Friday 19th of April 2024 05:21:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருமைப்பாடற்ற வெளிநாடுகளுடனான உறவு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருமைப்பாடற்ற வெளிநாடுகளுடனான உறவு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


ஈழத்தமிழருடைய அரசியலில் அதிக நெருக்கடியும் தீர்வுக்கான வாய்ப்புக்களும் கொண்ட காலப்பகுதியாக சமகாலம் அமைந்துள்ளது. இலங்கை பரப்புடன் புலம்பெயர்ந்த தளத்திலும் மாறிவருகின்ற அல்லது குழப்பமடைந்துள்ள உலக ஒழுங்கில் ஈழத்தமிழருக்கான அதிக வாய்ப்புக்களுக்கான சூழல் உருவாகியுள்ளது.

சீன-இலங்கை உறவு இந்தியாவுக்கு மட்டுமன்றி குவாட் நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அதிக நெருக்கடிமிக்க விடயமாக விளங்குகின்றது. எனவே இச்சூழல் ஈழத்தமிழர்களின் அரசியல் பக்கத்தை நோக்கிய அசைவுகளை பிராந்திய சர்வதேச அரசுகள் நகர்த்த தொடங்கியுள்ளன.

இதனை சரியாக பயன்படுத்த வேண்டிய களத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றனர். ஆனால் அத்தகைய தரப்புக்கள் மீளவும் தனித்து இயங்குவதும் மேலாதிக்கத்தை பேண முயல்வதும் தமக்கிடையிலான போட்டியை முன்னிறுத்துவதும் என்ற கோணத்தில் இயங்குகின்ற சூழலையும் அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும், தமிழரசியல் தலைமைகளின் திரட்சியற்ற, ஒருமைப்பாடில்லாத தனித்து இயங்குகின்ற போக்கினையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

மிக அண்மையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயம் முக்கியமான அரசியல் உரையாடலாக விளங்கியது. ஆனால் அத்தகைய குழுவின் தெரிவிற்கான பக்கங்கள் அதிக விமர்சனத்தை பொதுவெளியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் தெரிவுக்குட்பட்ட இரு சட்ட நிபுணர்களும் உள்ளடக்கியிருந்தமை அதன் விமர்சனத்தை எட்டிப்பார்த்திருந்தது. இத்தகைய உரையாடலுக்கான தெரிவு ஒரு தேசிய இனத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய உரையாடலுக்கான நகர்வாகவே அது அவதானிக்கப்பட்டது. இத்தகைய உரையாடல் ஆரம்ப புள்ளியாக அமைந்தாலும், அதனுடைய அணுகுமுறைகள் அதிக விரிசலை குறித்த கட்சிக்குள்ளேயே ஏற்படுத்தியிருந்தது.

இதேபோன்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் இலங்கையில் உள்ள இந்தியா, ஜேர்மனி மற்றும் பிரித்தானியா தூதரகங்களின் தூதுவர்களை சந்தித்து உரையாடி வருகின்றது. அத்தகைய உரையாடல்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்டநிபுணர் குழுவின் உரையாடல் போன்று தனி அணியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய ஒரு தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு பற்றிய உரையாடல் கூட்டுத்தன்மையையும் கூட்டு வலுவையும் உள்ளடக்கியதாக அமைவது மட்டுமன்றி அத்தகைய திரட்சியே ஆரோக்கியமான இருப்பை நோக்கியதாக அமைய வாய்ப்புள்ளது.

இவ்வகையான தனித்த கட்சிகள் சார்ந்த தனிநபர்கள் சார்ந்த இயங்கியல் போக்கே கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை நீட்ச்சி பெற்றதொன்றாக மாற்றியுள்ளது. இவ்வாறான தனித்த உரையாடல் களம் ஏற்படக்கூடிய விளைவுகளை தேடுதல் அவசியமாகும்.

ஒன்று, ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும் சுயநிர்ணய உரிமையை கோரும் வலுவுடைய தேசிய இனமாக பல தசாப்தங்களுக்கு முன்னரே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்தகைய நீண்ட நிலையான இருப்புக்குரிய வாழ்விடத்தையும், பொருளாதார பலத்தையும் மொழியின் தொடர்ச்சியையும், பண்பாட்டு திரட்சியையும் பல நூற்றாண்டுகளாக பேணி பாதுகாத்து வருகின்றனர். அதுவே, அவர்களது அரசியல் கோரிக்கையாகவும் சுயநிர்ணயத்தின் கீழான பிரகடனமாகவும் அதனை பாதுகாக்கும் பொறிமுறையை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். அத்தகைய வலுவை தொடரவும், அதனை பேணவும் உரித்துடைய பிரிவினராக அரசியல் கட்சிகள் காணப்படுகின்றது.

இரண்டு, ஒரு தேசிய இனத்தின் இருப்பு என்பது அதன் திரட்சியிலும் அதனை வழிநடத்துகின்ற அரசியல் சித்தாந்தத்திலும் கருத்தியலிலும் தங்கியிருக்கின்றது. இதன் தளத்துக்குள் இயங்கும் கட்சிகள் எடுக்கின்ற தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுசேர்ந்த விதத்தில் அமையும்போது மாத்திரமே ஆரோக்கியமான அரசியல் போக்கு ஈழத்தமிழரின் அரசியல் இருப்பில் சாத்தியமாகும். இத்தகைய தனித்த அடையாளப்படுத்தல் என்பது கட்சிகளின் நலன்களையும் தனிமனிதர்களின் நலன்களையும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களை சாத்தியப்படுத்துமேயன்றி ஒரு தேசிய இனத்தின் முழுமையான வாய்ப்புக்களை உருவாக்காது.

மூன்று, ஈழத்தமிழர்கள் அரசற்ற சமூகமாக நிலைத்திருப்பதென்பது அரசியல் கட்சிகளிலும் அவற்றின் அணுகுமுறைகளிலும் தங்கியுள்ளது. ஆரோக்கியமான அரசியல் சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமான அரசியல் சிந்தனையிலும் கருத்தியலிலும் தங்கியுள்ளது. அத்தகைய தத்துவார்த்த கட்டமைப்பை உருவாக்கி அரசியல் தலைமைகள் எழுச்சி பெறுகின்ற போது மொழி, மதம், பிரதேசம், சாதியம் என்பனவற்றை கடந்து திரட்சியும், திரட்சிக்குரிய தலைமையும், அத்திரட்சியை வழிநடத்துபராக அத்தலைமையும் செயற்படுவதனை அவதானிக்க முடியும்.

ஈழத்தமிழர் மத்தியில் அத்தகைய தலைமையை அடையாளம் காண்பது சமகாலத்தில் கட்சி நலனாகவும், கட்சிக்குள் எழும் தனிப்பட்ட இலாபங்களாலும் இல்லாமல் போகிறது. ஆயுதப்போராட்ட காலத்திலும் மிதவாத அரசியலின் ஆரம்ப காலப்பகுதியிலும் வலுமிக்க ஆளுமைகள் ஈழத்தமிழரின் அரசியல் சமூக தொகுதியிலிருந்தே அடையாளப்படுத்தப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது. அத்தகைய ஆளுமைகளை கட்சி நலனுக்கும், சுய நலனுக்கும் தேர்தல் நலனுக்கும் உட்படுத்தாது ஈழத்தமிழரின் அரசியல் நலனுக்கானதாக அடையாளப்படுத்தும் போக்கு உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

நான்கு, ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பில் தெளிவான வெளியுலகத்துடனான தொடர்பு அவசியமானது என்ற வாதம் மேலோங்கி வருகின்றது. அதுபற்றிய உரையாடல் மிக நீண்டகாலமாக அரசியல் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தளத்திலும், புலத்தின் தளத்திலும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்குரிய ஆரம்ப பொறியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு தொடக்கி வைத்துள்ளது. அதன் இரண்டாவது கட்டத்தை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயற்படுத்தி வருகிறது. இத்தகைய முன்முயற்சிகள் ஆரோக்கியமானவை. ஆனால் அவ்வகை முன்முயற்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு தெளிவான திட்டமிடல்களுடன் தந்திரோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இங்குள்ள வாதமாகும். அமெரிக்கா உடனான உரையாடல் ஆரம்ப முயற்சியாக இருந்தாலும் அத்தகைய முயற்சியினுடைய தொடக்க புள்ளியை பிராந்திய அரச மட்டத்திலிருந்து தொடக்கியிருக்க வேண்டிய அவசியப்பாடும் காணப்படுகிறது. இந்தியா புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலையும் கையாளும் நாடென்ற அடிப்படையில் அதற்கான ஆரம்ப புள்ளியை இந்தியாவிலிருந்து ஆரம்பித்து நகர்த்தியிருந்தால் ஆரோக்கியமான மாற்றங்களை இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். சர்வலதேச நாடுகளின் அனுசரணையுடன் நிகழ்ந்த அனைத்து பேச்சுவார்ததைகளிலும் இந்தியா பங்குபற்றாத போதும் இந்தியாவிற்கூடாகவே நகர்த்தப்பட்டது என்பது நோர்வேயின் வசேட தூதுவரின் நகர்வுகளிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

ஐந்து, ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளின் ஐக்கியமானதொரு முடிவுக்குள் செயற்படுவதையே பிராந்திய அரசும், சர்வதேச அரசும் விரும்புகின்றது என்பதை அண்மைய நகர்வுகளில் அடையாளம் காண முடிகிறது. அத்தகைய நகர்வுகளுக்கான வலியுறுத்தல்களையே இந்திய தூதுவர் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் முதன்மைப்படுத்தியதோடு அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புக்களையும் அமெரிக்க இராஜாங்க செயலகம் அழைத்திருந்தமையும் வெளிப்படுத்துகிறது. அத்தகைய திரட்சியே ஆரோக்கியமான இருப்புக்கும், சரியான முடிவுகளுக்கும் வாய்ப்பளிக்கும். உரையாடல் என்பதே சிறந்த தந்திரோபாயத்தின் ஒரு கட்டமைப்பான விடயமாகும். அதனை தனித்து முதன்மைப்படுத்தாது கூட்டாகவும் சரியான திட்டமிடலோடும் நகர்த்தப்படுவதென்பதுவும் அவசியமானதாகும். தனிப்பட்ட விருப்புக்களின் பாற்பட்டு ஒரு தேசிய இனத்தின் தீர்வு அமைவதில்லை.

எனவே, ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்கள் இலங்கையின் அமைவிடம் பொறுத்து தொடர்ச்சியாக கிடைப்பதற்கான சூழலை தந்துள்ளது. இதனை ஒரு வறட்டுத்தனமான சிந்தனைக்குள் அணுகுவதை விடுத்து ஒரு ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்தவதன் மூலம் அனைத்து தரப்பின் ஆலோசனைகளையும் பெற்று தீர்க்கமான முடிவுகளோடு சரியான அணுகுமுறைக்கூடாக நகர்த்துதல் என்பதே தற்போதைய அவசியமான செயற்பாடு. குவாட் நாடுகளின் அங்கத்துவத்தின் பிரதிபலிப்புக்களை கருத்திற்கொண்டு இதன் தொடக்கத்தையும் முடிவையும் நிர்ணயிக்க வேண்டும். தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களின் அணுகுமுறையை விட மிகத்தீவிரமாகவும், நிதானமாகவும் செயற்படுகின்ற இராஜதந்திர பொறிமுறையை கொண்டுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்சாவின் இந்திய விஜயம் அத்தகைய பொறிமுறையின் ஓர் கட்டமாகவே தெரிகிறது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE