Wednesday 24th of April 2024 09:10:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங்கைக்கு ஒரு சாபக்கேடு! - நாடாளுமன்றில் ரிஷாத் எம்.பி. ஆவேசம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங்கைக்கு ஒரு சாபக்கேடு! - நாடாளுமன்றில் ரிஷாத் எம்.பி. ஆவேசம்!


"பாதுகாப்பு அமைச்சர் நினைத்தால் கையொப்பத்தை இட்டு சந்தேகம் என்று சிறையில் வைக்க முடியும் என்ற இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு. இந்தச் சட்டத் திருத்தத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் நாம் காணவில்லை. இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே காலத்தின் தேவை."

- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய ரிஷாத் எம்.பி மேலும் கூறியதாவது:-

"நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான திருத்தத்தை நான் வாசித்துப் பார்த்தேன். அதில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் நான் காணவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம்தான் அதாவது, சந்தேகநபர் ஒருவரை மூன்று மாத காலம் என்ற அடிப்படையில், 18 மாத காலம் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை 12 மாதங்களாகக் குறைத்துள்ளனர். இது மாத்திரம்தான் நாம் இங்கே காண்கின்ற மாற்றமாகும்.

ஆனால், அதன் பின்னர், பிரிவு 7 இன் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களாக இருந்தால், வழக்கு முடியும்வரை அவர்களை சிறையில் வைக்க முடியும். எந்தவொரு நீதிமன்றத்துக்கும் அதன் பிறகு பிணை வழங்கும் அதிகாரம் கிடையாது. அவ்வாறான பாணியிலேதான் இந்தத் திருத்தம் இருக்கின்றது. எனவே, சுமார் 18 அல்லது 20 வருடங்களாக தமிழ் இளைஞர்கள் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்கள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் அல்லது வழக்கு முடியாமல் சிறையிலே வாடுகின்றனர்.

நான் சிறையில் இருந்தபோது இதனைக் கண்ணால் கண்டேன். ஆயுதம் ஏந்திய போராளிகள் பலர் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சமூகவலைத்தளங்களில் சில விடயங்களைப் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, வருடக் கணக்கில் சிறையில் உள்ளனர். அவ்வாறனவர்களுக்கு இந்த திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

சஹ்றான் என்ற நயவஞ்சகன் செய்த பாதகச் செயலால், முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிற்கின்றது. பொருளாதார ரீதியிலும் பல்வேறுபட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

இருபது வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தைத் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்யும் என்னையும், எந்தவிதமான காரணமும் இன்றி பல மாத காலம் சிறையில் அடைத்தனர். குண்டுத் தாக்குதலைக் காரணமாக வைத்து இந்த நடவடிக்கையை எடுத்தனர். எனவே, இந்தச் சட்டத்துக்கு எல்லோருமே பலியாகி வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் நினைத்தால் கையொப்பத்தை இட்டு, சந்தேகம் என்று சிறையில் வைக்க முடியும் என்ற இந்தச் சட்டம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.

அத்துடன், "ஒரே நாடு, ஒரே சட்டம்" என்ற செயலணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைவரைத் தயவு செய்து மாற்றுங்கள். அவரை வைத்து எதிர்காலத்தில் அரசியல் செய்யலாம் என நீங்கள் நினைத்தால் அது ஒரு பெரிய ஆபத்தை உருவாக்கும். அத்துடன், சிறுபான்மையை அச்சப்படுத்துவதற்காகவும், பெரும்பான்மையைச் சந்தோசப்படுத்துவதற்காகவும் இவ்வாறான மோசமான கைங்கரியங்களைச் செய்ய வேண்டாம் எனக் கோருகின்றேன்.

மேலும், “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணி நாட்டுக்கு அவசியம் என நீங்கள் கருதினால், நல்லதொரு தலைவரை நியமித்து, எல்லா இனங்களையும் பாரபட்சமின்றி நடத்துவதற்கான செயன்முறைகளை மேற்கொள்ளுங்கள். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE