Thursday 18th of April 2024 02:23:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் டிசம்பர் 6-12 முன்னெடுக்கபட உள்ளது! - வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் டிசம்பர் 6-12 முன்னெடுக்கபட உள்ளது! - வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்!


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து யாழ். மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது குறித்து வடமாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் பல பகுதிகளிலும் பருவகால மழை ஆரம்பமானதன் பின்னர் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இப் பருவ கால மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் நுளம்புப் பெருக்கம் மேலும் அதிகரித்து டெங்கு நோய்த் தொற்று தீவிரமடைந்து பல உயிரிழப்புக்கள் நிகழும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் வாரத்தில் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்வருமாறு முன்னெடுக்கப்படும்.

1. ஒரு பிரதேச செயலர் பிரிவிலுள்ள சகல நிறுவனங்களையும் கிராம மட்ட அமைப்புக்களையும் இணைத்து பிரதேச செயலர் தலைமையில் பிரதேச மட்ட டெங்கு தடுப்புச் செயலணி கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு நுளம்புக் கட்டுப்பாட்டு வார நடவடிக்கைகள் திட்டமிடப்படும். சுகாதார வைத்திய அதிகாரி இதற்கு ஒழுங்கிணைப்பாளராக செயற்படுவார்.

2. அவ்வாறே கிராம மட்ட டெங்கு தடுப்பு செயலணிக் குழு மூலம் கிராம சேவகர் தலைமையில் கிராம மட்ட அமைப்புக்களை ஒருங்கிணைத்து அப் பிரதேசத்தில் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரப் பரிசோதகர் இதற்கு ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார்.

3. இவ் வாரத்தில் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் வைத்தியசாலைகளும் பொது இடங்களும் வணக்கத்தலங்களும் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் பராமரிப்பற்ற காணிகளும் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4. பாடசாலைகளில் இவ் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் தெரிவு செய்யப்பட்டு மாணவர்களின் பங்களிப்புடன் காலை 2 மணி நேரம் சிரமதானம் மூலம் பாடசாலை வளாகம் துப்பரவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

5. பொது சுகாதாரப் பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் மலேரியா தடுப்பு வெளிக்கள உத்தியோகத்தர்கள் சுகாதாரத் தொண்டர்கள் கிராம சேவகர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரிப் பயிலுனர்கள் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் கிராம மட்ட சமூக அமைப்புக்களின் தொண்டர்கள் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்களாக பிரிக்கப்பட்ட பிரதேச மற்றும் கிராம மட்ட டெங்குத் தடுப்பு செயலணியானது குறித்த நாளில் அப் பிரதேச செயலர் பிரிவில் அந் நாளுக்காக ஒதுக்கப்பட்ட வலயத்தில் நுளம்புக் பெருக்கத்தைக் கண்காணித்து ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வீடுகளையும் நிறுவனங்களையும்ரூபவ் பொது இடங்களையும் தரிசிப்பு செய்வார்கள்.

தற்பொழுது பரவிவரும் கொவிட் -19 தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பானது வைத்திய சாலைகளின் வேலைப்பளுவினையும் மனித மற்றும் பௌதீக வளங்களையும் மிகப் பெரிய சவாலுக்கு உட்படுத்தலாம்.

மேலும், இக் கோவிட் பெரும் தொற்றினால் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் வைத்தியசாலைகளை உடனடியாக நாடுவதற்கு தயக்கம் காட்டுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையால் டெங்கு நோய் மூலம் அதிக இறப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, டெங்கிலிருந்து எமக்கு நெருக்கமானவர்களையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு எமது வீடுகள் வேலைத் தளங்கள் வழிபாட்டுத்தலங்கள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கி நுளம்புப் பெருக்கம் ஏற்படாதவாறு பராமரிப்பது எம் அனைவரினதும் முக்கிய பொறுப்பாகும்.

வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வட மாகாணம்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE