Thursday 28th of March 2024 06:02:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனத்தூதுவரின் வடக்கு விஜயமும் இராஜதந்திரப் பின்னணியும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

சீனத்தூதுவரின் வடக்கு விஜயமும் இராஜதந்திரப் பின்னணியும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கையின் நிதியமைச்சர் அவசர நிகழ்ச்சி திட்டங்களோடு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியது பற்றி கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கான சாதகமான பதிலை இந்தியா உடனடியாக வழங்கவில்லை என்றும் அதனால் நிதியமைச்சரின் பயணம் வெற்றிகரமாக அமையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டமை கவனத்திற்குரியது. ஆனால், New Economy Daily எனும் பத்திரிகை டிசம்பர்-11(2021)அன்று வெளியிட்ட தகவலில் இலங்கையின் கோரிக்கைக்கு உதவும் விதத்தில் இந்தியா அவசர பொதி ஒன்றை தயாரிப்பதாகவும், அதில் பொருளாதார நெருக்கடியையும், உணவு மற்றும் மருத்துவ வசதிகளையும், எரிசக்தி பாதுகாப்பையும், நாணய நெருக்கடியை சீர்செய்வதற்கான பொதியாக அமையுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அச்செய்தியை பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வெளிவந்துள்ளது. இதேநேரம் இலங்கைக்கான சீன தூதுவர் ஹி சென் ஹெங் வடக்குக்கான இரு நாள் விஜயமாக டிசம்பர்-15(2021)அன்று வருகை தந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இலங்கைத்தீவு பொறுத்த கொள்கையின் எதிரெதிர் முனையங்களாக செயற்படும் சந்தர்ப்பத்தில் அவரது விஜயம் வடக்குக்கானதாக அமைந்துள்ளது. சீனத் தூதுவரது விஜயம் வடக்கு கிழக்கின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும் நகர்வொன்றை பிரதிபலிப்பாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் சீன-இலங்கை உறவில் காணப்படும் நெருக்கத்தையும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய எதிர்வினையை தேடுவதாகவும் அமையவுள்ளது.

முதலில் சீனத் தூதுவர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயத்தை அவதானிப்போம். தமிழ் சமூகத்தினருடன் சீனா உறவை வளர்த்துக்கொள்வதற்கு விரும்புவதற்கு பின்னால் எவ்வித இரகசிய திட்டங்களும் இல்லை. யாழ்ப்பாணத்தீவுகளில் சீன நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள மின்உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையெதுவும் இல்லை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் டான் குழுமத்துடனான பிரத்தியோக சந்திப்பில் தெரிவித்தார். அக்கலந்துரையாடலில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுடன் உறவுகளை வளர்ப்பதில் சீனா அக்கறையுடன் உள்ளது. அதேவேளை வடக்கில் முதலீட்டு திட்டங்களை மேற்கொள்வதிலும் சீனா ஆர்வமாக உள்ளது. எனினும் சீனாவின் இந்த விருப்பங்களை சில தரப்புக்கள் சந்தேகத்துடன் நோக்குவது தமக்கு கவலை அளித்துள்ளதென தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்ததன் மூலம் சீனாவுக்கும் ஈழத்தமிழருக்குமான உறவை ஒரு புதிய கோணத்தில் நகர்த்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகின்றது. அதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, சீன தூதுவரின் வடக்கு விஜயத்தில் வவுனியாவிற்கு வருகை தந்த போது வன்னி கட்டளைத்தளபதியுடனான சந்திப்பும் உரையாடலும் முதன்மையாக விளங்குகின்றது. அதாவது, சீன-இலங்கை இராணுவரீதியிலான ஒத்துழைப்பும் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டது மட்டுமன்றி அத்தகைய வருகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் உத்தியோடு வன்னிப்பிராந்தியத்தினுடைய கட்டளைத்தளபதியோடு உரையாடியதன் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிரதிபலிப்பு மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட பயணமாக அமைந்திருப்பதோடு பாதுகாப்பு முக்கியத்துவத்தையும் அது வெளிப்படுத்துவதாக தெரிகிறது. பலத்த பாதுகாப்பின் மத்தியிலேயே சீன தூதுவரின் வடக்கு விஜயம் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சீனத்தூதுவர் பருத்தித்துறை முனையினை சென்று பார்வையிட்டு பொதுமக்களோடு உரையாடியதுடன் பருத்தித்துறை முனையிலிருந்து இந்தியாவிற்கான தூரத்தை கேட்டு அறிந்து கொண்ட செய்தியும் கவனத்திற்கொள்ளக்கூடியது. குறிப்பாக உலக நாடுகளெங்கும் துறைமுகங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திவரும் சீனா இலங்கையிலும் கொழும்புதுறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமன்றி பல இறங்குதுறைகளையும் துறைமுகங்களையும் விருத்தி செய்வதற்கான நிதி உதவிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அவரது பருத்தித்துறை முனை விஜயம் எதிர்காலத்தில் அதன் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை சீனா முன்னெடுக்க முனையும் என்ற செய்தியும் இதனூடாக வெளிப்படுத்தியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மூன்றாவது, சீனத் தூதுவரின் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கான விஜயம் அதிகம் பேசப்படும் ஒன்றாகவும் உரையாடப்படும் விடயமாகவும் காணப்படுகிறது. கடந்த காலங்களிலும் சீனத்தூதரகம் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு பாரியளவான நூல்களை கையளித்தமை நினைவுகொள்ளத்தக்கது. அத்தகைய நூலகத்தை அண்டிய பகுதியிலேயே இந்திய நிதி உதவியுடன் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். 1983ஆம் ஆண்டு பொது நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் அதனை முழுமைப்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பும் நிதியுதவிகளும் பாரியளவில் அமைந்திருந்ததோடு வடக்கு கிழக்குடன் இந்தியா அதிக தொடர்புகளை கொண்டுள்ளமையும் கவனத்துக்குரிய தகவலாகும். இந்தியாவின் ஒத்துழைப்புக்கு சமமாக சீனாவும் தனது பங்களிப்பினை நூலகத்திற்கு வழங்கும் நோக்குடன் தற்போதும் ஒரு தொகுதி நூல்களை வழங்கியதுடன் இணையவழி நூலகத்திற்கான யாழ்ப்பாண மாநகர முதல்வரின் விண்ணப்பத்தை பரிசீலிப்பதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

நான்காவது, இலங்கைகான சீனத்தூதுவரின் வடமாகாணத்திற்கான விஜயத்தின் ஒரு அங்கமாக நல்லூர் ஆலய தரிசனமும் அமைந்திருந்தது. கொம்யூனியசத்தின் பேரால் மத எதிர்ப்புவாதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட தேசத்தின் தூதுவர் ஒருவர் சைவ மரபுக்குட்பட்ட ஆசனங்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயத்தினுள் பிரவேசிப்பதும் வழிபாடு செய்வதென்பதுவும் தூதுவரின் விஜயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அதாவது, சீன தூதுவரின் விஜயம் சீன தேசத்தின் இராஜதந்திர நகர்வாகவே தெரிகிறது. அதுவும் இந்தியாவிற்கு நிகராக செயல்படும் போக்கொன்று தெரிகிறது.

ஐந்தாவது, சீன தூதுவரின் வடக்கு விஜயத்தில் அடுத்த கட்டமாக மன்னார் மாவட்டத்துக்கு பயணம் அமைந்திருந்தது. மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டதுடன் அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்களை சந்தித்து உரையாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் மீன் பிடித்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கங்க உறுப்பினர்களை சந்தித்து சீனத் தூதுவர் உரையாடியதுடன் மீனவர்களுக்கான உதவிகளையும் வழங்கியிருந்தார். இதனை அவதானிக்கும் போது இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மாகாண மீனவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை கையாள முனையும் நகர்வாகவே தெரிகிறது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களாலும் வளச்சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர் தொடர்பில் சீனா அக்கறை கொள்வதாகவே இந்நடவடிக்கை காட்ட முயலுகிறது. ஏறக்குறைய இந்தியாவை நோக்கிய சீன தூதுவரின் நடவடிக்கை அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக பார்க்கப்பட வேண்டியதாக தெரிகிறது. இது மட்டுமன்றி வடமாகாண ஆளுநரிடம் நீர் சுத்திகரிப்பு ஐந்து மாவட்டத்திற்கான இயந்திரங்களை வழங்கியமையும் இவை அனைத்தும் ஒரு ஆரம்ப நகர்வெனக் குறிப்பிட்ட சீனத் தூதுவர் தொடர்சியாக உதவிகளும் முதலீடுகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சீன தூதுவர் வடமாகாணத்துக்கான விஜயத்தில் ஒரு பகுதியாக வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் என்பவற்றுக்கான வருகை அதிக முக்கியத்துவம் பெற்றதாக உணரப்படுகிறது. குறிப்பாக வடமாகாணத்தோடு இந்தியாவிற்கான நெருக்கமான உறவு ஈழத்தமிழர் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய உரையாடலில் இந்தியாவின் முக்கியத்துவமும் பேசப்படுகின்ற வேளையில் சீனத்தூதுவரின் வடக்கு விஜயம் அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த விஜயத்தில் தூதுவர் பயணம் செய்த இடங்களும் அப்பகுதியில் இந்தியர்களின் அதிக தொடர்புகளும் புவிசார் அரசியலாக ஈழத்தமிழர் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளும் அதிக முக்கியத்தவத்தை பெறுவதற்கான காரணமாக உள்ளது. அதாவது, இந்தியாவோடு ஈழத்தமிழருக்கு இருக்கும் அரசியல், புவிசார் அரசியல் பொருளாதார பண்பாட்டு உறவகளின் மையங்களை நோக்கி சீன தூதுவரின் விஜயங்களும் அமைந்திருக்கிறது. சீனாவுக்கும் தென்னிலங்கைக்குமான மிகநெருக்கமான உறவு இந்தியாவிற்கு அதிக பிராந்திய அரசியல் நெருக்கடியையும் இலங்கை-இந்திய உறவு தொடர்பான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. மிக அண்மையில் இந்திய முப்படை தளபதியின் மரணம் அதிக குழப்பங்களை இந்திய அரசியலிலும் இராணுவத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோக்கு நிலையிலேயே வடக்குக்கான சீன தூதுவரின் வருகையும் அது தொடர்பில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய எதிர்வினைகளும் அவதானிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஒன்று, சீனத்தூதுவர் தமிழ் சமூகத்தினருடன் உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாக குறிப்பிடுவதோடு அத்தகைய விருப்புக்கு பின்னால் எவ்வித இரகசிய திட்டங்களும் இல்லை என்கின்றார். அரசியலின் ஒரு இராஜதந்திரி இல்லை என்று குறிப்பிடுவது உண்டு என்பதை உணர்த்துவதற்கான செய்முறையென்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும் அவ்வாறு தமிழ் சமூகத்தோடு உறவு கொள்ள விரும்பும் சீனத்தூதுவர் ஈழத்தமிழர் மீது முள்ளிவாய்க்கால் துயரம் சார்ந்து எத்தகைய வருத்தமும் தெரிவிக்காதது மட்டுமன்றி பாரிய ஆயுத தளபாடங்களையும் போர் உத்திகளையும் பொருளாதார உதவிகளையும் போர்புரியும் காலத்தில் வழங்கியது மட்டுமன்றி ஜெனிவா அரங்கில் தமிழ் மக்களுக்கான எத்தகைய கரிசணையும் கொள்ளாது செயற்பட்டது மட்டுமன்றி அவை அனைத்தும் சீனாவின் தேசிய நலனுக்கானது என்று ஏற்றுக்கொண்டாலும் சமகாலத்தில் தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கான நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வு திட்டத்தை பற்றிய எத்தகைய உரையாடலையும் தூதர் வெளிப்படுத்தாது அவரது உள்நோக்கங்களின் பிரதிமைகளாகவே தெரிகிறது. ஈழத் தமிழரது துயரமான இருப்புப் பற்றிய உரையாடலை விட்டுவிட்டு பொருளாதார அபிவிருத்தியையும் முதலீட்டையும் சீனத் தூதுவர் உரையாடுவதென்பது உள்நோக்கமுடையதே.

இரண்டு, யாழ்ப்பாணத்தீவுகளில் சீன நிறுவனத்தால் தொடங்கப்பட உள்ள மின் உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையேதும் இல்லை என்கின்றார். அதாவது சீனத்தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில் அத்தகைய செய்தி வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டது. அவ்வாறெனில் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் சீனத்தூதரகம் அத்தகைய செய்தியை இந்திய-அமெரிக்கத் தரப்புக்களை கையாளுவதற்காக வெளியிட்டது என்ற சந்தேகம் உறுதிப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச இலங்கையின் உண்மையான நண்பன் சீனா எனக்குறிப்பிட்டதையும் யதார்த்தமானது என்பதையே இத்தகவல் உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் நிதியமைச்சரின் இந்திய பொருளாதார உதவிகளுக்கான விஜயம் மட்டுமன்றி அண்மைக்காலத்திலும் இந்திய-அமெரிக்க தரப்பை நோக்கி தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அணுகுமுறை சீனாவின் ஒத்தழைப்புடன் நகர்த்தப்படுகின்றதா என்ற சந்தேகமும் இச்செய்திக்கூடாக உறுதிப்படுத்தப்படுகிறது.

மூன்று, சீனத்தூதுவர் டான் குழுமத்துடன் உரையாடுகையில் வடக்கில் முதலீட்டு திட்டங்களை மேற்கொள்வதில் சீனா ஆர்வமாக உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, கடலட்டை முதலீட்டு திட்டத்தை இரகசியமாக மேற்கொண்ட சீனா அதன் உற்பத்திகளையும் இலாபங்களையும் தமது நிறுவனங்களுக்கு உரித்தாக்கிய சீனா மீளவும் முதலீடு பற்றிய செய்தியை முன்னிறுத்தியுள்ளது. இதுவொரு ஆரோக்கியமான உரையாடலாக அமைகின்ற போதிலும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஈழத்தமிழர் அரசியலோடு உரையாடப்பட வேண்டிய விடயங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக வடக்கு-கிழக்கு நோக்கி தென்னிலங்கை அதிகார வர்க்கத்தின் நில அபகரிப்பும் குடியேற்றங்களும் பௌத்த மத விஸ்தரிப்பும் ஒருபுறம் மாறுபட மறுபக்கத்தில் முதலீடு என்ற பேரில் வளங்கள் சூறையாடப்படுவதும் உழைப்புக்கும் உற்பத்திக்கும் வாய்ப்பில்லாத சூழலை உருவாக்குவதும் ஈழத்தமிழரின் அரசியல் பொருளதார பண்பாட்டு இருப்பினை சிதைப்பதாகவே தெரிகிறது.

இவற்றை எதிர்கொள்ளும் அரசியல் பலத்தோடு ஈழத்தமிழரின் இருப்பையும் சீனர்கள் உத்தரவாதப்படுத்துகின்ற சூழலியே முதலீடுகளையும் அரசியல் பண்பாட்டு உறவுகளையும் கட்டமைக்க முடியும்.

எனவே, சீனத்தூதுவரின் விண்ணப்பங்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமானவை. ஆனால் அவற்றை கட்டமைக்கவோ? பேணவோ? பாதுகாக்கவோ? ஈழத்தமிழரிடம் தெளிவான கட்டுமானமோ அரசியல் இப்போதில்லை. அத்தகைய அரசியல் இருப்புக்கான உத்தரவாதங்களை சீனா முன்மொழிந்துவிட்டு அதற்கான வாய்ப்புக்களை அங்கீகரித்துவிட்டு அதன் பின்னர் உறவு கொள்வதும் முதலீடு செய்வதும் ஆரோக்கியமானதாக அமையும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE