Thursday 20th of January 2022 07:56:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைத்தீவு இந்தியாவின் அயலவராகவும் நண்பராகவும் தொடர்ந்தும் இருக்குமா?  - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இலங்கைத்தீவு இந்தியாவின் அயலவராகவும் நண்பராகவும் தொடர்ந்தும் இருக்குமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


நாடுகளுக்கிடையிலான இராஜீக உறவில் அரசாங்கங்கள் மட்டுமன்றி தனிமனித நட்புகளும் உறவுகளும் நிறுவனங்களும் பங்களிப்புச் செய்யக் கூடியவையாக காணப்படுகின்றன. அந்த வகைக்குள்ளேயே இலங்கை தற்போதைய ஆட்சியாளரின் நெருக்கமான நண்பனாக இந்திய ஜனதாக் கட்சியின் தலைவரும் இந்திய அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு மிக்கவருமான சுப்பிரமணியம் சுவாமி காணப்படுகின்றார். இலங்கை - இந்திய நட்பினை கட்டமைப்பதில் கனதியான நகர்வுகளை தென் இலங்கைக்காக செய்யும் ஒருவராக விளங்குகிறார். 2015 இல் அதிக பிரயத்தனங்களை எடுத்து தோற்றுப் போனாலும் அவரது முயற்சி தற்போதைய ஆட்சியாளருக்கானதாகவே அமைந்திருந்தது. தென் இலங்கை உள்நாட்டிலும் பிராந்திய சர்வதேச மட்டத்திலும் நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் அயலவராக கைகொடுக்கும் நட்பராக சுவாமி விளங்குகிறதை அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும் இலங்கை - இந்திய உறவின் போக்கில் நிலவும் யதார்த்தமான சூழலை தேடுவதாக அமையவுள்ளது.

நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இம்மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்பட்'ட கலந்துரையாடலுக்கு அமைய இலங்கைக்கு நீண்டகால மற்றும் மத்தியகால ஒத்துழைப்புகள் கிடைக்கவுள்ளதாக வருட இறுதி விருந்துபசாரத்தில் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது உணவு சுகாதார மருத்துவ பாதுகாப்பு எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் செலாவணி பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென இந்திய உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்ப்பட்டுள்ளது. அதே நேரம் இலங்கைக்கு இந்தியாவால் பத்து பில்லியன் டொலர் கடனை வழங்குவதன் மூலம் சீனாவுக்கு ஒரு சகா கிடைப்பதைத் தடுக்கலாம் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடும் போது இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவையெனக் கருதினால் தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கடன் வழங்க வேண்டும் அல்லது சீனாவுக்கு இளைய சகா ஒருவர் கிடைப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மோடி அரசாங்கம் பல வெளிவிவகாரக் கொள்கைளில் தோல்வியடைந்துள்ளது. இலங்கை இன்னொன்றாக இருக்க வேண்டாம் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த இரு வாதங்களும் அதிக முக்கியத்துவத்தை இலங்கை-இந்திய உறவில் ஏற்படுத்தவுள்ளன. குறிப்பாக இலங்கையின் நிதி அமைச்சர் மீளவும் இந்தியாவுக்கு விஜயம் செய்யத் தயாராக உள்ள நிலையில் இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதை இந்தியத் தூதுவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது இலங்கை -இந்திய உறவை பலப்படுத்துவதுடன் சீனாவுக்கு எதிரான உபாயங்களை இந்திய - இலங்கை உறவின் மூலம் வகுக்க வேண்டிய பக்கங்களை சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் தெரியப்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது. இவற்றை சற்று விரிவாக நோக்குவது தேவையாக உள்ளது.

முதலாவது தென் இலங்கை சீனாவை நெருக்கமான நட்பு நாடாக முன்னிறுத்திக் கொண்டு தெளிவான ஒர் அரசியலை நிகழ்த்திவருகிறது. அத்தகைய அரசியல் மூலமே இந்தியாவை கையாண்டுவருகிறது. அதனை சுப்பிரமணியம் சுவாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான இந்திய - சீன உறவானது பத்து பில்லியன் கடனிலேயே தங்கியுள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. அதாவது கடன் கொடுத்தால் மட்டுமே இந்திய - இலங்கை நட்புறவு சாத்தியமாகும் அல்லாது விட்டால் சீனா பக்கம் சாய்வதைத் தடுக்க முடியாது எனக் கூறும் நிலை ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் அத்தகைய வார்த்தையை வெளிப்படுத்த இந்திய அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முன்வருவதே வேடிக்கையானதாக உள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் பஸில் ராஜபக்ஷவின் இந்தியா நோக்கிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தென் இலங்கை சீனா பக்கம் போகும் என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுதியிருந்தது. அதனையே சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். அதாவது சுப்பிரமணியம் சுவாமிக்கூடாக தென் இலங்கை சரியான இராஜீக நகர்வை மேற்கொண்டுள்ளது. அடுத்துவரும் வாரங்களில் சீனா வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகைதரவுள்ள நிலையில் இத்தகைய செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டாவது இலங்கைக்கான இந்திய தூதுவரது செய்தி இலங்கை பக்கம் இந்தியா உள்ளது என்பதை கோடிகாட்டியுள்ளது. அதாவது இலங்கையின் நிதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற இந்தியா தயாராக உள்ளது என்பதையே அவரது டுவிட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையை கையாள முனைகிறது என்பது தெளிவாகவுள்ளது. இலங்கைத் தீவு புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவின் நலன்களுக்குள் உட்பட்டதென்பதை கவனத்தில் கொண்டுள்ள வேண்டிய நிலையில் இந்தியாவின் நகர்வு அவசியமானது. சீன வெளியுறவு அமைச்சரின் வருகையின் முக்கியத்துவம் நிச்சயமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கான உடன்பாடுகள் பலவற்றைக் கொண்டதாகவே அமையும். அதனை கையாளும் பொறுப்பு இந்தியத் தரப்புக்கே உரியது. இந்தியத் தரப்பு சீனாவின் நகர்வுக்கு முன்னர் செயல்பட வேண்டிய நிலைக்குள் உள்ளது. அதனை இந்திய தூதுவர் வெளிப்படுத்தியுள்ளதுடன் அவரது வார்த்தைகள் இராஜீக நோக்குடன் அமைந்துள்ளது.

மூன்றாவது இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை கையாளுவது போல் சீனாவையும் இந்தியாவை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இந்திய-சீன நலன்களுக்குள் அகப்பட்டுள்ள இலங்கைத் தீவினை மாறி மாறி முன்னிறுத்திக் கொண்டு அந்ந நாடுகளிடம் பொருளாதார உதவிகளையும் அரசியல் ரீதியான நலன்களையும் அடைந்து கொள்கின்றனர். இந்தியா பஸில் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின் சீனாவிடம் அத்தகைய தேவைகளை நிறைவு செய்ய தயாராகியுள்ளது. அதனை அடையும் ஒரு உத்தியாகவே சீனாவின் வெளியுறவு அமைச்சரது விஜயம் அமையவுள்ளது. சீனாவிடம் அந்த நோக்கம் இல்லாது விட்டாலும் தென் இலங்கை அரசியல் சக்திகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கான ஆரம்ப புள்ளியையே சுப்பிரமணியம் சுவாமி வெளிப்படுத்தியுள்ளார்.

நான்காவது சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் பல தோல்விகண்டுவிட்டதாகவும் அதனைப் போன்ற நிலை இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மோடி அரசாங்கத்தின் பிராந்திய வெளியுறவுக் கொள்கை சீனாவின் அணுகுமுறையால் நெருக்கடியை சந்தித்துவருவது யதார்த்தமானதே. அதற்கு தனித்து மோடி அரசாங்கத்தை குறை கூறிவிட முடியாது. ஒரு நாட்டின் வெளியுறவு என்பது தொடரான செய்முறையாகும். அதனை உருவாக்கினால் மட்டும் போதூது. அதனைக் கடைப்பிடிக்கவும் செயல்வடிவம் கொடுக்கவும் தலைவர்கள் தேவை. சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களுக்கும் அதில் பங்குண்டு. நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிராந்தியக் கொள்கையை விட சர்வதேச மட்டத்திலான வெளியுறவு ஆரோக்கியமானதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவு தோற்றுப் போகுமாக அமைந்தால் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பினையே ஏற்படுத்தும். இலங்கைத் தீவு அதனை பலதடவை அனுபவித்துள்ளது. ஆனால் இந்தியத் தேசியத்தை நேசிக்கும் எவரும் சுவாமி போன்று முறையிடமாட்டார்கள். அதனை தமது செயல்பாடாக மேற்கொண்டு நகர்வுகளை வெற்றி கொள்ளவே முயலுவார்கள். இந்தியாவின் நலனுக்கு சேவையாற்றுவதை விட பிற தேசங்களுக்கு சேவை புரிவதாகவே சுவாமியின் கருத்துக்கள் காணப்படுகிறன.

எனவே இலங்கை -இந்திய உறவானது இராஜீக உத்திகளுக்குள்ளால் நகர்த்தப்படுகிறது. பரஸ்பரம் இரு தரப்பும் அடுத்துவரும் வாய்ப்புக்களை நோக்கி செயல்பட்டுக் கொண்டுவருகின்றன. இந்தியா இலங்கையை தனது நலன்களுக்குள் இழுப்பதற்கும் இலங்கை இந்தியாவையும் - சீனாவையும் கையாளுவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றது. ஆனால் ஈழத்தமிழ் அரசியலோ ஒருமைப்பாட்டை எட்ட முடியாது இழுபறிப்படுகிறது. எத்திசையில் இயங்குவதென தெரியாது குழப்பத்திற்குள் அகப்பட்டுள்ளது. 'இவற்றுக்கொல்லாம் அறிவு தேவையில்லை' என்ற வாதமே மேலோங்கியுள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE