Monday 29th of November 2021 06:09:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல்? - 81!

எங்கே தொடங்கியது இனமோதல்? - 81!


இந்திய ஆக்கிரமிப்புக்கு மேடையமைத்த ஜே.ஆர்.ஜயவர்த்தன! - நா.யோகேந்திரநாதன்!

'முட்டாள்கள் கல்லைத் தூக்குவது சொந்தக் கால்களில் போட்டுக் கொள்வதற்காகவே என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. பிற்போக்குவாதிகளைப் பொறுத்தவரையில் கூட இப்பழமொழி பொருத்தமானதே. பிற்போக்குவாதிகள் தங்கள் சுரண்டலையும், மேலாதிக்கத்தையும் நிலை நிறுத்த மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய ஒடுக்குமுறைகள் அதிகரிக்கப்படும்போது, மக்கள் அத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இப்படியான நிலையிலேயே பிற்போக்குவாதிகளால் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளின் எதிர்வினை மாபெரும் சக்தியாக அணி திரண்டு பிற்போக்காளர்களுக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது'.

70 கோடி சீன மக்களை ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்தும், அமெரிக்க அடிவருடியாக சியாங்கை சேக் ஆட்சியிலிருந்தும் விடுவித்து ஒரு சுதந்திர சீன தேசத்தைக் கட்டியமைத்த சீனத் தலைவர் 'மா ஓ சேதுங்' அவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.

உலகத்திலுள்ள எல்லாப் பிற்போக்குவாதிகளையும் போன்றே இலங்கையிலும் அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு ஒரு வழியாகத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடுவதையும், தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதை செய்து சிறையிடுவதும் காணாமற் போகச் செய்வதையுமே தேர்வு செய்ததன் மூலம் அவரும் கல்லைத் தூக்குவது தன் சொந்தக் கால்களில் போடுவதற்கே என்பதற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை எழுந்தது.

1977ல் ஐ.தே.கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று அமோக வெற்றியுடன் ஆட்சிப் பீடமேறிய நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் பொலிஸார் ஏற்படுத்திய குழப்பத்தை அடுத்து யாழ்.நகரமே எரியூட்டப்பட்டமையும் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சில தமிழர்கள் கொல்லப்பட்டதும் இடம்பெற்றன. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் காலப்பகுதியில் நாச்சிமார் கோவில் தேர், கோவில் கடை வீதிகள், யாழ்.நகரம் என்பன எரியூட்டப்பட்டதுடன் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தென்னிலங்கைக்கும் பரவி ஏறக்குறைய ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமான சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டும், தீயிடப்பட்டும் அழிக்கப்பட்டன. தமிழ் மக்களின் அரிய புலமைச் சொத்தான 'யாழ். நூலகம்' எரித்துச் சாம்பல் மேடாக்கப்பட்டது.

1983ல் படையினர் வடபகுதியெங்கும் திரிந்து தமிழ் இளைஞர்களை வேட்டையாடியும், இளம் பெண்களைக் கடத்திச் சென்றும் தொடர் கொடுமைகள் இழைத்து வந்த நிலையில் தின்னைவேலியில் போராளிகள் படையினர் மேல் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக பெரும் இன அழிப்பு நாடு பரந்த ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 3,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், 90 கோடிக்கு அதிகமான தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டும், அழிக்கப்பட்டும் பேரழிவு ஏற்படுத்தப்பட்டது. வடக்கில் படையினர் கண்ணில்படும் இளைஞர்களைச் சுடுவது அல்லது கைது செய்து காலவரையறையின்றி தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.

ஒருசில போராளிகள் படையினர் மீது மேற்கொள்ளும் தற்காப்புத் தாக்குதலுக்குப் பதிலடியாக இச்சம்பவங்களில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களைக் கொல்வது, இளைஞர்களை வேட்டையாடுவது என்ற கொள்கையையே பின்பற்றினர். இதன் காரணமாக ஏதுவுமறியாத இளைஞர்கள்கூட தங்கள் வீடுகளில் தங்காமல் பனங் காணிகளுக்குள்ளும், பற்றைக் காடுகளுக்குள்ளும் தங்க வேண்டிய நிலை எழுந்தது.

1983 இன அழிப்புக் கலவரமும் அதன் பின்பு படையினர் மேற்கொண்ட கொடூரங்களும் தமிழ் இளைஞர்களை அடுத்த கட்டத்தை நோக்கிச் சிந்திக்கத் தூண்டின. படையினரை எதிர்த்துப் போராடுவதற்குத் தூண்டின. படையினரை எதிர்த்துப் போராடுவதைவிட வேறு வழியில்லை என்ற முடிவுக்கே அவர்கள் வரவேண்டியிருந்தது.

ஆயுத வன்முறைகள் மூலம் இன அழிப்பை மேற்கொள்வதே தமிழ் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி பெற்று வந்த உரிமை வேட்கை உணர்வை நசுக்க ஒரேவழி என ஜே.ஆர்.ஜயவர்த்தன முடிவு செய்த நிலையில் இளைஞர்கள் இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதானால் பதில் ஆயுத வன்முறையைவிட வேறு வழியில்லையென்ற முடிவுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதன் விளைவாக போராளிக்குழுக்களை நோக்கி இளைஞர்கள் ஆயிரமாயிரமாய் அணி திரளத் தொடங்கினர்.

அதேவேளையில் 1983 இன அழிப்பு காரணமாக 1 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி அகதிகளாகச் சென்றனர். போராளிக் குழுக்களும் தங்களுடன் இணைந்த இளைஞர்களை படகுகளில் அகதிகளுடன் அகதிகளாக அனுப்பி வைத்தனர்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன தமிழ் இளைஞர்களை வேட்டையாடுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியுமெனக் கனவு கண்டாரோ அதன் எதிர்வினையாக இளைஞர்கள் போராளிக் குழுக்களை நோக்கி அணி திரண்டு அவற்றைப் பலப்படுத்தினர்.

இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் எல்லாப் பிற்போக்குவாதிகளையும் போலவே தமிழர்களின் தலையில் போடத் தூக்கிய கல்லைத் தன் கால்களிலேயே போட்டுக் கொண்டார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒரு அமெரிக்க தாசர் என்பதுடன் உலக ஏகாதிபத்திய வலைப்பின்னலில் இலங்கையையும் பிணைத்துக் கொண்டவர். திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின்போது இலங்கை ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறியதுடன், அணிசேரா நாடுகள் அணிக்குத் தலைமை தாங்கி நடு நிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது.

1977ல் ஜே.ஆர்.ஆட்சிக்கு வந்ததும் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு நாடு கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகச் சுய ஆதாரத் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டுத் தங்கு நிலை பொருளாதாரக் கொள்கை அமுலுக்குக்கொண்டு வரப்பட்டது. அதன்படி சுதந்திர வர்த்தக வலயம் உருவாக்கப்பட்டு மேற்குலக முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. அதாவது இலங்கை அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு பொருளாதார வலைப்பின்னலில் இறுக்கப்பட்டது.

இதன் காரணமாக மேற்குலக இராஜதந்திர, இராணுவ உறவுகளும் இலங்கையுடன் வலிமை பெற ஆரம்பித்தன. அதன் ஒரு பகுதியாகத் திருகோணமலை எண்ணெய் குதத்தை அமெரிக்காவுக்குக் குத்தகைக்குவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விடயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதென இந்தியா கருதியது. எனவே இந்தியா அதை முறியடிக்கத் தருணம் பார்த்திருந்தது.

இது ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஜே.ஆர். தனது நெஞ்சிலேயே போடுவதற்கு தூக்கிய இரண்டாவது கல்லாகும்.

ஒருபுறம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜே.ஆரின் நரி விளையாட்டுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய உளவு நிறுவனமான 'றோ' மிகவும் தந்திரோபாயமாகக் காய்களை நகர்த்தத் தொடங்கியது.

பல்வேறு போராளிக் குழுக்களிலும் ஏராளமான இளைஞர்கள் இணைந்து கொண்ட நிலையில் பல தரப்பினருக்கு வௌ;வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு, சகல வசதிகளும் வழங்கப்பட்டு, ஆயுத உதவி, நிதி உதவி என்பனவும் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் மூலம் போர்ப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இவற்றில் புளட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புகளே பல முகாம்களைக் கொண்டனவாகவும் வலிமை பெற்றவையாகவும் வளர்ச்சி பெற்றன. விடுதலைப் புலிகளுக்கு ஆரம்பத்தில் பயிற்சிகள் வழங்கப்படாத போதிலும் பின்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

இதில் முக்கியமான விடயம் ஒவ்வொரு இயக்கங்களும் தனித்தனியாகப் பலப்படுத்தப்பட்டனவேயொழிய அனைத்தையும் ஒரே அணியில் சேர்த்துப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டத்துக்கான முனைப்புகள் இந்திய உளவு நிறுவனத்தால் உருவாக்கப்படுவதை ஜே.ஆர்.உணராமல் இல்லை. ஆனால் அவ்வாறு ஆயுதக் குழுக்கள் பலம் பெற்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற பேரில் அமெரிக்கா தனக்கு உதவுமென ஜே.ஆர். எதிர்பார்த்தார். அதில் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்தது. அமெரிக்க - இலங்கை உறவுகளும் அதற்கேற்ற வகையிலேயே கட்டியமைக்கப்பட்டன.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் மேற்குலக சார்புப் போக்கையும், இந்திய விரோதப் போக்கை யும் உணர்ந்து கொண்ட இந்திரா காந்தி அதற்கேற்ற வகையில் இலங்கையின் இனப் பிரச்சினையை லாவகமாகக் கையாள ஆரம்பித்தார்.

ஏற்கனவே ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் சகோதரர் எம்.டபிள்யூ.ஜயவர்த்த னவுடன் இந்தியத் தரப்பு மேற்கொண்ட பேச்சுகளின் அடிப்படையில் பிரதமர் இந்திரா காந்தி தனது விசேட ஆலோசகரான கே.பார்த்தசாரதியை இலங்கை அரசுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையே பேச்சுகளை ஏற்பாடு செய்ய நியமித்திருந்தார்.

எனவே கொழும்பில் வந்த பார்த்தசாரதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தரப்பினருடன் மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிரவாதப் பிரிவினர் எனக் கருதப்பட்ட காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரிடமும் பேச்சு நடத்தினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்கனவே தனி நாட்டுக் கோரிக்கை உருவாவதற்கான காரணிகள் சீர் செய்யப்படுமானால் தாம் தனி நாட்டுக் கோரிக்கையை மக்கள் ஆணையைப் பெற்றுக் கைவிடத் தயார் எனத் திருமதி இந்திரா காந்தியிடம் தெரிவித்திருந்தனர். அவ்வகையில் அவர்கள் பேச்சுகளில் கலந்து கொள்ளத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இலங்கை அரசாங்கத் தரப்பினர் மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த தயாராயிருப்பதாகவும் தெரிவித்தனர். அதேவேளை பார்த்தசாரதி கொல்வின் ஆர்.டி.சில்வா, பேர்ணாட் சொய்சா, பீற்றர் கெனமன் ஆகிய இடதுசாரித் தலைவர்களிடமும் பேச்சுகளை நடத்தினார். அவர்கள் நியாயபூர்வமான வகையில் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் எவ்வித சக்தியும் அற்றவர்களாகயிருந்தனர்.

ஜே.ஆர்.தரப்பினர் இந்தியப் பிரதிநிதியாக பார்த்தசாரதியுடன் பேச்சுகள் நடத்துவது பற்றியும், பேச்சுகளில் முன்வைக்கப்படவேண்டிய விஷயங்கள் பற்றியும் உரையாடல்களை நடத்திய அதேவேளையில் 'பேச்சுவார்த்தைகளுக்கு' எதிரான மனநிலையைச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

குறிப்பாக பார்த்தசாரதி ஒரு தமிழ் பிராமணர் எனவும் அவர் சிங்களவர்களுக்கு நியாயமாக நடக்கமாட்டாரெனவும் அமிர்தலிங்கம் ஒரு தேசத் துரோகி எனவும் அவரின் கோரிக்கைகள் நாட்டின் இறைமைக்கு ஆபத்தானவையெனவும் தென்னிலங்கையெங்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோர் மூலம் பேச்சுகள் இடம்பெறுவதற்கு எதிராகப் பெரும் பிரசார அலை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதுகூட ஜே.ஆர் தனது காலில் போடத் தூக்கிய மூன்றாவது கல்லாகும். ஜே.ஆர். நியாயபூர்வமான தீர்வு எதற்கும் தயாரற்றவர் என்பதை இந்திய 'றோ' அமைப்பு தன் கணக்கில் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்வதாயிருந்தது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE