Thursday 28th of March 2024 01:56:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயமும் இலங்கை-இந்திய உறவும்;  பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயமும் இலங்கை-இந்திய உறவும்; பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை -இந்திய நட்புறவு புவிசார் அரசியல் ரீதியில் முதன்மையானதாகவே காணப்படுகிறது. ஆனால் அத்தகைய உறவு ஓரே சீரானதாக இல்லாது அவ்வப்போது நெருக்கமாகவும் சில சந்தர்ப்பங்களில் முறிவடைந்தும் நகர்கிறதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இலங்கையின் வெளிவிவகாரம் இந்தியாவுக்கு எதிரானதாக அமைகிறது என்ற குற்றச்சாட்டு நிலவினாலும் அத்தகைய முரண்பட்ட வெளியுறவுக் கொள்கையை கொண்டு இந்தியாவை கையாள நன்கு பயிற்றப்பட்டவர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் காணப்பட்டனர். அதே நேரம் இந்திய ஆட்சித்துறையினரும் தமக்கான நலன்களுடன் அவ்வப்போது இலங்கையை தமது பிடிக்குள் நகர்த்துவதில் கவனம் செலுத்தியுள்ளமையையும் காணமுடிகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் புவிசார் அரசியல் நெருக்கடியை பூகேர்ள ரீதியான சக்திகளை முன்னிறுத்தியே நகர்ந்துவருகின்றனர். இக்கட்டுரையும் சமகாலத்தில் இலங்கை-இந்திய உறவின் போக்கில் எழுந்துள்ள சூழலைத் தேடுவதாக அமைந்துள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது இந்திய விஜயத்தை டிசம்பர் 1-2 (2021) திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அவரது விஜயத்தின் முக்கிய நோக்கங்கள் நான்கு பிரதான கோணத்தில் அமைந்திருந்தது.

ஒன்று உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சித் திட்டத்துடன் நிதியமைச்சரது இந்தியா நோக்கிய விண்ணப்பம் அமைந்திருந்தது. இலங்கை அதிகமான உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான பிரதான இறக்குமதி நாடாக இந்தியாவே காணப்படுகிறது. இது மிக நீண்ட காலமாக நிலவிவரும் நெருக்கமான ஒத்துழைப்பாக அமைந்துள்ளது. இது இந்திய-இலங்கையின் வர்த்தக பங்களிப்பில் ஏறக்குறைய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்துவருகிறது. இதற்கான நீடித்த கொடுப்பனவை நிகழ்த்த முடியாத அன்னியச் செலாவணி நெருக்கடி நிலையிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு எரிசக்தி பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இந்தியாவிடமிருந்து கச்சாய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பமாக அமைந்திருந்தது.

அதாவது நிதிச் சந்தையின் நெருக்கடி காரணமாக இதற்கான கடன்வரி பெறுவதற்கான நகர்வாகவே காணப்பட்டது. ஏற்கனவே திருகோணமலையில் இந்திய அமைத்துள்ள எண்ணெய் குதங்களை பராமரிப்பதுவும் அதில் அடங்கியிருந்த விடயமாக அமைந்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக ஏறக்குறைய 3800-4000 மில்லியன் அமெரிக்க டொலர் வரையானதாக அமைந்துள்ளது. நாட்டில் அதிக நெருக்கடியான விடயமாக எரிசக்தி அளவு காணப்படுகிறது. அது மட்டுமன்றி எரிசக்தியின் தேவைப்பாடு இலங்கையின் உற்பத்தித் துறையுடனும் இதர பொருளாதார நோக்கங்களுடனும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் எரிசக்தி விடயத்தில் இந்தியாவுக்கு அதிகமான தொடர்பு இருப்பதனால் இந்தியாவின் உதவியை அதிகம் முதன்மைப்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது.

மூன்றாவது இலங்கை அரசாங்கத்தின் நாணய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டமாக அமைந்திருந்தது. இலங்கையின் நிலுவை தொடர்பில் அதிக நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. ஏற்கனவே நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் இந்தியா உதவியுள்ளது. அதனால் இந்தியாவின் நிதியியல் உதவிக்கான எதிர்பார்ப்பினை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய நிதியமைச்சருக்கு முன்வைத்துள்ளார். இலங்கை ஒரு எதிர்பார்ப்புடன் காணப்படுகிறதை அவதானிக்க முடிகிறது. நான்கு இந்திய முதலீடுகளை எளிதாக்கும் நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருந்தது. இலங்கையில் பல்வேறு துறைகளின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இது அண்மைக்காலத்தின் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டது. தொழில் துறை சார்ந்தும் விவசாயம் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்ந்தும் மாற்றங்களை இந்திய அதிகம் கொண்டுள்ளது என்ற அடிப்படையில் உரையாடப்பட்டது.

ஆனால் இத்தகைய திட்டங்களுக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பென்பது மிக குறைவானது மட்டுமன்றி ஏறக்குறைய நிதியமைச்சரின் இந்திய விஜயம் தோல்வியாகவே எதிர் கட்சிகளும் அது சார்ந்த எண்ணங்களும் உறுதிப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமருடனான சந்திப்பு சாத்தியமற்றமை அதிக நெருக்கடியை இலங்கைத் தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஆட்சியாளரது சீன சார்பு போக்கினை மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் இந்தியத் தரப்பால் எப்படி கையாளப்படுகின்றது என்பதே இதில் கவனம் கொள்ள வேண்டிய விடயமாக தெரிகிறது. அதனை விரிவாகப் பார்த்தல் அவசியமானது.

முதலாவது புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் சீனாவுக்கு எதிரான அணியில் ஆசியாவுக்குள்ளும் இந்துசமுத்திரத்துக்குள்ளும் தலைமை தாங்கும் நாடு இந்தியா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இலங்கை சீனாவுடன் நெருக்கமான அரசியல் பொருளாதார இராணுவ உறவை கட்டமைத்துள்ள போதும் தவிர்க்க முடியாது இந்தியாவை அமெரிக்கா உட்பட்ட மேற்கைக் கையாள முனைகிறது என்ற புரிதல் இந்தியாவுக்குள் எழுந்துள்ளது. அதே நேரம் பொருளாதார ரீதியில் அதிக நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது என்பதையும் இந்தியா விளங்கிக் கொள்ளாதது அல்ல. ஆனால் இதுவே இந்தியாவுக்கான சூழலாகவும் கருத வாய்ப்புள்ளது. குறிப்பாக போர்காலப் பொருளாதாரம் இலங்கையில் எவ்வாறு உலக நாடுகளால் கையாளப்பட்டதோ அதே பாணிக்குள் தற்போதைய இலங்கை நெருக்கடியை உலக நாடுகள் கையாள முனைகின்றன. அதில் இந்தியா முதன்மையானதாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கைத் தீவில் சீனாவின் பிரசன்னத்தை முடிபுக்கு கொண்டுவராது விட்டாலும் நெருக்கடி நிலையை உருவாக்க முடியும் எனக்கருதுகிறது. அதன் ஒரு கட்டமே தீவுகளில் எரிசக்தி பற்றிய சீனா-மின்சார சபை உடன்படிக்கை முடிவுறுத்துவதாக சீனத் தூதரகம் அறிவித்ததற்கான காரணமாகும். அதாவது இலங்கை-இந்திய சுமூக உறவை உருவாக்க சீனா - இலங்கை இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நகர்வாகும்.

இரண்டாவது இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உடனடி விளைவுகள் இலங்கையை பாதித்தாலும் எதிர்கால நோக்கில் இந்தியாவை அதிகம் பாதிக்கச் செய்யக் கூடியதாகவே அமைய வாய்ப்புள்ளது. காரணம் விமான நிலையம் திறப்புக்குக்கு இந்திய இலங்கைப் பிரதமரை அழைத்த போது இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சை அனுப்பி அதன் தனித்துவத்தை அவமானப் படுத்தியதாகவே இந்தியா நகர்வுகள் தெரிகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சின் சந்திப்பினை பிரதமர் தவிர்த்தாரா என்ற விவாதம் ஒன்றும் முக்கியமானதல்ல. மாறாக இலங்கை மீது இத்தகைய அணுகுமுறையை இந்தியா கையாளும் இலங்கை மீளவும்' சீனாவிடமே உதவி பெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படும். ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியும் அத்தகைய சூழலாவேயே சீனாவின் கைகளுக்குள் அகப்பட்டது. அத்தகைய நிலையே மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கான அனுபவங்களை முன்னிறுத்தி முடிபுகளை மேற்கொள்வது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் அவசியமானது.

எனவே இலங்கையின் நிதியமைச்சரின் இநட்திய விஜயம் அதிக நெருக்கடியையும் பிராந்திய மட்டத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவே தெரிகிறது. இதனால் முழுமையாக சீனா-இலங்கை உறவு புதிய திசையை நோக்கி நகர சூழல் இருப்பதாகத் தோன்றுகிறது. அதனை நோக்கி இலங்கையையும் தற்போதைய ஆட்சியாளர்களையும் நகர்த்தும் என்பது கடந்த கால அனுபவமாகும். இதே நேரம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு நெருக்கடியுடன் அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அழைப்பினை நிராகரித்துள்ளமையும் அதன் விளைவுகளும் இலங்கை -இந்திய உறவில் அதிக முக்கியத்துவம் பெறும் விடயமாக அமையும் சாத்தியமுள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE