Tuesday 23rd of April 2024 02:34:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
52929 பேரையும் ஒரே தடவையில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்!

52929 பேரையும் ஒரே தடவையில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்!


அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 2020ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள 52929 பேரையும் ஒரே தடவையில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் மத்தியகுழு உறுப்பினருமான தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பாதீடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பாதீட்டு வாசிப்பின் முதல் நாளே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்காக 7600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் தினேஸ் குணவர்த்தன அமைச்சர் அவர்கள் ஜனவரி முதலாம் திகதியலிருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு ஆட்சேர்ப்பு நியமனம் 2020.02.27ம் திகதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அந்த நியமனங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, தேர்லும் இடம்பெற்றது. அதன் பின்னர் மீளவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டே செப்டெம்பர் 02ம் திகதி 43616 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதிலும் 10000க்கும் மேற்பட்டவர்களுக்கு அநியாயம் இடம்பெற்றது. அதற்கும் கொழும்பு சென்று ஆர்ப்பாட்டங்கள் செய்தே அதில் 8076 பேருக்கு இரண்டாம் கட்டமாக 2021.02.01ம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இன்னும் 934 பேருக்கு மார்ச் 22 நியமனம் வழங்கப்பட்டது.

எனவே தற்போது மூன்று கட்டங்களாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் 465 பேருக்கு நியமனம் வழங்கப்படாமல் இருக்கின்றது. அதற்கும் நாம் போராட வேண்டி இருக்கின்றது.

எமக்கு தற்போது இருக்கும் பிரச்சனை, நாங்கள் 2020 செம்டெம்பர் 02ம் திகதி நியமனம் பெற்று தற்போது ஒரு வருடம் இரண்டு மாதங்கள் இரண்டு வாரங்கள் பயிற்சி அடிப்படையில் இருக்கின்றோம். நிதி அமைச்சர், அமைச்சரவை என்பன யாருக்கும் சொல்லாத விடயம் செம்டெம்பர் தொடக்கம் ஜனவரி வரையான மூன்று மாத காலங்கள் எமது சேவைக் காலத்தில் இழக்கச் செய்யப்பட்டிருக்கின்றது. எங்களது சம்பளத்தில் பார்த்தால் 60000 ரூபாவாக இருந்தாலும் சம்பளத்தை விடுத்து எங்கள் சேவைக்காலம் மூன்று மாதங்கள் இழக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது. அதற்கு எங்களுக்குப் பதில் தேவை.

மற்றைய காரணம் தான் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நிரந்தரமாக்குவது என்று சொன்னால் அது முதலாந் திகதியாக இருக்க முடியும், 31ம் திகதியாகவும் இருக்க முடியும், பெப்ரவரி மாதமாகவும் ஆக முடியும். குறைந்த பட்சம் ஜனவரி முதலாம் திகதி நிரந்தரமாக்கப்படும் என்றாவது கூற வேண்டும். நிதி அமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் என்று தான் சொல்லுகின்றார்கள். முதலாம் திகதி தொடக்கம் என்று சொல்வது எதற்கு என்று நாங்கள் கேட்க விரும்புகின்றோம். இவ்வாறு நம்பிக்கையற்ற கதை எதற்கு?

அத்துடன் இங்கு மூன்று கட்டங்களாக நியமனம் வழங்கப்பட்ட குழுவினர் இருக்கின்றார்கள். அந்த மூன்று கட்டங்களிலும் 52929 பேர் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனை தொடர்பில் நாங்கள் அமைச்சகத்தில் கதைக்கும் போது எங்களது ஆறு மாதங்கள் இழக்கப்பட்டது. இந்த ஆறுமாத காலங்கள் நிரந்தரமாக்கலின் போது கணக்கில் எடுக்கப்பட மாட்டது என்று உறுதியளிக்கப்பட்டது. நியமனம் வழங்கப்பட்டது பிரச்சனை இல்லை. அனைவரையும் ஒன்றாகவே நிரந்தரமாக்குவோம் என்றும் உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது மூன்று குழுக்களாகவே நிரந்தரமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழிக்கு என்ன நடந்தது? அது குப்பைக்குச் செல்லுகின்றதா?

இதனால் நாங்கள் இது தொடர்பில் அமைச்சரவையின் உபகுழுவிற்கு நொவம்பர் 09ம் திகதி கடிதமொன்று பாரம் கொடுத்துள்ளோம். அதன் பிரதிகள் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வழங்குகின்றோம். தற்போது நாங்கள் வடக்கு கிழக்கு பகுதி மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து இது தொடர்பிலான கடித பிரதிகளை வழங்கி வருகின்றோம். அத்துடன் எமது உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.

இதன் மூலம் எமக்கு பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது தொடர்பில் நாங்கள் ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ள நொவம்பர் 29ம் திகதி கொழும்பு செல்லவுள்ளோம். அத்துடன் ஆசிரியர் நியமனம் தொடர்பிலும் பாரிய பிரச்சனைகள் இடம்பெறுகின்றது. தற்போது வயதெல்லைப் பிரச்சனை மீண்டும் வந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்கும் நாங்கள் கல்வி அமைச்சிற்குச் செல்லவுள்ளோம்.

இத்தகைய விடயங்களை நாங்கள் கதைத்துத் தீர்வு காண வேண்டும். அதனால் தான் அனைத்து தரப்பினருக்கும் எழுத்து மூலம் நாங்கள் அறிவித்து முடித்துள்ளோம். இதற்கு நியாயமான பதில் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் போராட்டங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும்.

மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீண்டும் இவர்கள் பிரச்சனைக்கு உட்படுத்தி இருக்கின்றாhர்கள். குறைந்த பட்சம் ஜனாதபதி, பிரதமர் இந்த விடயத்தில் முன்வந்து நிரந்தரமாக்கல் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும்.

எனவே அமைச்சரவை உபகுழு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவரும் இந்த நிரந்தரமாக்கல் விதிமுறைகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்துங்கள். எங்களுக்கும் ஆலோசனைகளை வழங்க இடமளியுங்கள். இடமளித்து நியமனம் வழங்கிய 52929 பேரையும் ஒரே தடவையில் மிக விரைவில் நிரந்தரமாக்குங்கள் என்று தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE