Friday 19th of April 2024 06:02:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
உக்ரனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சி; புடினுக்கு அமெரிக்கா  கடும் எச்சரிக்கை!

உக்ரனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சி; புடினுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!


உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் 175,000 துருப்புக்களைக் குவித்து பல முனைத் தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராக வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா உளவுத் துறையினரின் அறிக்கைகளை மேற்கோள் காட்சி வொஷிங்டன் போஸ்ட் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, உக்ரனை ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா - ரஷ்யா இடையே பதட்ட நிலை அதிகரித்துள்ளது.

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா ஆயத்தமாகி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீா் புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் விரிவான முயற்சிகளை எனது நிா்வாகம் ஒருங்கிணைத்து வருகிறது. அந்த நடவடிக்கையானது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிக கடினமான ஒன்றாக அமையும் என நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பைடன் தெரிவித்தார்.

அடுத்த வாரம் பைடனும் புதினும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யாவுக்கு எதிரான எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்? என பைடன் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க திட்டமிடுகிறது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் நாங்களும் எதிா்வினை ஆற்றுவோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் தெரிவித்தாா்.

இதற்கிடையே தங்கள் நாட்டு எல்லை அருகே ரஷ்யா 94,000 படையினரை தற்போது குவித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்சி ரெஸ்னிகோவ் நேற்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டார்.

ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம் அருகே ஏராளமான ரஷ்ய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனா். நமது உளவுத் துறை தகவலின்படி, அவா்களின் எண்ணிக்கை 94,300-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யத் தரப்பிலிருந்து மோதல் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக, வரும் ஜனவரி மாத இறுதியில் இந்த மோதல் நிகழலாம். எனினும், இத்தகைய மோதலைத் தவிா்க்கவே உக்ரைன் விரும்புகிறது எனவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் ஜனாதிபதி விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா் ரஷ்யாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷ்ய இராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன.

குளிா்காலத்தின்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அச்சம் தெரிவித்துள்ளன. இது ரஷ்யா – அமெக்கா இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளது.

எனினும் உக்ரைனை ஆக்கிரமிக்க தாங்கள் முயல்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE