Monday 17th of January 2022 09:27:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
மீளும் பூகோள தீநுண்மிப்பேரிடர் காவுகொள்ளும் உலக உளம்! - மருத்துவர் சி. யமுனாநந்தா!

மீளும் பூகோள தீநுண்மிப்பேரிடர் காவுகொள்ளும் உலக உளம்! - மருத்துவர் சி. யமுனாநந்தா!


ஆபிரிக்கா கண்டத்தில் பொஸ்சுவானா நாட்டில் கண்டறியப்பட்ட திரிபடைந்த தீநுண்மியின் பரவலானது உலகை இற்றைக்கு இரு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் கண்டறியப்பட்ட தீநுண்மியின் பரம்பலின் ஆரம்ப நிலையிற்கு இட்டுச் சென்றுள்ளது. இத்திரிபடைந்த தீநுண்மியினை உலக சுகாதார நிறுவனம் மிக்கிறோன் என பெயரிட்டுள்ளது. இத் தொற்றானது அடுத்த இரண்டு வருடங்களுக்கு உலகளாவியரீதியில் முக்கியமான ஐந்து துறைகளில் பாதகமான விளைவினை ஏற்படுத்தும்.

அவையாவன :

1. பூகோளமயமாதல் சவாலுக்கு உட்படுத்தப்படும்.

2. உலகின் பொருளாதார ஓட்டம் மந்தமடையும்.

3. உலகின் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு குந்தகம் ஏற்படும்.

4. உலகில் நாடுகளின் அரசியலில் ஸ்திரத்தன்மை குலைந்து, ஜனநாயக அமைதியின்மை ஏற்படும்.

5. மக்களின் வாழ்க்கைக்களிநிலை ((Life Style and Entertainment) வீழ்ச்சியுறல்.

எனவே உலகநாடுகள் யாவும் இப்பிணிப்பேரிடர் காவு கொள்ளும் உலக உளத்தை அறிந்து அதனை எதிர்கொள்ளல் அவசியமாகும்.

அடுத்து ஒவ்வோர் நாடுகளும் எதிர்வரும் இரண்டு வருடங்களில் எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக அமைவனவற்றை ஐந்து முக்கிய பிரிவுகளில் ஆராயலாம்.

அவையாவன :

1. மருத்துவ அவசர நிலையினை ஒவ்வோர் நாடும் பிரகடனப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

2. பொருளாதார நெருக்கடியால் தொழிற்சங்கப் போராட்டங்கள் மக்களை மீண்டும் மீண்டும் பாதிப்பதனால் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு இரண்டு வருடத்திற்கான தடையுத்தரவு தேவைப்படும். மேலும் ஜனநாயக முறையில் அரசியல் பிளவுகளை அதிகரிக்காது இருப்பதற்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான அல்லது அரசாங்கத்தினைத் தொடர்ந்து இயக்குவதற்கான சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

3. பாரிய முதலீட்டுச் செயற்திட்டங்களை 2 வருடங்களுக்கு முன்னெடுக்காதும், ஆரம்பச் செலவுகளை முடக்குவதனாலும் மட்டுமே உலக பொருளாதார மந்தநிலையின் வேகத்துடன் ஒரு நாடு பயணிக்க முடியும். இதனால் ஆடம்பரச் செலவுகளுக்கு வரி அறவிடும் தன்மை தவிர்க்க முடியாது போகும்.

4. மக்கள் வறுமையால் பாதிப்படையாது இருப்பதற்கு நுண்ணிதிய விருத்தியை ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். இதற்காகக் கிராமியப் பொருளாதாரத்திலும், விவசாயம்சார், கைத்தொழில்சார் தொழில் முயற்சிகளையும் அதிகரித்தல் வேண்டும். சிறு வர்த்தகர்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். கடல்சார் உற்பத்திகள் அதிகரிக்கப்படல் வேண்டும்.

5. ஒவ்வொரு நாடும் அடுத்த இரண்டாண்டுகளுக்கான கல்விசார்ந்த செயற்றிட்டங்களையும்,தொழில்நுட்பம் சார்ந்த செயற்றிட்டங்களையும் முறையாகச் செயற்படுத்தல் வேண்டும்.

இதனாலேயே இன்றைய இளம் சந்ததியினரின் பெரும்பகுதியினர் சமூக மேன்னிலையில் பின்னடைவு இல்லாது முன்னேற முடியும்.

அடுத்து மருத்துவத்துறையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாகப் பின்வருவன அமையும்.

1. கோவிட் தொற்றுக்கு எதிரான செயற்றிட்டங்கள். இவை தேசிய அளவிலும், மாகாண அளவிலும், மாவட்ட அளவிலும், கிராம மட்டத்திலும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கோவிட் தடுப்பூசி விசேடமாக முன்னிலைப்படுத்தல் அவசியம்.

நோயெதிர்ப்புச்சக்தி குறைந்த எயிட்ஸ் நோயாளிகள், புற்று நோயாளிகள் போன்றோரில் கோவிட் தீநுண்மி சுமார் 200 நாட்கள் வரை உயிர் வாழலாம்.

இதன்போது இந் நோய்க்கிருமி பல விகாரங்களுக்கு உட்படும். எனவே இத்தகையோருக்கு தடுப்பு மருந்து ஒழுங்கான கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும். தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வரையும் அடுத்து கொரோனா நிவாரணி மருந்து கண்டறியப்படும் வரையும் உலகில் கொரோனாத் திரிவுகளின் தோற்றத்தை தவிர்க்க முடியாது.

2. கோவிட் தொற்று முதன்மைப்படுத்தப்படினும் ஏனைய தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகின்றன. பிரதானமாக டெங்குநோய், காசநோய், எயிட்ஸ்நோய், தொழுநோய் என்பவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவத்தினை நாம் மேற்கொள்ள வேண்டும்.

3. மூன்றாவதாக சமூக உளத்தாக்கங்களைச் சிறப்பாகக் கையாள்வதற்கான நடைமுறைப் பொறிமுறையினை வலுவூட்ட வேண்டிய அவசியம் அடுத்த இரு வருடங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது. குறிப்பாக போதைவஸ்துப் பாவனைக் கட்டுப்பாடு, தற்கொலைத் தடுப்பு, குடும்ப வன்முறைகள் தடுப்பு என்பன முக்கியம் பெறும்.

4. அடுத்து சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்களுக்கான நலத்திற்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.

5. மருத்துவ சேவைகளை வழங்கலில் உள்ள இடையூறுகள் நாட்பட்ட நோயுடையோரின் நலனைப் பாதிக்காதவாறு அவர்களுக்கான கிரமமான மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சை வழங்கலும் மிகவும் முக்கியமானவையாகும்.

இவையே எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மனிதகுலம் முதன்மை கொடுக்க வேண்டிய அம்சங்களாக அமையும்.

மருத்துவர். சி. யமுனாநந்தா

.2.12.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE