Friday 29th of March 2024 10:22:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனா – ஈழத்தமிழர் உறவை எவ்வாறு கையாளுவது?- பேராசிரியர் கே.கணேசலிங்கம்!

சீனா – ஈழத்தமிழர் உறவை எவ்வாறு கையாளுவது?- பேராசிரியர் கே.கணேசலிங்கம்!


ஈழத்தமிழரின் அரசியல் பரப்பில் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கீய் சென் சொங் வடக்கு விஜயம் அதிக முக்கியத்துவத்தை தந்தமையை கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தது. அதிலிருந்து ஈழத்தமிழர் -சீ ன உறவு பற்றிய உரையாடல் பொதுவெளியிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சீனாவை எதிர்க்க முனைகின்ற போக்கினையும் அதன் தலைமை தந்திரோபாயமாக சீனா விடயத்தை கையாளும் உரையாடலை வெளியிட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. அத்தகைய சூழலில் சீனாவை தமிழ் தரப்பு எப்படி கையாளுவது சாதகமாக அமையும் என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சீனாத் தூதுவரின் வடக்கு விஜயத்தினைப் பற்றி குறிப்பிடும் போது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது குறித்து சீனத் தரப்பினர் எதனையும் கூறவில்லை. வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்த சீனத் தூதுவரும் அவ்வாறான கருத்துக்களைக் கூறவில்லை. போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர். சீனத் தூதுவரின் வடக்குக்கான வருகையை நாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் வெளிபடுத்திய போது சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் தாம் விரும்பவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தினையே அனேக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்த முயலுகின்றனர். அவ்வாறே தமிழ் பரப்பிலும் இந்தியப் பரப்பிலும் உள்ள ஆய்வாளர்கள் உரையாட முனைகின்றனர்.

இத்தகைய உரையாடலுக்குள் தமிழ் தரப்பானது சீனாவை எப்படி அணுகுவதென்பது பிரதான கேள்வியாகும்.

முதலாவது சீனா உலக வல்லரசாக எழுச்சியடைந்து வருகிறது. அரசியலிலும் பொருளாதார இராணுவக் கட்டமைப்பிலும் வலுவான அரசாக விளங்குவதுடன் சந்தை அமைப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு வர்த்தக ரீதியில் உலகப் பொருளாதாரத்தை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துள்ளது. ஏறக்குறைய அமெரிக்க - ஐரோப்பிய அணிக்கு நிகராக அரசியல் பொருளாதார இராணுவ வளர்ச்சியை சீனா எட்டியுள்ளது. சீனா முதல் வல்லரசாகும் எழுச்சியை அமெரிக்க -ஐரோப்பா-இந்தியக் கூட்டு தடுத்தாலும் அடுத்துவரும் தசாப்தங்களில் சீனா மேற்குலகக் கூட்டுக்கு சமதையான அரசாக விளங்கும். அத்தகைய உலக ஒழுங்கானது இருதுருவ அரசியலாக அமையவே அல்லது பலதுருவ உலக ஒழுங்காகவோ அமைய வாய்ப்புள்ளது. அதில் சீனா ஒரு தரப்பாக விளங்கும் என்பதை வரலாற்றில் தவிர்க்க முடியாது. அவ்வாறன்றி சீனா தனிவல்லரசாக எழுச்சியடையுமாக இருந்தால் அதற்குள் ஈழத்தமிழர்கள் இயங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். அதே நேரம் சீனா ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையையோ மனித உரிமையையோ ஜனநாயகத் தன்மை பொருந்திய அரசியல் கட்டமைப்பையோ அல்லது இவை அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு அரசியல் தீர்வைப் பற்றிய முடிபை தரப்போகும் தேசமாக இதுவரை அது காட்டிக் கொள்ளவில்லை. காரணம் அது ஒரு அரசின் இறைமையை (State Sovereignty) கொண்ட ஆட்சியையோ பின்பற்றி வருகிற நாடு. ஏறக்குறைய 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசுகளின் இறைமைக் கோட்பாட்டை பின்பற்றும் அரசாக சீனா விளங்குகிறது. அதன் பொருளாதார இலக்குக்குள் சந்தையும் வர்த்தகமும் அடிப்படையானது. சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் மூலாதாரமாக பொருளாதாரமே காணப்படுகிறது. சீனா அரசுகளின் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத போக்கினை கடைப்பிடித்து வருகிறது. மார்க்சிஸமோ அல்லது சோஸலிஸமோ குறிப்பிடும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிரான எந்த அணுகுமுறையையும் சீனா வெளிப்படுத்தாது மட்டுமல்ல ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஆதரவாக செயல்பாட்டை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதற்காக ஏனைய வல்லரசு நாடுகள் தேசிய இனங்களுடன் ஒடுக்குமுறைக்கு எதிராக முழுமையான ஆதரவை வெளிப்படுதியுள்ளன என்று பொருள் கொள்ள முடியாது. ஆனால் சீனாவுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவும் மேற்குலகமும் தனது நலனுக்கு உகந்த வகைக்குள் தேசிய இனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளன. அது மட்டுமன்றி மனித உரிமை ஜனநாயகம் போன்ற அரசியல் வெளிகளை கொண்ட தேசங்களாகவும் அவை காணப்படுகின்றன.

இரண்டாவது இந்தியா புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் சமகாலத்தில் கொண்டுள்ள நாடாக விளங்குகிறது. இந்து சமுத்திரத்தில் நிலையான இருப்பினை கொள்வது மட்டுமன்றி அமெரிக்க - ஐரோப்பிய அணியுடனான நெருக்கத்தையும் இந்தோ - பசுபிக் உபாயத்தின் பிராதன நாடுகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது. ஆனால் ஈழத்தமிழரது அரசியலில் அதிக பாதிப்புகளை மேற்கொண்ட தேசமாகவும் முள்ளிவாய்க்கால் துயரத்தை பக்கபலமாக நின்று செயல்படுத்திய நாடாகவும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டம் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. பரஸ்பரம் இரு தரப்பும் இத்தகைய விவாதத்தில் அதிக இழப்புக்களை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் இவை அனைத்தும் அரசியலில் வரலாறுகளே. இத்தகைய வரலாற்றிலிருந்து அனுபவங்களை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் ஈழத்தமிழர்களும் இலங்கைத் தீவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமானவையே. ஈழத்தமிழர் இருப்பென்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமானதே. தென் இலங்கை இந்தியாவுக்கு எதிரானதாகவே எப்போதும் செயல்பட்டுவருகிறது. அவ்வப்போது இந்தியாவுடன் நெருக்கம் எனக் காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் முரண்பாடான உறவையே கொண்டுள்ளது. அந்த வகையில் தென் இலங்கையின் அணுகுமுறை ஒன்றும் தவறானதல்ல. அது தனது இருப்பையும் தேசத்தையும் பாதுகாக்கும் கொள்கையில் இயங்குகிறது.

மூன்றாவது மேற்குலகச் சூழலும் இந்துசமுத்திரப் பிராந்திய நிலையும் சீனாவுக்கு எதிரான திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இலங்கைத் தீவிலிருந்து சீனாவை அகற்றுதல் என்பது மேற்கு உட்பட்ட இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளது. அதற்கான கட்டமைப்புகளையும் கூட்டுப்பாதுகாப்பு வழிமுறைகளையும்' இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஏற்படுத்தி வருகிறன. குவாட்-ஒன்று இரண்டு (GUAD-I,II) மற்றும் ஆக்குஷ் (AUKUS) உடன்படிக்கை என்பவை மட்டுமன்றி தற்போது ஐரோப்பிய யூனியன் கட்டமைத்துள்ள உலகளாவிய நுழைவாயில் (GLOBAL GATEWAY) சீனாவுக்கு எதிரானவையே.இரண்டாம் உலக போருக்கும் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கினை மேற்குலகம் கூட்டுப் பாதுகாப்பினூடாகவே மேற்கெபாண்டு வெற்றி கண்டது. சோவியத் யூனியனின் தோல்வி அத்தகைய மேற்குலகத்தின் கூட்டுப் பாதுகாப்பிலேயே நிறைவேறியது. சீனாவும் ரஷ்சியாவும் மேற்குலக கூட்டுப் போன்றதல்ல. இந்தியாவுடனான ரஷ்சியாவின் உறவு சீனாவை விட பலமானது. எனவே மேற்கின் கூட்டுடன் ஒப்பிட முடியாது சீன-ரஷ்சியக் கூட்டை.

நான்கு ஈழத்தமிழ் தலைமைகளின் அரசியல் தீர்மானங்கள் சீனாவை பூகோள அரசு என்ற அடிப்படையில் அணுகக் கூடியதான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. புவிசார் அரசாக இந்தியாவையும் பூகோள அரசுகளில் ஒன்றாக சீனாவையும் ஈழத்தமிழர் நோக்குவது பொருத்தமான நடைமுறையாகும். சீனாவை முற்றாக எதிர்ப்பதை விடுத்து அதன் அணுகுமுறையில் ஈழத்தமிழர் தமது நியாயமான கோரிக்கைக்கு இசைவுபடுத்த முயற்சிப்பது அவசியமானது. கடந்த காலத்தில் அந்நாடு ஈழத்தமிழருக்கு எதிராக தென் இலங்கையுடன் இணைந்து மறைமுகமாக இழைத்த துயரத்தை கைவிட்டுவிட்டு சமகாலத்தில் ஈழத்தமிழரது கோரிக்கைக்கு செவிசாய்க்க வைக்க முயலுதல் பொருத்தமானதே. அத்தகைய முயற்சி சாத்தியமாகிறதோ இல்லையோ முக்கியமல்ல. அத்தகைய வெளியை திறப்பது அவசியமானது. அது ஒரு அரசியல் உரையாடல் மட்டுமே. அதற்காக இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றே அல்லது சீனாவிடம் சரணடைய வேண்டும் என்றோ பொருள் கொள்ள வேண்டியதில்லை. எப்படி சீனாவின் கால்களில் நின்று கொண்டு தென் இலங்கை இந்தியாவை நகர்த்துகிறதோ அதே போன்று இந்தியாவின் அருகில் நின்று கொண்டு சீனாவை நகர்த்துவதே ஈழத்தமிழருக்கான வழிமுறையாகும்.

எனவே ஈழத்தமிழர் சீனா பொறுத்து அச்சமோ அதிருப்தியோ கொள்ள வேண்டியதில்லை. சீனா ஒரு பூகோள அரசு. இந்தியா புவிசார் அரசாகவும் பூகோள அரசாகவும் உள்ளது. அமெரிக்கா ஐரோப்பா பூகோள அரசுகளாகவே நோக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு ஊடாகவே ஈழத்தமிழர் பூகோள அரசுகளை அணுகுவது ஆரோக்கியமான அரசியலாக அமையும். 1962 இல் தந்தை செல்வா சீன-இந்திய போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் இளைஞர்களை திரட்டி போருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. அப்படியான வரலாற்றிலிருந்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE