Thursday 25th of April 2024 06:58:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஹெலி விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், மனைவி உடல்கள் இராணுவ மரியாதையுடன் தகனம்!

ஹெலி விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், மனைவி உடல்கள் இராணுவ மரியாதையுடன் தகனம்!


ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்றைய தினம் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள் இன்று பிற்பகல் டெல்லி காமராஜ் சாலை உள்ள இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊர்வலம் கண்டோன்மென்டை அடைந்ததும், அங்குள்ள ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உடல்கள் இருந்த பெட்டிகள் வைக்கப்பட்டன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முப்படை தளபதிகள் மற்றும் இலங்கை, பூடான், நேபாளம், வங்காளதேசம் உள்பட அண்டை நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து, இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் பிபின் ராவத்-மதுலிகா தம்பதியினரின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கலந்து கொண்டு பெற்றோரின் உடல்களுக்கு மலர் தூவி இறுதிச் சடங்கு செய்தனர்.

தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உடல்கள் இருந்த பெட்டிகளை தோளில் சுமந்து சென்ற முப்படை வீரர்கள் தகன மேடை அருகே வைத்தனர்.

பின்னர் பிபின் ராவத் உடலில் போர்த்தப்படடிருந்த மூவர்ண தேசிய கொடியை ராணுவத்தினர் முறைப்படி அகற்றினர்.

தொடர்ந்து அங்கு இருந்த சிமெண்ட் பூசப்பட்ட தகனக்குழிக்குள் இரு உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது நடைபெற்ற இறுதி சடங்கில் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பின்னர் கூர்க்கா துப்பாக்கிப் படையினர் 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத்துக்கு முழு ராணுவ மரியாதை அளித்தனர். தொடர்ந்து மரகட்டைகள் அடுக்கப்பட்டு பிபின் ராவத்-மதுலிகா உடல்கள் தகனம் செய்யப்பட்டன. சிதைக்கு அவர்களின் மகள் தீ மூட்டினார்.

கடந்த புதன்கிழமையன்று தமிழ்நாடு – குன்னூர், வெலிங்டன் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ.17வி-5 ஹெலிகப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகப்டரில் இருந்த இந்திய விமானப் படையை சேர்ந்த குரூப் கப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். அவரும் தற்போது ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE