Thursday 20th of January 2022 07:35:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
வீட்டுக்கு வீடு எரிவாயு வெடிப்பு அச்சம்! - நா.யோகேந்திரநாதன்!

வீட்டுக்கு வீடு எரிவாயு வெடிப்பு அச்சம்! - நா.யோகேந்திரநாதன்!


எப்போது, எந்த வீட்டில் எரிவாயு வெடிப்பு ஏற்பாடுமோ, அதனால் என்னென்ன ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இங்கங்கெனாதபடி நாடு முழுவதும் நிலவி வருகிறது. கடந்த 48 நாட்களில் மட்டும் 88 வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அடிப்படையில் சமையலை ஆரம்பிக்க சமையலறையின் உள்ளே நுழையும்போதே உயிரச்சத்துடன் செல்லவேண்டிய அவல நிலை நிலவுகிறது.

ஒரு காலத்தில் வசதியுள்ள சில குடும்பங்களின் பாவனைப் பொருளாயிருந்த எரிவாயு இன்று சாதாரண மக்களின் பாவனைப் பொருளாகி விட்டது அடுப்பெரிக்கும் சாதனங்களாகப் பனைமட்டை, கொக்காரை, பன்னாடை என்பன விளங்கிய வடபகுதிக் கிராமங்களின் சமையலறைகளைக் கூட எரிவாயு அடுப்புகள் ஆக்கிரமித்து விட்டன. கொக்காரையும் பன்னாடையும் மட்டைகளும் கறையான்களின் தீனியாகி விட்டன.

விறகு தேடவேண்டிய சிரமம், சமையலறைச் சுவர்கள் புகைப்பிடித்து அழகு கெடல், கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால் விரைவாகச் சமையல் முடிக்கவேண்டிய தேவை, வேகமாகி வரும் நகரமயமாக்கல் என்பன எரிவாயுவை எமது கட்டாயத் தேவையாகிவிட்டன.

இந்த நிலையில் எரிவாயு என்பது கிராமம், நகரம் என்ற பேதமின்றி பெருமளவு மக்களின் தவிர்க்கமுடியாத தேவையாகிவிட்டது.

இப்படியான ஒரு சூழலில் தான் திடீரென எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் எரிவாயுவுக்காக கடைக்குக் கடை வரிசையில் நிற்கும் நிலை தோன்றியது. அப்படியிருந்தும் பலர் எரிவாயு கிடைக்காமலே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் மண்ணெண்ணெய் அடுப்புகளைக் கொள்முதல் செய்ய அவற்றின் விலைகளும் பல மடங்கால் அதிகரித்து விட்டன. இப்படியான நிலையில் பட்டினி கிடக்க வேண்டி வருமோ என்ற அச்சம் எங்கும் பரவ ஆரம்பித்தது.

இந்த நிலையில் எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், எரிவாயு சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து விட்டதால், வழமையான விலைக்கு எரிவாயுவை வழங்க முடியாதெனத் தெரிவித்து விட்டனர். நீண்ட இழுபறியின் பின்பு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. தற்சமயம் அதிகரிக்கப்பட்ட விலையிலேயே எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது.

எரிவாயு கொள்கலன்கள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு வெடிப்புகள் இடம்பெற ஆரம்பித்தன. ஆனால் எரிவாயு நிறுவனங்களோ தங்களின் எரிவாயு உரிய தரத்திலேயே இருப்பதாகவும், எரிவாயு அடுப்புகள், குழாய்கள் என்பன பழுதடைந்தமையாலேயே வெடிப்புகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்துவிட்டன.

இந்த நிலையில்தான் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்தை நாடியது. அதனையடுத்து எரிவாயுவின் உள்ளீடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விடயம் தரநிர்ணய சபையினால் இனம் காணப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

தற்சமயம் லிற்றோ நிறுவனம் தரநிர்ணயத்துக்கு ஏற்ற வகையிலேயே தாங்கள் எரிவாயுவை விநியோகிக்க உள்ளதாகவும், அவற்றின் உள்ளீடுகள் தொடர்பாகக் கொள்கலன்களில் “ஸ்டிக்கர்” ஒட்டப்படுமெனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் பிரச்சினை இத்துடன் சீரமைந்துவிடவில்லை.

பங்களாதேஷிலிருந்து கொண்டு வரப்பட்ட 3200 தொன் எரிவாயு துறைமுகத்தில் வைத்துப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அது தரமற்றதெனக் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

அதேவேளையில் மாலைதீவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2,000 தொன் எரிவாயுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதுவும் தரமற்றதென அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தரநிர்ணய சபையால் அங்கீகரிக்கப்படாத எரிவாயு கொள்கலன்கள் அனைத்தையும் விநியோகத்திலிருந்து நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

எனினும் “லிற்றோ“ நிறுவனம் இன்னும் மூன்று நாட்களுக்குப் போதுமான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அப்படியானால் அடுத்த கட்டம் என்ன?

எரிவாயு தொடர்பாகப் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

நாட்டை பெரும் வர்த்தக நிறுவனங்களும் இறக்குமதியாளர்களும் வழி நடத்துகிறார்களா அல்லது ஜனாதிபதி, அமைச்சர்கள் வழி நடத்துகின்றனரா என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக்காலமாக நடந்து வரும் சம்பவங்கள் இப்படியான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. பாவனைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். உடனே சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். சர்வதேசச் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பால் இறக்குமதி செய்யமுடியவில்லை என வர்த்தகர்கள் தெரிவிப்பார்கள். வர்த்தமானி திரும்பப் பெறப்படும் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பவர்கள் இறக்குமதியாளர்களும் வர்த்தகர்களுமே மாறி விடுவர்.

அரிசி, சீனி, கோதுமை, பால்மா மட்டுமின்றி மரக்கறிகள் உட்பட்ட பாவனைப் பொருட்கள் வரை விலை அதிகரிப்பு மக்களால் சகிக்க முடியாதளவுக்கு ஏறிவிட்டது. இதேநிலை அண்மையில் எரிபொருளுக்கும் ஏற்பட்டது. அதன் விலையும் அதிகரித்தது. ஆனாலும் அதன் தரமும் குறைக்கப்பட்டது. அதன் பலன் நாளாந்தம் எரிவாயு விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகிவிட்டது.

நாட்டு மக்கள் ஒரு பயங்கர நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய இன்றைய நிலையில் இதற்கு யார் பொறுப்பு? இதைத் தீர்ப்பதற்கான மார்க்கம் என்ன?

அரசாங்கத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தி அரசாங்கத்தைச் செல்வாக்கிழக்க வைக்கும் சில சக்திகள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றனவா அல்லது அந்த சக்திகள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் வேறு உள்நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 1.5 வீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எப்படியிருப்பினும் இன ஒடுக்குமுறைகளை முன்தள்ளி மக்கள் விரோத நடவடிக்கைகளின் தாக்கத்தை மறைக்கும் தந்திரம் வெற்றிபெறாது என்பதை இன்றைய ஆட்சியாளர்களும் அவரின் ஆதரவாளர்களும் உணர அதிக நாட்கள் எடுக்கப் போவதில்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

21.12.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE