Saturday 20th of April 2024 01:12:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரைன் நெருக்கடியை தணிக்க புடின் - பைடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு பிரான்ஸ் ஏற்பாடு!

உக்ரைன் நெருக்கடியை தணிக்க புடின் - பைடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு பிரான்ஸ் ஏற்பாடு!


உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொள்கையில் இணக்கம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கத்தைக் கைவிட்டால் பிரான்ஸ் முன்மொழிந்த இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

புடின் - பைடன் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றால் பல தசாப்தங்களின் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதுகாப்பு நெருக்கடியில் ஒன்றிற்கு சாத்தியமான இராஜதந்திர தீர்வை எட்ட முடியும் என சர்வதேச அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை தொடங்கத் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா நெருக்கடிக்கு தீா்வு காணும் முயற்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் - மக்ரோன் இடையே பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக நேற்று தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் 3 மணி நேரங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இதன் தொடர்ச்சியாக ரஷ்ய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை மக்ரோன் - புடின் இடையே இரண்டாம் கட்ட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்தே ரஷ்ய - அமெரிக்க தலைவர்களுடனான உயர்மட்டப் பேச்சுக்கான முன்மொழிவை மக்ரோன் வெளியிட்டார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு இடையோருக்கு இடையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின்போதும் புடின் - பைடன் இடையிலான சந்திப்புக்கான சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்படும் என பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலுக்கான தயாரிப்புகளை மிக விரைவில் ரஷ்யா முன்னெடுத்து வருவது போன்று தோன்றுவதாக வெள்ளை மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிப்பு முயற்சி இடம்பெற்றால் அதன் விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ளும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைன் அருகே டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உட்பட உக்ரைனைச் சுற்றி 190,000 துருப்புக்களை ரஷ்யா குவித்துள்ளதாக பைடன் நிர்வாகம் மதிப்பிடுகிறது.

இதற்கிடையில் உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்யா தனது கவச வாகனங்கள் மற்றும் துருப்புக்களை குவித்து போருக்கான தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருவது போன்று தோற்றமளிக்கும் புதிய செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க தனியார் நிறுவனமான மாக்சர் (Maxar Technologies) நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE