Thursday 20th of January 2022 09:02:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
டிசெம்பர் 25ம் ஏப்ரல் 21ம்! - நா.யோகேந்திரநாதன்!

டிசெம்பர் 25ம் ஏப்ரல் 21ம்! - நா.யோகேந்திரநாதன்!


நத்தார் சிறப்புக் கட்டுரை

டிசெம்பர் 25 – உலகம் முழுவதுமுள்ள கிறீஸ்தவ மக்கள் தமது தேவகுமாரனின் பிறப்பை மகிழ்வுடன் கொண்டாடும் கிறிஸ்துமஸ் திருநாளாகும். தேவனால் ஒதுக்கப்பட்ட மரத்தின் கனிகளை உண்ண வேண்டாமென்ற தேவனின் கட்டளையை ஆதாமும் ஏவாளும் மீறியதால் அவர்களும், அவர்களின் வாரிசுகளும் பாவ நெருப்பில் தள்ளப்பட்டனர். ஆண்டவர் மனித குலத்தைப் பாவ நெருப்பிலிருந்து மீட்க தேவகுமாரனை ஜெரூசலத்திலுள்ள ஒரு மாட்டுக் கொட்டிலில் அவதரிக்க வைத்தார். யேசுபாலன் பிறந்த அந்தப் புனித நாளை கிறீஸ்தவ மக்கள் உயர்ந்த வழிபாட்டுக்குரிய நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஏப்ரல் 21

உலக மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்க உதித்த யேசுநாதரின் மனித குலத்தை விமோசனம் அடையும் வழி காட்டிய புனித போதனைகளை பொறுக்காத அதிகார பீடம், அவரைக் குற்றவாளியாக்கிச் சிலுவை சுமக்க வைத்து இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறைந்து கொல்கின்றனர். ஆனால் தேவகுமாரன் 3ம் நாள் உயிர்த்தெழுந்து தமது சீடர்களுக்குக் காட்சி கொடுத்துவிட்டு வானேகுகிறார். யேசுநாதர் உயிர்தெழுந்த அந்த உன்னத நாள் ஆராதனையின் போதுதான் இலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 250இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துமிருந்தனர்.

எவ்வாறு டிசெம்பர் 25 உலக மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் அன்பையும் விதைத்ததோ அதேபோன்று ஏப்ரல் 21 வரலாற்றின் மறைக்க முடியாத, மறக்கமுடியாத கறையைப் பூசிவிட்டது.

முழுஉலகையுமே கலங்க வைத்த, தேவகுமாரனின் உயிர்த்தெழுகையை நினைவு கூர்ந்து ஆராதனை மேற்கொண்ட அந்தப் பொழுதில் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பெரும் அநீதி கடந்த இரு வருடங்களாக தேவபாலன் அவதரித்த டிசம்பர் 25யும் இலங்கையில் முழு நிறைவான மனதுடன் கொண்டாட முடியாத அவல நிலைக்குத் தள்ளிவிட்டது.

எனவே இவ்வருட கிறிஸ்மஸ் புனிதநாளின் ஆராதனையும் உயிர்த்தெழுகை நாளில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைத் தேடுகிறது.

யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது பிதாவிடம் “அவர்கள் தம்மையறியாமல் செய்யும் பாவத்தை மன்னியுங்கள்” என ஆண்டவரிடம் தன்னைக் கொன்றவர்களை மன்னிக்கும்படி வேண்டினார்.

எமது மக்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஏன் இப்பெரும் கொலை வெறியாட்டத்தை நடத்தினர். அவர்கள் யார்? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதையே அறிய விரும்புகின்றனர்.

கடந்த 2 ½ வருட காலத்தில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இவை எதுவுமே பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையையோ திருப்திப்படுத்துவதாக இல்லை.

இச்சம்பவத்தைத் தடுத்து நிறுத்தத் தவறினர் என்ற குற்றஞ்சாட்டி முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுப் பின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுப் பின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தனர். வகுப்புகளில் பங்கு பற்றினர் என்ற குற்றச்சாட்டுக்களின்போது பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இச்சம்பவங்களின் சூத்திரதாரிகள் யார் என்பதோ இக்குண்டுத் தாக்குதல்களையும் ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தும் வகையில் வழி நடத்தியவர் யார் என்பதோ இதுவரைக் கண்டு பிடிக்கப்படவில்லை. அல்லது கண்டு பிடிக்கப்பட்டாலும் வெளிப்படுத்தப்படவில்லை.

எனவேதான் அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் அரச தரப்பின் மீது கடும் குற்றங்களைச் சுமத்தி வருகின்றார். விசாரணைகள் நேர்மையான முறையிலும் பக்கச் சார்பற்ற முறையிலும் அமையவில்லை என்ற தொனியிலேயே அவரின் குற்றச்சாட்டுகள் அமைவதைக் காணமுடியும்.

அதேவேளையில் சிலாபம் மறைமாவட்ட அருட்தந்தை சிறில்காமினி ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவருக்கு தெரிந்திருக்கக்கூடும் என ஒரு சந்தேகத்தை வெளியிட்டிருந்தார். அது பற்றி விசாரணை நடத்த அவர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் அப்படியே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படும் ஒருமுறை அமுலில் உள்ளதால் அவர், தான் கைது செய்யப்படக்கூடாதென நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்பே விசாரணைக்கு முகம் கொடுத்தார். அப்படியிருந்தும் அடுத்தடுத்த 3 நாட்கள் தொடர்ந்து நீண்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

எப்படியிருந்தபோதிலும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காமினி சிறில் ஆகிய ஆயர்களின் கருத்துகள் அரசாங்கத்தின் மூலம் நீதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கிறிஸ்தவ சமூகம் இழந்து விட்டதென்பதைத் தெளிவாகவே காட்டுகின்றன.

எனினும் ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற பின்பு உடனடியாக இடம்பெற்ற விசாரணைகளின் போதும், ஜனாதிபதி விசாரணைக்குழுவிலும் வெளிவந்த இரு விடயங்களுக்கு இதுவரை விடைகாணப்படாமையே ஆயர் சிறில் காமினி வெளியிட்ட கருத்துகளுக்கு காரணமெனக் கருதப்படுகிறது.

ஒன்று – சஹ்ரானின் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் மாதாந்த ஊதியம் வழங்கினர். அடுத்தது ஆலையடிவேம்பில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக முன்னாள் போராளி கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைகளின்போது அக்கொலை சஹ்ரானின் உதவியாளராலேயே மேற்கொள்ளப்பட்டதெனவும் அதற்கான பொலிஸாரின் நடமாட்டம் பற்றிய தகவல்களை இராணுவ அதிகாரிகளே வழங்கினர் என்பதும் வெளிவந்தது.

அதன் காரணமாகவே ஆயர்களும் கிறீஸ்தவ சமூகமும் விசாரணைகள் தொடர்பாக அதிருப்தி கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

எப்படியிருந்தபோதிலும் கிறீஸ்தவ மக்கள் தங்கள் புனித நாட்களை அச்சமின்றி கொண்டாடும் உரிமைக்காவே ஏங்குகின்றனர் என்பதே அடிப்படை உண்மையாகும். இதுவே இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகம் மட்டுமன்றி அனைத்து மக்களினதும் அடிப்படை அபிலாஷையாக நிலைகொண்டுள்ளது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

24.12.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE