Friday 29th of March 2024 02:34:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐரோப்பாவில் முதல் நாடாக திங்கள் முதல் மீண்டும் முழுமையாக முடக்கப்படுகிறது ஆஸ்திரியா!

ஐரோப்பாவில் முதல் நாடாக திங்கள் முதல் மீண்டும் முழுமையாக முடக்கப்படுகிறது ஆஸ்திரியா!


கொவிட் தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில் திங்கட்கிழமை முதல் மீண்டும் முழுமையான முடக்க நிலையை அமுல் செய்வதாக ஆஸ்திரியா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் மற்றொரு அலையைச் சமாளிக்க மீண்டும் முடக்க நிலையை அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடாக ஆஸ்திரியா விளங்குகிறது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு முடக்கத்தை அறிவித்து சில நாட்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக முடக்கும் அறிவிப்பை ஆஸ்திரியா வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை அமுலுக்கு வரும் முழு முடக்க நிலை அதிகபட்சம் 20 நாட்கள் நீடிக்கும் என ஆஸ்திரிய ஆட்சித் தலைவர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் அறிவித்தார். அத்துடன், 2022 பெப்ரவரி -01 முதல் நாடு முழுவதும் கட்டாய தடுப்பூசி சட்டபூா்வமானதாக ஆக்கப்படும் எனவும் அவா் கூறினார்.

ஆஸ்திரியாவின் ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களையும் நாட்டின் மேற்கில் உள்ள ஓய்வு விடுதியில் நேற்று சந்தித்துப் பேசிய பின்னர் முடக்க நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்ட அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க், ஐந்தாவது அலை நெருக்கடியைத் தவிர்க்க முடக்க நிலை தவிர்க்க முடியாதது என கூறினார்.

இதேவேளை, ஐரோப்பா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் அங்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.

ஜேர்மனியில் தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் நாடு நான்காவது அலையின் மோசமான பிடியில் சிக்கியுள்ளதாக ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெல்ஜியத்திலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன என பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில்12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுவதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.

நெதர்லாந்திலும் இதுவரை இல்லாதளவு தொற்று நோயாளர்கள் அதிகளவு பதிவான நிலையில் அங்கு பகுதி அளவிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் தொற்று நோய் அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கச்சேரிகள் மற்றும் பிற உட்புற நிகழ்வுகளில் பங்கேற்போருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகிறது.

செக் குடியரசில் கொவிட் 19 தடுப்பூசி பெறாத எவரும் பொது நிகழ்வுகள் அல்லது சேவைகளை அணுக தடை விதிக்கப்படும் என செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியாவிலும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இங்கு பணியிடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிக நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் பணியில் இருக்க தடை விதிக்கப்படும் என பிரதமர் எட்வார்ட் ஹெகர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அண்மைய சில நாட்களாக 20,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டலின் உறுதி செய்தார்.

இந்நிலையில் பிரான்ஸிலும் விரைவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE