Tuesday 23rd of April 2024 12:08:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
பாராளுமன்றத்தில் மொட்டு - சு.க. கருத்து மோதல்; எமது தாக்குதல் வேறு மாதிரி இருக்குமென மைத்திரி பதிலடி!

பாராளுமன்றத்தில் மொட்டு - சு.க. கருத்து மோதல்; எமது தாக்குதல் வேறு மாதிரி இருக்குமென மைத்திரி பதிலடி!


நேற்றைய பாராளுமன்ற அமர்வில் பெரமுன - சுதந்திரக் கட்சியினரிடையே கடும் கருத்து மோதல் இடம்பெற்ற நிலையில் எமது தாக்குதல் வேறு மாதிரி இருக்கும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பதலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒதுக்கீடுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி பதிலளித்ததுடன், நேற்று சபையில் வாதப்பிரதிவாதம் சூடுபிடித்தது.

கடந்த 23ஆம் திகதி பாதீட்டின், குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டபோது, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வருடத்தில் 3.07 பில்லியன் ரூபாவை செலவு செய்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது வருடத்தில் 1.3 பில்லியனை செலவு செய்தார்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவருக்காக ஒதுக்கிடப்பட்ட நிதியில், 1.7 பில்லியன் ரூபாவை நாட்டு மக்களுக்காக அவர் மீதப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி 200 வாகனங்களைப் பயன்படுத்தியபோதிலும், தற்போதைய ஜனாதிபதி, 10 வாகனங்களையே பயன்படுத்துகிறார் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது, கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது இது முதற்தடவையல்ல என்று கூறினார்.

ஒன்று, இரண்டு அல்லது மூன்று தடவைகளில் கூறி இதனை நிறுத்துவதாக இருந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியும்.

எனினும், இந்த அரசாங்கத்தின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும், பிரதான கட்சி ஒன்றின் தலைவருக்கு சேறுபூசும் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது.

மஹிந்தானந்த அளுத்கமகே, மயிலைப்போன்று தோகையை விரித்து ஆடுகின்றார்.

அவர் தற்போது குழிதோண்டும் செயல்களில் ஈடுபடுகின்றார்.

முடிந்தால் மேலும் சில குழிகளைத் தோண்டுமாறு நான் மீண்டும் சவால் விடுக்கிறேன்.

குழியைத் தோண்டு பட்சத்தில் துர்நாற்றம் வீசும்.

சேறுபூச வேண்டுமானால், சேறுபூசுங்கள்.

ஆனால் கட்சியின் தலைவருக்கு சேறுபூசி இந்த செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்தால், இது பாரியதொரு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் என தயாசிறி ஜயசேகர தமது வாதத்தை நிறைவுசெய்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குழிகளைத் தோண்டினால் துர்நாற்றம் வீசும் என்பது யாவரும் அறிந்ததே என குறிப்பிட்டார்.

அர்ஜுன் அலோசியஸின் காசோலை முதல் அனைத்து விடயங்களும் வெளிவரும்.

அதன் காரணமாக நான் குழிகள் தொடர்பில் பேசப்போவதில்லை.

அண்மைய நாடாளுமன்ற உரையின்போது, கடந்த ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் ஒதுக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தேன்.

அதில், தற்போதைய ஜனாதிபதி நாட்டுக்கு எடுத்துக்காட்டியுள்ள முன்னுதாரணங்களையே சுட்டிக்காட்டி இருந்தேன்.

அதனை வெளிப்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் தங்களுக்கு உள்ளது.

நாட்டு மக்களுக்காக பணத்தை சேமித்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் தங்களுக்கு உள்ளது.

நான் அதனையே தெளிவுபடுத்தியுள்ளேன்.

தனிப்பட்ட ரீதியாக எவருக்கும் சேறுபூசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

வெளியே சென்று நாங்கள் வீரர்களாக காட்டிக்கொள்வதில்லை.

சேறுபூச வேண்டுமாயின், அதனையும் செய்ய நாங்கள் தயார்.

அதனை நன்றாக தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

தனிப்பட்ட பிரச்சினைக்கு செல்ல எந்தவித அவசியமும் இல்லை.

மோதலில் ஈடுபட எந்தவித அவசியமும் இல்லை.

எனினும், எங்களைத் தாக்கினால் நாங்களும் தாக்குவதற்குத் தயார்.

இருந்தாலும் பரவாயில்லை, இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

விவசாய அமைச்சர் என்ற ரீதியில், எந்தவொரு விவாதத்திற்கு வருமாறும் நான் சவால் விடுத்துள்ளேன்.

அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் இந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றேன் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,

நாங்கள் தாக்கினாலும், தாக்கமாட்டோம்;.

தாக்கினால் பாவம் பார்ப்போம்.

தாக்கிக்கொள்ளும் மனிதர்கள் அல்ல நாங்கள்.

தாக்கினால், அவர் கூறும் வகையில் தாக்க நாங்கள் தயாரில்லை.

வேறு விதத்தில் தாக்குதல் நடத்துவோம்.

ஜனாதிபதியின் ஒதுக்கம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார்.

அது தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

அந்த ஒதுக்கத்தையும், என்னுடைய கால ஒதுக்கத்தையும் ஒப்பிடுவதானது, நான் தேவையற்ற செலவுகளை மேற்கொண்டிருந்ததை காண்பிப்பதற்காகவேயாகும்.

கண்ணாடி வீடுகளில் இருந்து கல் எறிய எனக்கு விருப்பமில்லை.

நான், எனக்கு முன்னர் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செலவிட்ட செலவுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தேன்.

வாகனங்கள் பயன்படுத்தியமை, பயணங்கள் சென்றமை, விமானங்களைப் பயன்படுத்தியமை, உலங்குவானூர்தி பயன்படுத்தியமை போன்றவற்றிக்கு முன்னுதாரணமாக 2015 முதல் செயற்பட்டிருந்தேன்.

மோதிக்கொள்ளச் சென்றால், எந்த வகையில் காயம் ஏற்படும் என்பது பிரச்சினைக்குரியதாகும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் காரணமாகவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதை தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.

எனவே, மோதிக்கொண்டு அடுத்துவரும் பிரதிபலனை கடந்த கால அரசாங்கங்கள் 50, 60 வருடங்களுக்கு முன்னர் நிரூபித்துள்ளன.

இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கமாகும்.

எங்களுக்கும் வேகமாக கருத்து தெரிவிக்க முடியும்.

நாங்கள் தாக்குதல் நடத்துவதில்லை.

நாங்கள் சாதுரியமானவர்கள்.

வாகன பயன்பாடு தொடர்பில், தலைவருக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை ஏன் நாடாளுமன்றில் தெரிவித்தீர்கள் என துமிந்த திஸாநாயக்க நேற்று மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்தபோது கேட்டுள்ளார்.

தலைவரை தூக்கிவிடுவதற்காக ஏதாவது கூறவேண்டாமா என மஹிந்தானந்த கூறியுள்ளார்.

தலைவரை தூக்கிவைத்தால் பரவாயில்லை.

எங்களுக்கு சேறுபூச வேண்டாம்.

எங்கள் மீது தாக்குதல் நடத்தாது, தலைவரை தூக்கிவிட்டால் பரவாயில்லை.

நாங்களும் அந்த தலைவரின் அரசாங்கத்துக்குள்ளேயே அங்கம் வகிக்கின்றோம்.

எனவே, அரசாங்கத்துக்குள் பிரச்சினையை தோற்றுவித்துக்கொள்ளாது இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவும்.

இந்த மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதிக்கு பொய் கூறினார்.

அமைச்சரவைக்கு பொய் கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு பொய் கூறினார்.

மக்களுக்கு பொய் கூறினார்.

நுகர்வோருக்கு பொய் கூறினார்.

விவசாயிகளுக்கு பொய் கூறினார்.

இதன் காரணமாகவே விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து, அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளானது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் பாரியளவில் அதிருப்திக்கு உள்ளானமைக்கு பிரதான காரணம், உங்களுடைய செயற்பாடு மற்றும் நடத்தையுமாகும்.

இதன் காரணமாக, உங்களது உருவப்பொம்மை எரித்தல் உள்ளிட்ட செய்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

உங்களது உருவப் பொம்மையை நீங்களே எரித்துக்கொள்ள காரணமானீர்கள்.

அரசாங்கம் என்ற ரீதியில் செயற்பட வேண்டுமானால், சகோதரத்துவத்துடன், செயற்பட வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு எனது வாதத்தை நிறைவுசெய்து கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.இதையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

துமிந்த திஸாநாயக்கவுடனட தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு உரையாடினேன்.

அது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என அவர் கூறியிருந்தார்.

அதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி சோடிக்கப்பட்ட பொய் ஒன்றை கூறியமை நன்றாக புலப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, மஹிந்தானந்த அளுத்கமகேவினால் இந்த சகல அதிருப்திகளும் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

நான் அரசாங்கத்தின் கொள்கைகளை மாத்திரமே செயற்படுத்தினேன்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலும் பல கருத்துக்களை வெளியிட முடியும்.

வேண்டுமென்றால் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிட தயாராக உள்ளேன் என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: மைத்திரிபால சிறிசேன, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE