Friday 19th of April 2024 09:55:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லை, திருமலையில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; மட்டக்களப்பில் போராட்டம்!

முல்லை, திருமலையில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; மட்டக்களப்பில் போராட்டம்!


முல்லைதீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம்,மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள்,பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேபோன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் படகு விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் குண்டர்களினால் தாக்கப்பட்டு அவர்களது புகைப்படக்கருவிகளும் பறிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலைசெய்ய வலியுறுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை விடுதலைசெய்,இராணுவமே ஊடகவியலளார்கள் மீது தாக்குதல் நடத்தாதே,கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடு,ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய இராணுவத்தினரை கைதுசெய், அரசே ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, அரசே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்ற ஊடகவியலாளர்கள் காந்திபூங்காவில் காந்திதிருவுருவச்சிலைக்கு அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நாட்டில் இராணுவ அராஜகம்கொண்ட நிலைமையினை நோக்கிசெல்கின்றதா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE