Thursday 28th of March 2024 10:38:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
கல்லடி பாலத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு முயற்சி; மட்டு மாநகர முதல்வரால் முறியடிப்பு!

கல்லடி பாலத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு முயற்சி; மட்டு மாநகர முதல்வரால் முறியடிப்பு!


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதி யை அபகரிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாநகர முதல்வரினால் இன்று முறிடியக்கப்பட்டுள்ளதுடன் அபகரிப்புக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியை தொடர்ச்சியாக அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்துதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தினை வாவியில் கொண்டுசேர்க்கும் பகுதியாக குறித்த வடிச்சல் பகுதி காணப்படுகின்றது.

நீண்டகாலமாக குறித்த பகுதியை சிலர் அபகரிக்கும் நோக்குடன் வேலி அடைக்க முற்படும் நிலையில் அவற்றினை தடுக்கும் செயற்பாடுகளை பிரதேச மக்களும் மாநகரசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துவருகின்றது.

இன்று சிலர் குறித்த வடிச்சல் பகுதியை வேலியிட்டு அடைக்கமுற்பட்டபோது அங்கு சென்ற மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தினார்.

குறித்த பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் குறித்த பகுதியில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் வேலியடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியானது அரசகாணியாகவும் வடிச்சல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் போலியான ஆவனங்களைக்கொண்டுவந்து பொலிஸாரின் ஆதரவுடன் குறித்த பகுதியை அபகரிக்க முனைவதாக மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

ஐந்தாவது தடவையாக இவ்வாறான போலி ஆவணங்களைக்கொண்டுவந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கு முன்னர் காணி அடைக்கும்போது அதனை தடுத்த பொதுமக்கள் நான்கு பேருக்கு எதிராக குறித்த நபர்களினால் பொலிஸில் முறைப்பாடுசெய்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களுக்கு இந்த காணிக்குள் செல்லக்கூடாது என தடைவிதித்துள்ளனர். காணிவிடயங்களில் தலையிடுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை. அரசகாணியை அபகரிப்பவர்கள் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் சென்றுவரவேண்டும். அவ்வாறில்லாமல் இவ்வாறு சட்டவிரோத காணி அபகரிப்பினை முன்னெடுப்பவர்கள் பொலிஸாரின் துணையுடன் வருவது இலங்கையின் சட்டத்தினை மதிக்கும் செயற்பாடு இல்லை. அரசகாணிகளை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் சட்ட விரோத ஆபகரணங்களைக்கொண்டு காணிகளை அபகரிப்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது கவலைக்குரியது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடைவிதித்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவேண்டும்.

எதிர்வரும் காலத்தில் குறித்த பகுதியில் மாநகரசபையினால் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாதுகாக்கவுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE