Monday 29th of November 2021 05:53:09 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல்? - 82!

எங்கே தொடங்கியது இனமோதல்? - 82!


இந்திராவின் இரு வழிப்பாதையும் ஜே.ஆரின் மூவழிப் பாதையும்! - நா.யோகேந்திரநாதன்!

'ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் இந்திய மத்தியஸ்த உதவியுடன் எங்களுடன் பேசமறுக்குமானால் அவர்கள் ஆயுதப் போராளிகளோடுதான் பேச வேண்டிவரும். அவர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும்கூட அந்தத் தீர்வு விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாக அமையவேண்டும்'.

இது 1983 அக்டோபர் மாதம் இந்தியாவிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.

ஏற்கனவே களத்தில் ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப்., விடுதலைப் புலிகள் என நான்கு இயக்கங்களும் பலம் பெற்றவையாக இருந்தபோதிலும் அமிர்தலிங்கம் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டும் சுட்டிக் காட்டினார் என்ற கேள்வி எழலாம்.

அதில் முக்கியமான விடயமென்னவெனில் ஏனைய மூன்று இயக்கங்களும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் எவ்வித பலம் வாய்ந்த சக்திகள் அழுத்தம் கொடுத்தபோதும், அவர்கள் தமது இலட்சியங்களுடன் உடன்படாத எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் எந்த ஏமாற்றுகளுக்கும் இடமளிக்காது தமது போராட்டங்களைத் தொடர்வார்கள் என்பதை அமிர்தலிங்கம் நன்கறிந்திருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேச்சுகளை நடத்த கொழும்பு சென்று திரும்பிய பிரதமர் இந்திராவின் சிறப்புப் பிரதிநிதியான பார்த்தசாரதி ஓரளவு ஏமாற்றத்துடனேயே திரும்பினார் என்றே கூறவேண்டும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்தி அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் தீர்வுகளுக்குச் செல்லத் தனது அமைச்சரவை தயாரில்லை என்று தெரிவித்து விட்டார். அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாதவரை அவர்களுடன் பேச முடியாதென அமைச்சரவைத் தீர்மானம் உள்ளதாகவும் தெரிவித்து விட்டார்.

அதேவேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1977 தேர்தலின்போது தனிநாட்டுக் கோரிக்கைக்கு மக்கள் ஆணையைப் பெற்றிருந்தனர். எனவே தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கவேண்டி உருவான காரணங்கள் இல்லாமற் செய்யப்பட்டாலே தனிநாட்டுக் கோரிக்கையைத் தற்காலிகமாகக் கைவிடமுடியுமென திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தெரிவித்து விட்டார்.

இரு தரப்பினரும் இரு துருவங்களாக முரண்பட்டு நின்ற நிலையில் பார்த்தசாரதி ஒரு மூன்றாவது வழியைத் தேட வேண்டியிருந்தது.

இந்திரா காந்தி இரட்டை வழிப்பாதை மூலம் ஜே.ஆரை வழிக்குக் கொண்டு வரமுயற்சித்தார். ஒன்று – அரசியல் ரீதியான ராஜதந்திரங்கள் மூலம் ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவது. மற்றது – ஆயுதக் குழுக்களைப் பலப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்து ஜே.ஆரின் போக்கில் தளர்வை ஏற்படுத்துவது.

இந்திரா காந்தி இவ்வாறு இரட்டை அணுகுமுறையைக் கையாண்ட நிலையில் ஜே.ஆர். ஜயவர்த்தனவோ மூன்று வழிப் பாதையைக் கையிலெடுத்து முகம் கொடுக்கத் தயாரானார்.

முதலாவது – பேச்சுவார்த்தை தொடக்கப் போவதாகவும் தொடக்கியும் காலத்தை இழுத்தடித்து அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி இராணுவ ரீதியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளல், அவ்வகையில் ஜே.ஆர். அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இராணுவ உதவியைக் கோரியிருந்தார். மேலும் தனது மகன் ரவி ஜயவர்த்தனவை இஸ்ரேலுக்கு அனுப்பி, இஸ்ரேலுடனான இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் இறங்கினார்.

இரண்டாவது – தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிதவாதத் தலைமைகளை பலமிழக்கச் செய்வதன் மூலம் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ஜனநாயக வழிகளைப் பலவீனப்படுத்தல், பிரிவினைவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் நாடாளுமன்றப் பதவிகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது – தமிழ் இளைஞர் குழுக்களைப் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி, மேற்கு நாடுகளின் உதவியுடன் அவர்களைத் தோற்கடித்து, தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்தல்.

ஜே.ஆரின் இத்தகைய நடவடிக்கைகளின் குறுகிய கால, நீண்ட கால இலக்குகளின் ஆபத்தை இந்திரா காந்தி நன்குணர்ந்திருந்தார். எனவே அவர் துரிதமாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார்.

அதேவேளையில் இந்தியாவை எச்சரிக்கையடையவும், சினம் கொள்ள வைப்பதுமான ஒரு முக்கிய நடவடிக்கையை ஜே.ஆர். மேற்கொண்டிருந்தார்.

1983 ஒக்டோபர் 4ம் திகதி அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் கஸ்பர் வொய்ஸ்பேக் ஒரு குறுகிய நேரவிஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். அதேவேளையில் 1983 ஒக்டோபரில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் ஒலிபரப்பு நிலையத்தை நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இது இந்தியா, சீனாவின் ஒரு பகுதி உட்பட தெற்காசிய நாடுகளின் தொலைத் தொடர்புகளைக் கண்காணிக்கும் வகையிலும் குழப்பும் வகையிலும் சக்தியுள்ளதாக அமைந்திருந்தது.

1983 ஒக்டோபர் இறுதிப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவராக ஜே.ஆரின் அழைப்பின் பேரில் ஜெனரல் வோல்டேஸ் இலங்கை விஜயத்தை மேற்கொண்டார்.

ஜே.ஆர்.அவரிடம் அமெரிக்காவின் ஆதரவைக் கோரியபோது அவர் இந்தியாவின் துணையோடு தமிழர் தரப்புடன் பேச்சுகளை முன்னெடுக்கும்படி ஆலோசனை வழங்கினார். அமெரிக்கா இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டால் இந்தியாவைக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக அமையும் எனவும், அது படை நடவடிக்கையாகவும் அமையக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்து ஜே.ஆருக்கு அதிருப்தியளித்தாலும் கூட அவர் வோல்டேஸ் மூலம் இஸ்ரேலுடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தல், அமெரிக்க, இஸ்ரேல், பாகிஸ்தான் உளவுத் துறைகளின் பங்களிப்பு போன்ற பல விடயங்களுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்து கொண்டார்.

இவ்வாறு ஜே.ஆர்.ஜயவர்த்தன அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதன் மூலமும் அமெரிக்க நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலமும் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

அவ்வகையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன பார்த்தசாரதியின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான முயற்சிகள் தொடர்பாக அலட்சியப் போக்கையே கடைப்பிடித்தார்.

எனவே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மூலம் ஜே.ஆருக்கு மீண்டும் பேச்சு முயற்சிகளை ஆரம்பிக்கும்படி இந்தியா அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. மேலும் ஐ.தே.கட்சி அரசாங்கத்தின் அமைச்சரான தொண்டமான் இந்தியா சென்று இந்திரா காந்தியைச் சந்தித்தபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுகளை ஆரம்பிக்கும்படி அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில் 1983 நவம்பர் 29ம் திகதி பொது நலவாய தலைவர்கள் மாநாடு டில்லியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியா சென்றிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவை தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் பார்த்தசாரதி சந்தித்தார். இதில் தொண்டமான், நீலன் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின்போது பார்த்தசாரதி தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக உள்ளதாகவும் அதற்கு மாற்றகப் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாகவும் பார்த்தசாரதி தெரிவித்தார். உடனடியாகப் பதிலளித்த ஜே.ஆர். அடுத்த நாள் காலையில் தான் பிராந்திய சபை அமைப்பை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். பார்த்தசாரதி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஐ.தே.கட்சி அரசாங்கம் பேசவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஜே.ஆர். அது தொடர்பாக சர்வகட்சி மாநாட்டில் முடிவெடுப்பதாகத் தெரிவித்துவிட்டார்.

அவ்வகையில் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவென பார்த்தசாரதி அவர்களால் அனெக்ஸ் 'சி' என ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இது 1983 டிசெம்பர் 31ம் திகதி ஆரம்பமான சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் இணைப்பு 'சி என்ற பேரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது சர்வகட்சி மாநாடு எனக் கூறப்பட்டபோதிலும் இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜே.வி.பி. நவசமசமாஜக் கட்சி என்பன அழைக்கப்படவில்லை. அதாவது இனப்பிரச்சினை தொடர்பாக நியாயபூர்வமான தீர்வு ஆலோசனைகளை முன் வைக்கக்கூடிய குரல்கள் தவிர்க்கப்பட்டன.

ஜே.ஆர்.ஜயவர்த்தன புதுடில்லியை விட்டு இலங்கை புறப்படுவதற்கு முதல்நாள் மாலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்திருந்தார்.

அதன்போது இந்திரா காந்தி வடக்குக் கிழக்கு இணைக்கப்படாத எந்தவொரு தீர்வுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைத் தற்காலிகமாகக் கைவிடச் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதையும் ஜே.ஆரிடம் தெரிவித்தார்.

அதற்கு ஜே.ஆர்.கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சம அளவில் வாழ்வதால் கிழக்கு வடக்குடன் இணைக்கப்படுவதை அம்மக்கள் விரும்பமாட்டார்கள் எனத் தெரிவித்துத் தன் மறுப்பை வெளியிட்டார் ஜே.ஆர்.ஜயவர்த்தன.

ஆனால் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதைச் சுட்டிக்காட்டிய இந்திரா மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தினார்.

இறுதியில் ஜே.ஆர். அது தொடர்பாகத் தான் முடிவெடுக்க முடியாதெனவும் சர்வகட்சி மாநாட்டில் அது தொடர்பாக முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதில்லையென அமைச்சரவை முடிவெடுத்திருந்தபடியால் சர்வகட்சி மாநாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அழைக்கப்படவில்லை. அதேபோன்று ஏற்கனவே ஜே.வி.பி.யும் நவசமசமாஜக் கட்சி மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

இவ்வாறு பேச்சுவார்த்தைகளை இழுத்துப்பறித்து காலங்கடத்திக் கொண்டிருந்த அதேவேளையில் ஜே.ஆர். மறுபுறத்தில் அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் பிரதிநிதியான லெப். கேணல்வேமன் வோல்டேஸ் அவர்களுடன் நடத்திய பேச்சுகளில் திருமலை எண்ணெய் குதங்களை அமெரிக்காவுக்கு 30 வருடக் குத்தகைக்கு வழங்கவும் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் திருமலைக்கு வந்து போகவும் உடன்பாடு காணப்பட்டது. மேலும் வாய்ஸ் ஒவ் அமெரிக்க ஒலிபரப்பு நிலையம் தொடர்பான ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சர்வகட்சி மாநாடு மூலம் பேச்சுகளில் கலந்து கொள்ளத் தயாராயிருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாகப் போராளிக் குழுக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழும்பியது.

அவர்கள் பேச்சுவார்த்தை என்பது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் கொண்டதல்ல எனவும் ஜே.ஆர். தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்தும் நோக்கத்துக்கான கால அவகாசம் எனவும் கூறித் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எப்படியிருந்தபோதிலும் இந்திரா காந்தியின் இரு வழிப் பாதையை முறியடிப்பதில் ஜே.ஆர். தனது மூவழிப்பாதையைக் கனகச்சிதமாக நகர்த்தி வந்தார். அதேவேளையில் இந்திய உளவு நிறுவனமான றோவும் போராளி அமைப்புகளை மேலும் மேலும் பலப்படுத்துவதன் மூலம் ஜே.ஆரின் திட்டங்களை முறியடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE