Thursday 28th of March 2024 09:36:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
முற்றுகைக்குள் முடக்கப்படும் இலங்கை இராணுவம் - நா.யோகேந்திரநாதன்!

முற்றுகைக்குள் முடக்கப்படும் இலங்கை இராணுவம் - நா.யோகேந்திரநாதன்!


'இலங்கைத் தமிழர்கள் அங்கு போய்க் குடியேறியவர்களல்ல. அவர்கள் அந்த மண்ணின் பாரம்பரியக் குடிகள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் அவர்கள் தாம் மானத்தோடு வாழ ஒரு இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள். இலங்கையிலே தங்களுடைய மண்ணிலே தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாழவேண்டுமென்று தான் கேட்கிறார்கள். அதிலே என்ன தவறு இருக்கமுடியும்? பல இலட்சக்கணக்கான தமிழர்கள் மீது ஜயவர்த்தன ஒரு யுத்தப் பிரகடனமே செய்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கிற கொடுமை இங்கேயுள்ள எமக்கும் ஆபத்து வரவிருக்கிறது என்பதற்கான அறிகுறி. ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் நிலைமைகளை, பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்'.

இது இந்திய தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் ராஜாஜி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மாற்றுக் காங்கிரஸ் அமைப்பின் தமிழ் நாட்டுத் தலைவருமான உன்னி கிருஷ்ணன் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியாகும்.

இந்திரா காந்தி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் சூழ்சிகரமான திட்டங்கள் பற்றி அனுபவபூர்வமாகத் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தார். ஜே.ஆர். பேச்சுகள் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பவில்லை என்பதைiயும் பேச்சுகளைத் கால அவகாசம் பெறும் கருவியாகப் பயன்படுத்தியவாறே தனது இராணுவத்தைப் பலப்படுத்தவும் இன ஒடுக்குமுறை மூலம் தீர்வு காண்பதிலும் அக்கறை கொண்டிருந்தார் என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார். எனவே அவர் ஜே.ஆர். விடயத்தில் எப்போதுமே ஒரு இறுக்கமான போக்கையே கடைப்பிடித்து வந்தார்.

இந்த நிலையில் இந்திரா காந்தி அம்மையாரின் இறப்பு ஜே.ஆருக்கு ஒரு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தி விட்டது. எச்.டபிள்யூ.ஜயவர்த்தன, இந்திரா காந்தி, அனுசரணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் இணைந்து தயாரித்த 'சி' அறிக்கையை அமைச்சரவை நிராகரித்து விட்டதாக ஜே.ஆர். அறிவித்தார். அத்துடன் சர்வகட்சி மாநாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்திராவின் இறப்பையடுத்து ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி திடீரெனப் பிரதமராக்கப்பட்ட நிலையில் அவர் அரசியலில் முன்னனுபவம் இல்லாதவராகவே விளங்கினார். அதன் காரணமாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக விளங்கிய பிற்போக்குச் சக்திகளின் வழிகாட்டலிலேயே செயற்படவேண்டியிருந்தது. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பாகவோ போராளி அமைப்புகள் பற்றியோ, ஜே.ஆரின் தந்திரங்கள் பற்றியோ தெளிவற்றவராகவே இருந்தார்.

இந்திரா காந்தி எவரும் வழிநடத்த முடியாத ஆளுமையும், அனுபவமும் அரசியல் தெளிவும் உள்ளவராக விளங்கினார். ஆனால் ராஜீவின் நிலை அப்படியிருக்கவில்லை. எனவே இலங்கை தமிழர் விவகாரங்களில் மட்டுமின்றி இந்திய வெளியுறவுக் கொள்கையில் கூட சில மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன.

ராஜீவ் காந்தி பிரதமரானதை அடுத்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கை விவகாரங்களைக் கையாளும் மத்தியஸ்தராக நியமிக்கப்படுகிறார்.

சர்வகட்சி மாநாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையைடுத்து அவர் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் நோக்குடன் கொழும்பு வந்து இலங்கைத் தரப்பினரைச் சந்தித்தார். அதேவேளையில் இனிவரும் பேச்சுகளில் போராளிக் குழுக்கள் கலந்து கொள்ளாவிடில் அவை எவ்வித பயனுமின்றிப் போய்விடும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சுட்டிக்காட்டினர். சிதம்பரமும் அது தொடர்பான முயற்சிகளில் இறக்கினார்.

அதேவேளையில் சர்வ கட்சி மாநாடு கைவிடப்பட்ட நிலையிலேயே இராணுவ வெறியாட்டம் முன்பை விடப் பல மடங்கு அதிகரித்து விட்டது. சுன்னாகம் சந்தைக்குள் படையினர் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயப்படுத்தப்பட்டமை, நீர் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்தில் சென்ற விமானப் படையினர் வீதியில் போனவர்களைச் சுட்டுக் கொன்றமை, ஊர்களுக்குள் புகுந்து இளைஞர்களை அடித்து நொருக்கிப் பிடித்துச் செல்லல் போன்ற இராணுவக் கொடுமைகள் வட பகுதியெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

எனவே இதுவரைப் போராளிகள் கையாண்ட போராட்ட வழிமுறைகளை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. வழமையாக கண்ணி வெடி மூலமோ, கெரில்லாத் தாக்குதல்கள் மூலமோ தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அடுத்த ஒரு வழிமுறையைத் தெரிவு செய்தனர். அதாவது படையினர் சுதந்திரமாக வெளியே நடமாடி கொலை வெறியாட்டம் போடுவதைத் தடுக்க இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதென முடிவெடுத்தனர். அவ்வகையில் பலாலி, கோட்டை, ஆனையிறவு ஆகிய முகாம்கள் முற்றுகையிடப்பட்டன.

படையினர் முற்றுகையை உடைத்து வெளிவரமுயலுவதும், போராளிகள் தடுத்து நிறுத்திப் போராடித் திருப்பி அனுப்புவதுமாக சண்டைகள் முகாம்களைச் சுற்றியே இடம்பெற்றன. எனினும் முகாம்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மேல் எறிகணை வீச்சுகளையும், வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள் என்பவற்றின் மீது விமானத் தாக்குதல்களையும் படையினர் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

ஆனால் மக்கள் பதுங்கு குழிகளை அமைத்து இயன்றளவு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

இன்னொருபுறம் இராணுவத்தினருக்கான உணவு, எரிபொருள் என்பனவற்றைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. கடல் வழிப்பாதை தரை வழிப்பாதை இரண்டும் தடுக்கப்பட்ட நிலையில் உலங்கு வானூர்தி மூலமே அவை மேலிருந்து போடப்பட்டன. அவை சேதமடைவதுடன், முகாம்களுக்கு வெளியே விழும் நிலையும் ஏற்பட்டிருந்தன.

இராணுவம் மீண்டும் மீண்டும் முற்றுகைகளை உடைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

அந்த நிலையில் படையினரைக் கையாள்வதில் அரசாங்கமும் பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இப்படியான நிலையில் இந்திய அமைச்சர் சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜே.ஆர். விரும்பாவிட்டாலும் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இலங்கை அரசும், தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்,. ரெலோ, புளட் ஆகிய அமைப்புகளும் பூட்டானின் தலைநகரான திம்பவில் பேச்சுகளை ஆரம்பிப்பதென இந்திய மத்தியஸ்தக் குழு முன்னிலையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் 18.06.1985 அன்று இலங்கைப் படையினருக்கும் போராளிக் குழுக்களுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்துக்கு அமையப் போராளிகள் தங்கள் முற்றுகைகளை அகற்றியிருந்தனர். அவ்வாறே படையினருக்கும் தங்கள் முகாம்களுக்கிடையே சென்றுவர மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திம்புவில் முதலாம் கட்டப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 2ம் கட்டப் பேச்சுகளில் இலங்கை அரசால் ஒரு மாதிரித் தீர்வுத் திட்டம் முன் வைக்கப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. 13.07.1985 தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈரோஸ், புளட், ரெலோ என்பன இணைந்து இந்திய மத்தியஸ்தர்களிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முன் வைக்கப்படும் தீர்வுத் திட்டம் எதுவும் தமிழர் ஒரு தேசிய இனம், தமிழினத்துக்கென பாரம்பரிய வாழிட உரிமை, சுயநிர்ணய உரிமை, சகல தமிழர்களுக்கும் குடியுரிமை என்ற நாலு அம்சங்களை உள்ளடக்கியதாகவே அமையவேண்டுமெனக் கோரப்பட்டிருந் தது.

அவ்வகையில் 2ம் கட்டப் பேச்சுகள் பூட்டானின் தலைநகர் திம்புவில் 12.08.1985 அன்று ஆரம்பமாகியது.

அதில் இலங்கை அரசால் ஏற்கனவே சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியால் நிராகரிக்கப்பட்ட 'பி' அறிக்கையின் 14 அம்சங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழீழக் கோரிக்கையைக் கைவிட வேண்டும், சர்வஜன வாக்கெடுப்பு அடிப்படையிலேயே பிரதேச சபைகள் இணைக்கப்படும் என்ற இரண்டு அம்சங்களையும் த.வி.கூட்டணி முற்றாகவே நிராகரித்து சர்வகட்சி மாநாட்டை விட்டு வெளியேறியது. அதே தீர்மானங்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டமை ஒரு அப்பட்டமான ஏமாற்றாகவே பார்க்கப்பட்டது. அதேவேளையில் தமிழர் தரப்பு முன்வைத்த 4 அம்சங்களையும் இலங்கை தரப்பு பல்வேறு காரணங்களை முன்வைத்து நிராகரித்தது. 17.08.1985 வரை தொடர்ந்து பேச்சுகள் எவ்வித உடன்பாட்டுக்கும் வராமலே முடிவுக்கு வந்தது.

அதேவேளையில் திம்புப் பேச்சுகள் இடம்பெற்ற போதே 18.08.1985 அன்று போர் நிறுத்தத்தை மீறி வெளியேறிய இராணுவத்தினர் வவுனியா நூலகத்திற்குள் புகுந்து அங்கு தஞ்சமடைந்திருந்த 200இற்கு மேற்பட்ட மக்களைக் கொன்றனர். இராணுவ முகாமின் அருகிலுள்ள ஒரு மதகின் கீழ் குண்டு வெடித்ததை வைத்தே படையினர் இவ்வேட்டையை நடத்தினர். அதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென்பதுடன் திட்டமிட்டுப் படையினரே பேச்சுகளை முறியடிக்கும் முகமாக அதை மேற்கொண்டதாகக் கருதப்பட்டது.

அதேபோன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்குள் புகுந்த படையினர் காவலாளியைச் சுட்டுக்கொன்றதுடன் பலரைக் காயப்படுத்தினர். 7,000 புத்தகங்கள் அழிக்கப்பட்டன. இவ்வாறு பேச்சுகள் இடம்பெற்ற போதே இலங்கையின் அரச தரப்பால் போர் நிறுத்தம் மீறப்பட்டு வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

இவ்வாறு இலங்கை அரச படைகள் கட்டற்ற விதத்தில் இன அழிப்பு வெறியாட்டம் போட மீண்டும் போராளிகள் படையினர் மீதான தாக்குதல்களை மேற்கொண்டனர். அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படுமானால் அதற்குப் பதிலடியாகப் பொது மக்களைக் கொன்று குவிப்பதை இராணுவம் ஒரு வழிமுறையாகப் பின்பற்றியது. இந்நிலையில் மீண்டும் படையினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவை போராளிகளுக்கு ஏற்பட்டது.

அவ்வகையில் கோட்டை, பலாலி, கிளிநொச்சி, கொக்காவில் ஆகிய முகாம்கள் போராளிகள் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டன. காரைநகர் கடற்படை முகாம் மீது நடத்தப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தாக்குதலும் ரெலோவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டமையும் அரசாங்கத்துக்கும் அரச படைகளுக்கும் பெரும் அதிர்ச்சியையூட்டின.

இந்த நிலையில் இத்தாலியில் 'சியாமா செட்டி' விமானம் இலங்கை விமானப் படைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு விமானக் குண்டு வீச்சுகள் அதிகரிக்கப்படுகின்றன.

இன்னொருபுறம் கோட்டையை விட்டு மீண்டும் மீண்டும் வெளியேற முயலும் இராணுவம் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறது.

முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஏற்கனவே தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை முன் வைத்து திம்புப் பேச்சுகளை ஜே.ஆர். குழப்பினாலும் கூட போராளிகள் தரப்பாலேயே பேச்சுகள் தொடரமுடியாமற் போனதென ராஜீவ் காந்தி நம்ப வைக்கப்பட்டார். இத்தகைய கருத்தை உருவாக்குவதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ராஜீவ் காந்திக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். போர் நிறுத்தமும் போராளிகளாலேயே மீறப்பட்டதென அவர் நம்ப வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 15.11.1980 அன்று பெங்கள10ரில் தெற்காசிய நாடுகளின் சார்க் மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ள ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் சென்றிருந்தார். இந்நாட்களில் இலங்கை விவகாரம் தொடர்பாக ராஜீவ் காந்தி, ஜே.ஆருடன் பேச்சுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் தனக்கு அனுசரணையாக எம்.ஜி.ஆரைக் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

அப்போது எம்.ஜி.ஆர். இலங்கையில் வலிமையான இயக்கம் விடுதலைப் புலிகளெனவும், அவர்களே களத்தில் நின்று போராடுகிறார்கள் எனவும் அவர்கள் சம்மதம் இல்லாத எந்தவொரு தீர்வும் பயன்தராது எனவும் தெரிவித்து அவர்களையும் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்திய மத்திய அரசு விடுதலைப் புலிகளையும் அழைக்க முடிவெடுத்தது.

இவ்வாறு புலிகளை அழைத்துச் செல்ல மத்திய அரசு முயன்றபோது அவர்கள் இலங்கையில் இராணுவத்துக்கு எதிராக முற்றுகை நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.

இலங்கை இராணுவம் போராளிகளின் முற்றுகைகளினால் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் போன்றவற்றுக்கே பற்றாக்குறை நிலவிய நிலையில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியது.

இந்த நிலையிலேயே பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், திலகர் ஆகியோர் பெங்கள10ருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE