Thursday 20th of January 2022 07:37:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 88 - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 88 - நா.யோகேந்திரநாதன்!


ஒப்பரேஷன் லிபரேசனும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்! - நா.யோகேந்திரநாதன்!

'ஒரு விடயத்தை மட்டும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இது வடக்கினதும் கிழக்கினதும் ஒரு தற்காலிக இணைப்பு. கிழக்கிலுள்ள மக்கள் இவ்விணைப்புக்கு ஆதரவா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்கத்தக்க அடுத்த ஆண்டின் இறுதிக்குள் ஜனாதிபதியால் முடிவு செய்யப்படும் நாளில் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும். இதுவொரு சாதாரண பெரும்பான்மை வாக்குமூலம் தீர்மானிக்கப்படும். அம்பாறையை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் 33 வீதம் முஸ்லிம்களும் 27 வீதம் சிங்களவரும் மற்றும் எஞ்சிய 40 வீதம் தமிழரும் உள்ளனர். இத்தமிழரிலும் இரு வகையினர் உள்ளனர். அவர்களில் அரைப்பங்குக்குக் கூடியவர்கள் மட்டக்களப்புத் தமிழர்கள். எஞ்சியோர் யாழ்ப்பாணத் தமிழர். யாழ்ப்பாணத் தமிழர்கள் 20 வீதமாக இருக்கையில். 80 வீதமானவர்கள் அத்தகைய இணைப்பை எதிர்ப்பார்களென நான் நம்புகிறேன். அத்துடன் இணைப்பு முடிந்துவிடும். இத்தற்காலிக இணைப்பால் எமக்குக் கிடைக்கவுள்ள ஆதாயம் பயங்கரவாத இயக்கத்துக்கு இது நிரந்தர முடிவைக் கண்டு விடும்'.

இது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்கள் முன்பு 26.07.1987 அன்று 1,200 பேர் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியில் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

இந்திய மற்றும் மத்திய அமைச்சர்களான சிதம்பரம், நட்வர் சிங், ஜே.ஆரின் சகோதரரான எம்.டபிள்யூ.ஜயவர்த்தன ஆகியோர் நடத்திய பேச்சுக்களின் காரணமாக உருவான டிசம்பர் 19 உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை இந்திய உடன்பாடு வரையப்பட்டது. ஆனால் ஜே.ஆர் - ராஜீவுடன் நடத்திய கலந்துரையாடல் மூலம் தனக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடிய ஓட்டைகளை ஏற்படுத்திக் கொண்டார். அதில் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஒரு முக்கிய விடயமாகும். இந்த விடயம் பார்த்தசாரதியின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடம்பெற்ற பேச்சுகளின் போதும், வட்டமேசை மாநாட்டிலும், திம்புப் பேச்சுகளிலும் முன்வைக்கப்பட்ட போதே தமிழர் விடுதலைக் கூட்டணியும் போராளிக் குழுக்களும் முற்றாக நிராகரித்திருந்தனர்.

ஆனால் ஜே.ஆர். லாவகமாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தி விட்டார். சில வருடங்களின் முன்பு உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்குக் கிழக்கு நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் கையெழுத்தாகி 34 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

மாகாண சபைகளைத் தான் நினைத்த நேரத்தில் கலைக்கும் அதிகாரமும் தேர்தல்களை ஒத்தி வைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு.

அதுமட்டுமின்றி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எவ்வித திட்டவட்டமான முடிவும் எட்டப்படவில்லை.

எனவேதான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய போராளிக் குழுக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டபோதிலும் பிரபாகரன் பிடிவாதமாக ஏற்க மறுத்தார். எனினும் ஜே.ஆர். இப்படியான குறைந்த பட்ச அதிகாரங்கள் வழங்கப்படுவதைக் கூட விரும்பவில்லை.

ஆனால், இந்தியாவால் விடுக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்கள் காரணமாக ஜே.ஆர் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இவ்வொப்பந்தம் கையெழுத்தான பின்ப ஜே.ஆரிடம் ஊடகவியலாளர் ஒருவர் 'நீங்கள் இந்தியாவின் அச்சுறுத்தல்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டீர்கள்', என வினவியபோது, அவர் ராஜீவ் காந்தியின் வயதும் எனது அரசியல் அனுபவமும் ஒரே எண்ணிக்கை எனப் பதிலளித்தார். அதிலிருந்து ஜே.ஆர். அதில் கையெழுத்திடும்போது, நயவஞ்சகமான உள்நோக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

எனினும் 'ஒப்பரேஷன் பூமாலை’ புலிகளின் நெல்லியடி முகாம் மீதான கரும்புலித் தாக்குதலால் படையினருக்கு ஏற்பட்ட மனோரீதியான பின்னடைவு என்பனவே அவரை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தன என்பதை மறுத்துவிட முடியாது.

யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றிவிடும் நோக்குடன் முடுக்கி விடப்பட்ட 'ஒப்பரேஷன் யாழ்.தேவி' நடவடிக்கைக்கு ஏற்பட்ட படுதோல்வியும் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட பேரிழப்புகளும், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோரைச் சினம் கொள்ள வைத்தது. அது இலங்கை அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானமென்றே கருதினர்.

எனவே மீண்டும் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் முதலில் வடமராட்சியைக் கைப்பற்றுவதெனவும் பின்பு அங்கிருந்து முன்னேறி தென்மராட்சியை ஆக்கிரமிக்க யாழ்ப்பாணத்தைச் சுற்றிவளைத்து இறுதியில் கைப்பற்றி போராளிகளைப் பூண்டோடு அழிப்பதெனத் திட்டமிடப்படுகின்றது.

இந்நடவடிக்கை இறுதி வெற்றி வரைப் போர் என்ற இலக்குடன், 'ஒப்பரேஷன் லிபரேஷன்' எனப் பெயரிடப்பட்டு பலாலியிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

கடும் எதிர்ச் சமரின் மத்தியில் 2000 திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டவாறு முன்னேறிய இராணுவம் நெல்லியடி வரை முன்னேறி மத்திய கல்லூரியில் முகாமிடுகிறது.

இராணுவ ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாடசாலைகள், ஆலயங்களில் தங்குகின்றனர். எல்லோருமே அகதிகாளிக விட்ட நிலையில் உணவு கொடுக்க யாருமே இல்லாத நிலையில் மக்கள் பெரும் பட்டினி அவலத்தை எதிர் நோக்குகின்றனர். வெளியிலிருந்து எவருமே தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் யாழ்.குடாநாடு முடுவதுமே பட்டினிக்குள் தள்ளப்பட்டது.

அந்த நிலையில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் போனில் ராஜீவ் காந்தியுடன் தொடர்பு கொண்டு பொருளாதாரத் தடை காரணமாக யாழ்.குடா நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், இலங்கை அரசால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க ஒரு வழி காணவேண்டுமெனவும் உடனடியாக பாதுகாப்புடன் ஒரு கப்பலில் உணவுப் பொருட்கள் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இந்திய அரசின் அனுசரணையோடு நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி அவர்கள் 38 தொன் உணவுப் பொருட்களைப் 19 வள்ளங்களில் ஏற்றிக்கொண்டு இலங்கையின் வடபகுதி நோக்கிச் சென்றனர்.

உணவுப் படகுகள் இலங்கையின் வட எல்லையை நெருங்கியபோது இலங்கைக் கடற்படையினர் அவற்றைத் தடுத்து நிறுத்தியதுடன், துப்பாக்கிகளை நீட்டி மிரட்டி அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்நடவடிக்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவால் என்றே அவர்கள் கருதினார்கள். ராஜீவ் காந்திக்கும் இந்நடவடிக்கை கோபத்தை மூட்டி விட்டது.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் இத்தகைய இந்தியாவை மதிக்காத ஜே.ஆரின் நடவடிக்கைக்கும் சரியான பதிலடி கொடுத்து இந்தியா தொடர்ந்து விட்டுக் கொடுக்காதெனக் காட்ட விருப்பினர். எனவே உடனடியாக ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ராஜீவ் காந்திக்கு ஆலோசனை வழங்கினர்.

1987 ஜூன் 4ம் திகதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் ஏற்றப்பட்ட 4 மிராஜ் விமானங்கள், போர் விமானங்களின் பாதுகாப்புடன் இலங்கை வான் எல்லைகளுக்குள் நுழைந்தன. அவைகள் வடபகுதியில் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் உணவு மற்றும் மருந்துப் பொதிகளை பாரசூட் மூலம் இறக்கின.

இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேஷன் பூமாலை' எனப் பெயரிடப்பட்டிருந்தது.

ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை மூலம் வடமராட்சியின் ஒரு பகுதியைக் கைப்பற்றி விட்ட நிலையில் வடமராட்சி கிழக்கு நோக்கிய படை நகர்வைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது இந்தியாவின் 'ஒப்பரேஷன் பூமாலை' ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஒருவித திகிலை ஏற்படுத்தி விட்டது. தங்களின் அடுத்த நடவடிக்கைகள் தொடரும்போது இந்தியா தலையிடக்கூடும் என அவர் அஞ்சினார்.

எனினும், அவர் தனது வழமையான தந்திரோபாய அடிப்படையில் மௌனம் காத்தார். ஆனால் இலங்கையின் சுயகௌரவம் என்ற அடிப்படையில் இனவாதிகளை ஒங்கிக் குரல் கொடுக்க வைத்தார்.

இன்று உணவுப் பொதி, நாளை குண்டு வீச்சா எனப் பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. பிக்குகள் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தென்னாசியாவின் வல்லரசு என நிரூபிக்கவே இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதெனவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குத் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நாடுகளிடம் முறையிட்டபோது அவர்கள் இந்தியாவுடன் இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி ஆலோசனை கூறிவிட்டனர்.

ஆனால் இவற்றினால் ஜே.ஆரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை நன்குணர்ந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் ஜே.ஆரை வழிப்படுத்தும் திட்டத்துடனான நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE