Thursday 25th of April 2024 05:07:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிக்கத் திட்டமிடுகிறதா தென் இலங்கை? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிக்கத் திட்டமிடுகிறதா தென் இலங்கை? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


தென் இலங்கையின் அரசியலில் அதிக நெருக்கடிகள் எழுந்துள்ள போதும் ஈழத்தமிழர் அரசியல் விடயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுகின்ற போக்கு தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகிறதை அவதானிக்க முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயத்தினை அடுத்து எழுந்துள்ள நெருக்கடியை கையாள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ளார். அவரது பயணம் பொருளாதார தேவைகளுக்கானதாக அமைந்தாலும் அதன் உள்ளார்ந்த நோக்கம் ஈழத்தமிழரது அரசியலை கையாளும் பொறிமுறையாகவே தெரிகிறது. குறிப்பாக சீனாவுக்கு எதிரான அணுகுமுறைகளை அதிகம் கொண்டுள்ள இந்தியா இலங்கைத் தீவில் தனது நகர்வுகளை அதிகரிக்க திட்டமிட்டு வருவதுடன் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை இலங்கைக்கு எதிராக பலப்படுத்திவருவதையும் கருத்தில் கொண்டு தென் இலங்கை அரசியல் சக்திகள் செயல்படத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறக்கொட இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை(30.11.2021) சந்துள்ளமையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் விளைவுகளை தேடுவதாக அமைந்துள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை மிலிந்த மொறகொட சந்தித்த போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்துவது குறித்து உரையாடப்பட்டது. அது மட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட ஒத்துழைப்பை மீளாய்வு செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் உரையாடியதாகவும் தெரியவருகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ கடற்படைகளின் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலும் இலங்கைத் தூதுவர் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நீயூ டைமன் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்பட்ட விபத்தினைக் கட்டுப்படுத்த இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதென இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டமையும் முக்கிய விடயங்களாக அமைந்துள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் ஏற்கனவே வலுவாக உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவது இராணுவங்களுக்கிடையிலான கூட்டுப் பயிற்சியை நிகழ்த்துவது கடல்படை ரீதியில் ஒத்திகைகளை மேற்கொள்வது புலனாய்வுத் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதென பல விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு நிலவுகிறது. ஏறக்குறைய பாதுகாப்பு ஒத்துழைப்பின் கணியத்துக்குள்ளேயே இலங்கை-இந்திய நட்புறவு காணப்படுகிறது. இது பற்றி 2020 இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் டேவால் இலங்கைக்கு வருகை தந்த போது இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இது ஏற்படுத்தக் கூடிய விளைவுகளே அதிகம் உரையாடப்பட வேண்டிய விடயமாகும்.

முதலாவது சீன-இலங்கை நட்புறவானது பாதுகாப்பு உடன்பாடுவரையான எல்லைவரை சென்றுவிட்டது. ஆனால் உடன்படிக்கை எதுவும் நிகழவில்லை. ஆனால் அதற்கு சமதையான இலங்கைக்குள் சீனா இராணுவதளம் ஒன்றை அமைப்பது பற்றிய உரையாடலை கொண்டிருக்கின்றது. அதனை அமெரிக்க வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா கூறியதென்பதற்காக பலதரப்பிலும் நிராகரிப்பும் சந்தேகமும் இராணுவத் தளம் சார்ந்து நிலவியது. ஆனால் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் குத்தகைக்கு போன பின்பு அதுவிடயத்தில் சீனா எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. அப்படியாயின் இலங்கை சீனாவுடன் நெருக்கமான உறவையே பேணும் என்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயமாகவே தெரிகிறது. அத்தகைய உறவின் பின்பே தென் இலங்கை இந்தியாவுடன் நட்புக் கொள்ள முனைகிறதென்பது அவதானத்திற்குரிய விடயமாகும். இந்தியா அத்தகைய சீன-இலங்கை நெருக்கத்தை தமது எல்லைக்குள் அல்லாது அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் மற்றும் குவாட் நாடுகள் கட்டமைப்பு வரை விஸ்தரிக்க திட்டமிட்ட போதே இலங்கை இந்தியா அமெரிக்க ஐரோப்பிய நட்பினை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது. அப்படியாயின் இலங்கை -இந்திய உறவானது சீனா-இலங்கை நெருக்கத்தினை அடுத்ததாகவே நோக்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாவது பிராந்திய சர்வதேச அரசியல் ஒழுங்கு உறுதியான நிலையை எடுக்கவில்லை. சீனாவா அல்லது அமெரிக்காவா அல்லது ஒற்றைமையா உலக ஒழுங்கா அல்லது பல்துருவ உலக ஒழுங்கா என்ற குழப்பம் நிலவுகிறது. தென் சீனக்கடல் பகுதியிலிருந்து தென் இந்துசமுத்திரம் வரை அமெரிக்க இந்தியா ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒருபுறமும் சீனா ரஷ்யா மறுபுறமுமாக முரண்பாடு நிலவுகிறது. ஆனால் இதுவரை எந்த நாடும் உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் வலிமை கொண்டதாக மாறவில்லை. அப்படியாயின் உலக ஒழுங்கில் ஒரு குழப்பம் நிலவுகிறது என்பது உறுதியாகிறது. இத்தகைய குழப்பம் இலங்கை அரசிடமும் உண்டு. அதே நேரம் அத்தகைய குழப்பத்தை எதிர் கொள்ளும் உத்தியும் இலங்கை ஆட்சியாளரிடம் காணப்படுகிறது. அது அவர்களுக்கு அவர்களது முன்னோடிகளான அரசியல் தலைமைகளும் புலமையாளர்களும் கற்றுக் கொடுத்ததாகும். அதாவது நெருக்கடியை எப்படி முகாமை செய்வதென்பதை தென் இலங்கை ஆட்சியாளர்கள் காலம் காலமாக பின்பற்றி வெற்றி கண்டுவருகின்றனர். அதனால் இந்தியாவை அணுகுவதென்பதும் இந்தியாவை கையாளுவதென்பது இலங்கை ஆட்சியாளருக்கு சாதாரணமான தென்பதே இதுவரையான அவதானிப்பாகும். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவை கையாளுவதற்காக அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அதாவது இந்தியா இலங்கையில் தெளிவான பாதுகாப்பு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரயத்தனத்துடனேயே உள்ளது. அதனை அடையும் வரை எந்த விட்டுக் கொடுப்புக்கும் போகத் தயாரில்லாத நிலை காணப்படுகிறது.

மூன்றாவது அவ்வகை பாதுகாப்பு உத்தரவாதத்தை அல்லது பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினை முழுமைப்படுத்த இந்தியா எத்தனிக்கிறது என்பதும் அதனை தென் இலங்கை ஆட்சியாளர்கள் கூடியவரை தவிர்க்கவும் முயலுவதனையே காணமுடிகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு சாதகமான பதில் ஏற்பட்டலோ அல்லது இலங்கைக்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டலோ ஈழத்தமிழர் தமது அரசியல் வெளியை பயன்படுத்துவதில் அதிக சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். காரணம் தென் இலங்கை ஒரு போதும் சீனாவை நிராகரிக்கும் அரசியலை உருவாக்காது. அதே நேரம் சீனாவையும் இந்தியாவையும் அரவணைத்துக் கொள்ளவே அதிகம் முனையும். அதனையே தற்போது தென் இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர். ஆனாலும் தென் இலங்கை எப்போதும் சீனா பக்கமே. அவ்வாறு பயணிப்பது இலங்கையின் புவிசார் அரசியலுக்கும் பூகோள அரசியலுக்கும் பொருத்தமானது. அதில் தென் இலங்கை ஆட்சியாளர் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு ரணில்விக்கிரமசிங்ஹவின் ஆட்சிக்காலத்திலேயே ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. எனவே அதனால் ஒரு தெளிவான அரசியல் வெளி ஈழத்தமிழருக்கு நிரந்தரமானதாக அமைய வாய்ப்புள்ளது. அத்தகைய வெளிக்குள்ளால் ஈழத்தமிழர் பயணிப்பதென்பது இந்தியாவுடனான நட்புறவிலேயே தங்கியுள்ளது. இவை அனைத்தும் கடந்து இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றுக்கு தென் இலங்கை பயணிக்க தீர்மானிக்குமாயின் ஈழத்தமிழர் தலைகீழான நிலைக்குள்ளேயே தள்ளப்படுவார்கள். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவானதே.

நான்காவது இலங்கைத் தீவினது புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் கையாளும் திறன் இந்தியாவிடமே காணப்படுகிறது. எனவே இந்தியாவிலிருந்தே ஈழத்தமிழர் தமது அரசியலை கையாளும் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். தென் இலங்கைக்கு இந்தியாவுடன் அரசியல் பொருளாதார பாதுகாப்பு உடன்பாடுகள் வலுவடைந்தாலும் ஈழத்தமிழருக்கான அரசியல் வெளி வெற்றிடமாகவே காணப்படும். அதனை பயன்படுத்தும் நிலைக்குள் தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பட வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் நட்புறவுள்ள சக்திகள் என்பதற்காகவோ குவாட் அமைப்பில் உறவுள்ள நாடுகள் என்பதற்காகவோ அமெரிக்காவிலிருந்து இந்தியாவை அணுக முடியாது. அது ஆரோக்கியமான அரசியலும் கிடையாது. அத்தகைய வெடிப்புகளே தற்போதைய நிலைக்கு காரணமாகும் என்பது ஈழத்தமிழரது அனுபவமாக உள்ளது. அது மட்டுமல்ல ஈழத்தமிழர் அமெரிக்காவை அணுக தென் இலங்கை இந்தியாவை அணுகியதும் அதற்கான வெளியை ஏற்படுத்தியதும் ஈழத்தமிழரது அரசியலேயாகும். தற்போது ஏற்பட்டுள்ள நகர்வுக்கு பதில் நகர்வை விரைவில் ஈழத்தமிழர் ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் தென் இலங்கை அடுத்த கட்டத்தை எட்ட முயலும். அது உள்நாட்டில் பாரிய மாற்றங்களாக அமையும். குறிப்பாக வடக்கு கிழக்கை நோக்கியதாக அமையும். எனவே குழம்பியிருக்கும் உலகச் சூழலும் சீனாவின் தென் இலங்கையுடனான நிலைத்திருப்பும் ஈழத்தமிழரது அரசியல் வெளியை இலகுவாகட்கியுள்ளது. அதனை தடுக்கும் பிரயத்தனங்களையே தென் இலங்கை இந்தியாவிலும் உலக நாடுகள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஓரங்கமாகவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மெலிந்த மொறக்கொட இந்திய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் உள்ளடக்கம் விளங்குகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE