Friday 19th of April 2024 04:32:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல்? - 83!

எங்கே தொடங்கியது இனமோதல்? - 83!


நோக்கங்களைத் திசை திருப்பிய சர்வகட்சி மாநாடு! - நா.யோகேந்திரநாதன்!

'பிச்சைக்காரனின் புண்ணைப் போல் சதா இருக்கும் வகையில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தக்கவைக்கும் வகையில் ஆளும் வர்க்கம் வரலாறு முழுவதும் நடந்து கொண்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் சலுகை பெற்ற தரப்பினர் என்ற புனைவை அறிவுடையோர் கூட நம்பவைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை ஈட்டிக்கொடுக்கிற மலையகத் தமிழர்கள் மனிதர்களைவிட இழிவாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் மரண பயத்துடனும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். வடக்குக் கிழக்கு பகுதிகளில் தமிழ்ப் போராளிகள் பிழையான போராட்ட வழி முறைகளைத் தொடுத்திருந்தாலும் அது அரசுக்கு எதிரான போராட்டம் அடக்குமுறையின் வடிவமாக தம்முன் இருக்கிற படையினருக்கு எதிராக இனப் பாரபட்சமின்றிப் போராடுவதைக் காண முடிகிறது. யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்திலும் மலையகத்தில் கடந்த 3 வருடங்களாக அடிக்கடி நிகழும் தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபடுவது சாதாரண சிங்கள மக்களல்ல. அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆயுதக் குழுக்களின் ஒரு பகுதியினரே இவற்றில் ஈடுபட்டனர். எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடிய கடிகாரக் குண்டைப் போல அச்சுறுத்திக் கொண்டிருக்கிற இனச் சிக்கல்'.

இது 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பிரபல பௌத்த, கிறிஸ்தவ மதநிறுவனங்களின் குருமார், சிவில் ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற நீதியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற் சங்கவாதிகள் உட்பட 25 அறிவு ஜீவிகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அது பேச்சுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

இப்பிரமுகர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு ஜே.ஆர்.ஜயவர்த்தன 1983ம் ஆண்டின் மாபெரும் இன அழிப்பின் மூலம் பதில் வழங்கியிருந்தார்.

நியாயபூர்வமான கோரிக்கைகள் சிங்களத் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டாலும் கூட சிங்கள அரசியல்வாதிகள் அவற்றைப் பொருட்படுத்தாது தமது இரத்த வெறி நடவடிக்கைகளையே தொடர்வார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும்.

இந்த புத்திஜீவிகளும். அவர்களுடன் இணைந்த பொது நிறுவனங்களும் தொழிற் சங்கங்களும் இவ்வறிக்கையை முன்வைத்து நாடு பரந்த பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அவற்றைப் புறக்கணித்தே வந்தது. சர்வகட்சி மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால், அதைக் கண்டுகொள்ளாத ஜே.ஆர். சர்வகட்சி மாநாட்டுக்குச் சில நாட்கள் இருந்த நிலையில் முக்கிய மகா சங்கத்தினருடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். இதில் முக்கியமாக இனவாதத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அமரபுர பீடாதிபதி பஞ்சீக தேரர், அஸ்கிரிய பீடாதிபதி மாதுலவாவ சோபித தேரர் ஆகியோர் முக்கியமானவர்களாகும். அவர்கள் இணைப்பு 'சி' க்குத் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஜே.ஆர். அவர்களைச் சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்டு கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சர்வகட்சி மாநாடு என்பது கட்சிகளின் மாநாடாக இருந்தபோதிலும் கட்சியின் பிரதிநிதிகளாக இல்லாத இனவாத பௌத்த குருமாரை அதில் பங்குகொள்ள அழைத்தமை, அம்மாநாட்டைத் திசை திருப்ப மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.

இம்மாநாட்டில் மூன்று அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இணைப்பு 'அ' இதுவரை இடம்பெற்ற முயற்சிகள் பற்றிய அறிக்கையாகும். இணைப்பு 'பி' மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலாகும். இணைப்பு 'சி' இலங்கை அரச தரப்பு, பிரதமர் இந்திரா, பார்த்தசாரதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.

ஆனால் 'பி' அறிக்கையில் முதலாவது விடயமாகத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதெனவும் அடுத்து மாவட்ட அபிவிருத்தி சபைகளை இணைப்பது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது அமிர்தலிங்கத்தைச் சினம் கொள்ள வைத்துவிட்டது. எனவே அவர் அவ்வறிக்கை முன்வைக்கப்படுமானால் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாகப் பார்த்தசாரதியிடம் தெரிவித்துவிட்டார்.

ஏற்கனவே தனிநாட்டு கோரிக்கை முன் வைக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்கள் இல்லாமற் செய்யப்பட்டால் தனிநாட்டுக் கோரிக்கையைத் தற்காலிகமாகக் கைவிடத் தயார் என அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தார். அப்படியான எந்த முயற்சிகளும் இல்லாமலே தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவது சர்வகட்சி மாநாட்டின் நோக்கத்தையே குழப்பும் செயலாகவே பார்க்கப்பட்டது. 'சி' இணைப்பு தயாரிக்கப்படும்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பார்த்தசாரதி இலங்கை வந்திறங்கியபோது கட்டுநாயக்கவில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும் அவர் ஜே.ஆருடன் பேச்சுகளை நடத்தியபோது ஜே.ஆர். வடக்குக் கிழக்கு இணைப்புக்குத் தன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தியா திரும்பிய பார்த்தசாரதி இந்திரா காந்தியுடன் இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

1983 நவம்பர் 30ஆம் திகதி இந்திரா காந்தி ஜே.ஆரிடம் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் மேற்படி இரு விடயங்களையும் தாம் முன்வைக்கப் போவதில்லையெனவும் அது தொடர்பாகச் சர்வகட்சி மாநாட்டின் முடிவுக்கே விடுவதாகவும் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்திரா அம்மையார் தமிழர் விடுதலைக் கூட்டணியினரையம் நீலன் திருச்செல்வத்தையும் கொழும்பு சென்ற சர்வகட்சி மாநாட்டில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளக் கொழும்பு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்ப்பாணத்துக்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர்கள் வடக்கில் பெரும் எதிர்ப்பையே சந்திக்க வேண்டியிருந்தது. அமிர்தலிங்கம் வரவை எதிர்த்தும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாதெனக் கோரியும் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது மாணவர்கள் அவர்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன் 'கூ' போட்டு அவமானப்படுத்தினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் நேரடியாகவே அமிர்தலிங்கத்தைச் சந்தித்து சர்வகட்சி மாநாடு என்பது காலம் கடத்தி ஜே.ஆர். தன்னை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த மேற்கொள்ளும் ஒரு தந்திரமெனவும் அதில் கலந்து கொள்ளக்கூடாதெனவும் எச்சரித்தனர்.

எனினும் இளைஞர் அணிகளின் எதிர்ப்புகளை மீறி 10.01.1984 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இராணுவ பாதுகாப்புடன் கலந்து கொண்டனர்.

ஏறக்குறைய ஒரு வருடம் இடம்பெற்றுவந்த சர்வகட்சி மாநாட்டில் எவ்விதமான உருப்படியான தீர்வும் எட்டப்படவில்லை. அங்கு மடிகம பஞ்சீக தேரர், மாதுலுவாவ சோபித தேர் ஆகியோரின் குரல்களே ஓங்கி ஒலித்தன. அதேபோன்று காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத் முதலி ஆகியோரும் இனவாதக் கருத்துக்களைக் கக்கி வந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர். தானோ தனது கட்சியோ சர்வகட்சி மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியை கலந்து கொள்ள அனுமதிக்க விரும்பவில்லையெனவும், திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே அனுமதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு காலத்தை இழுத்தடித்த ஜே.ஆர். மறுபுறத்தில் இலங்கை இராணுவத்தைப் பலப்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ., பிரித்தானிய உளவுப் பிரிவான எம்.ஐ.எஸ்., பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ, இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் ஆகியவற்றில் ஆயுத, ஆயுதப் பயிற்சி உதவிகளைப் பெற்றுக்கொண்டார்.

பிரிட்டிஷ் எம்.ஐ.எஸ். நேரடியாகவே இலங்கை சிறப்பு அதிரடிப் படைக்குப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் இஸ்ரேலிய மொசாட் மாதுறு ஓயாவிலுள்ள இராணுவ முகாமொன்றில் 50 பேர் கொண்ட இஸ்ரேலிய அணியினர் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சியை வழங்கினர்.

அதுமட்டுமின்றி இஸ்ரேல் விமானங்கள் உட்படப் போர்த் தளபாடங்களையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கியது. பாகிஸ்தானும் பயிற்சிகளையும், போராயுதங்களையும் தாராளமாக வழங்கி வந்தது. அக்காலப் பகுதியில் பாகிஸ்தான் அதிபர் சியாஹுல் ஹக் அவர்கள் இலங்கை விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.

1984 ஜனவரி 10ம் திகதி ஆரம்பமான சர்வகட்சி மாநாடு 1984 ஒக்டோபர் வரை 36 தடவைகள் கூடிக் கலைந்தபோதும் எந்தவொரு சிறு விடயத்திலும் இணக்கம் காணப்படவில்லை.

இந்த நிலையில்தான் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்ப் பாதுகாவலர்கள் இருவரால் 1984 அக்டோபர் மாதம் 31ம் திகதி சுட்டுக்கொல்லப்படுகிறார்.

ஜே.ஆர். அதைக் காரணம் காட்டி நவம்பர் 15ம் திகதி இடம்பெறவிருந்த மாநாட்டு அமர்வை ஒத்தி வைக்கிறார்.

இந்திரா காந்தியின் இறப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஜே.ஆர். டிசெம்பர் 26ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை இணைப்பு 'சி' யை நிராகரித்து விட்டதாக அறிவிக்கிறார்.

அத்துடன் 37 தடவைகள் கூடிக் கலைந்த சர்வகட்சி மாநாடு எவ்வித பயனுமின்றியே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது.

ஜே.ஆர். ஜயவர்த்தன தான் ஒரு சமாதானப் பிரியன் போலவும், இனப்பிரச்சினைக்குப் பேச்சுகள் மூலம் தீர்வை எட்ட முயற்சிப்பவர் போலவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திய அதேவேளையில் அமைச்சரவைத் தீர்மானங்கள் மூலமும் இனவாத பௌத்த அமைப்புகளைச் சர்வகட்சி மாநாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலமும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான கதவுகளை ஒவ்வொன்றாக அடைத்து வந்தார். இன்னொருபுறம் இராணுவத்தைப் பலப்படுத்துவதிலும் மேற்குலக நாடுகளையும் அவற்றின் ஆதரவு சக்திகளையும் இணைத்துத் தன்னைப் பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டினார்.

அப்படியான அவரின் நயவஞ்சக காய் நகர்த்தல்களின்போது, இந்திரா காந்தியின் படுகொலையும் அதனால் இந்திய அரசியலில் ஏற்பட்ட தற்காலிகக் குழப்ப நிலையையும் அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இணைப்பு 'சி'யை நிராகரிப்பதாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் காரணமாக சர்வ கட்சி மாநாடு செயலிழந்து போனது.

அத்துடன் ஜே.ஆர். இனி இணைப்பு 'பி' அடிப்படையில் வட்டமேசை மாநாடு மட்டுமே இடம்பெறுமெனவும் அறிவித்தார்.

ஜனநாயக வழியில் இனப் பிரச்சினைத் தீர்வு என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் இலக்கும் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவின் அனுசரணையுடன் சர்வகட்சி மாநாடு மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் ஜே.ஆரால் திசை திருப்பப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது என்பது உண்மைதான்.

ஆனால் அதன் எதிர்விளைவாக போராளிக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்தன. போராளிக் குழுக்களைப் பலப்படுத்துவதிலும் ஐக்கியப்படுத்துவதிலும் 'றோ' தீவிர கவனம் செலுத்திச் செயற்பட ஆரம்பித்தது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE