற்கான அனுமதியை இரத்து செய்தமை சீன-இலங்கை உறவில் பெரும் பாதிப்பான அரசியலாக காணப்படுகிறது. சீனாவின் நியாயப்பாடுகள் வேறொரு விதத்தில் முதன்மைப்படுத்தப்பட்டாலும் சீன-இலங்கை உறவில் அத்தகைய நியாயப்படுத்தல்களை கடந்த முரண்பாட்டு வளர்ச்சி நிலை அதிகரித்து செல்கின்றது. ஆனால் கடந்த காலத்தில் குறிப்பாக மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் சீனா வழங்கிய கடனை இலங்கை மீள செலுத்த இயலாத நிலை ஒன்றின் போதே ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட கால குத்தகைக்கு சீனாவுக்கு கைமாற்றப்பட்டது. அத்தகையதொரு நிலையை மீள உருவாக்கவே சீனா முனைப்பு காட்டுகிறது. உரக்கப்பலின் இழப்பீடாக எட்டு பில்லியன் டொலர்களை கோரி இருப்பதன் மூலம் இலங்கை மீதான தனது செல்வாக்கை ஏதொவொரு அடிப்படையில் பேண திட்டமிடுவதை அவதானிக்கலாம். இத்தயை இவங்கையுடனான விரிசலை கையாள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை சந்திப்பதற்கான திட்டமிடலை சீனத்தூதரகம் வெளிப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.

இரண்டாவது, சீனா எப்போதும் இலங்கை அரசோடு நிலைத்திருக்கும் உறவு பற்றி அதிகம் சிந்தித்ததேயன்றி தமிழ்த்தரப்போடு நெருக்கமான உறவை கட்ட திட்டமிடவில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்களை கையாள்வதற்கும் நெருக்கடிக்கு தள்ளுவதற்கும் இலங்கை தீவில் உள்ள ஒரே உசிதமான பிரிவினராக தமிழர்கள் காணப்படுகின்றார்கள். இந்தியாவும் சரி, மேற்கும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்திக்கொண்டே தென்னிலங்கை தரப்பை கையாண்டு வருகிறன. இலங்கைத்தீவில் நிரந்தரமாக செல்வாக்கு செலுத்த வேண்டுமாயின் தமிழர்களையும் தமிழர்களின் அரசியல் தரப்புக்களையும் நலன்களுக்கு ஏற்ற வகையில் அணைத்துக்கொள்வது அவசியமாகும். அத்தகைய கோணத்தில் சீனா தமிழர்களுடனான உறவை முதன்மைப்படுத்த திட்டமிட வாய்ப்புண்டு.

மூன்றாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபுணர் குழு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள சூழலில் பென்டகன் இலங்கை தீவில் சீனா இராணுவத்தளங்களை அமைக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்மாதிரியாக பாகிஸ்தானிற்கு சீன நவீன போர்க்கப்பலையும் வழங்கியுள்ளது. இதனால் சீன எதிர்ப்பு எண்ணம் என்பது இந்திய அமெரிக்க தரப்புக்களுக்கு பூகோளரீதியிலும் பிராந்தியரீதியிலும் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையால் இலங்கையும் மாற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இத்தகைய நகர்வு சீனாவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்துகின்ற பொறியாக உருவெடுத்துள்ளது. காரணம் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடும் இந்தியாவோடும் தொடர்ச்சியாக புரிந்தணர்வை ஏற்படுத்தவதில் கரிசணை கொள்ள தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் விஜயம் இலங்கைக்கு ஏதொவொரு அடிப்படையில் ஆபத்தை உருவாக்கக்கூடியது. எனவே அதனை எதிர்கொள்ள இந்தியாவோடும் அமெரிக்காவோடும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அதிக நெருக்கத்தை வெளிப்படுத்த முயலுவார்கள் என்றும் அது சீனாவுக்கு ஆபத்தானதென்றும் சீனத்தரப்பு கருதுகிறது.

நான்காவது, சீனா சோசலிச நாடாகவும், ஆசியாவிற்கான மாக்ஸிசத்தை கட்டமைத்த நாடாகவும் மாவோ சேதுங் காலத்தில் கருதப்பட்டது. ஆனால் அதற்கு பின்வந்த சீன தலைமைகளும் அவற்றின் பொருளாதார மறுசீர்திருத்தங்களையும் அக்கொள்கையின் விரிவாக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும் தற்போது சீனாவொரு சோசலிச நாடென்று இரும்புத்திரை அரசியல்வாதிகள் உச்சரித்து வருகின்றார்கள். திபெத் தேசிய இனம் மீதான அவர்களது அணுகுமுறையும் உலகளாவிய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மீதான சீனாவின் பார்வையும் ஈழத்தமிழர் பொறுத்தான அரசியல் பிரச்சினையின் நோக்கு நிலையும் வேறுபட்டது. ஏறக்குறைய ஒடுக்கப்பட்டதொரு தேசிய இனத்தின் இருப்பை முற்றிலும் நிராகரிக்கும் அரசியல் ஒழுங்கில் சீனாவும் ஒரு பங்குதாரராக மாறி இருக்கிறது. அத்தகைய பங்குதாரார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரைச் சந்திக்க எடுக்கும் முயற்சியானது சீனாவின் நலன்கள் தென்னிலங்கையில் நிராகரிக்கப்படும்போது அதனை பாதுகாப்பதற்கான உத்தியோடு மட்டுமே நகர்த்தப்படுகிறது. தியமென் சதுக்க படுகொலையிலும் பல மடங்கு அதீத கொடுமையை இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய போது சீனாவும் அதனோர் பங்குதாரர் என்பது நிராகரித்து விட முடியாது.

எனவே, சீனாவும் மேற்கு ஏகாதிபத்தியம் போன்று தனது அணுகுமுறைகளையும் உத்திகளையும் சீனா பின்பற்ற முயலுகிறது. தென்னிலங்கை ஆட்சியோடு நெருக்கடி வருகின்ற போது அதிலிருந்து பாடங்களை கற்று எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான உரையாடலை முன்னிறுத்த திட்டமிடுகிறது. இத்தகைய திட்டமிடல் பேச்சளவிலேயே நின்று போகலாம். இது தென்னிலங்கை ஆட்சியாளர்களையும் தென்னிலங்கையில் உள்ள தீவிர தேசியவாதிகளையும் சீனாவின் பக்கம் திரும்பி பார்க்க வைக்கின்ற ஒரு நகர்வாகவே காணப்படுகின்றது. இத்தகைய அறிவிப்பு நிகழலாம். அல்லது நிகழாமல் போகலாம். ஆனால் இத்தகைய அறிவிப்பு ஓர் அரசியலாக புலப்படுகிறது. அதனூடாகவொரு அரசியல் மாற்றம் நிகழ்த்தப்படக்கூடியது இயல்பான விடயமாகவே விளங்குகின்றது. இதேநேரம் தமிழ்த்தேசிய சக்திகளின் அணுகுமுறையும் அதன் உத்திகளும் சரியாக வகுக்கப்பட வேண்டிய காலப்பகுதியை இச்சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகளை சமதூர இடைவெளியில் கையாள முயலுவார்களெனில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை இலகுபடுத்தலாம்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE