Thursday 20th of January 2022 08:10:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் மக்களிடம் திணிக்கப்படும் சீன எதிர்ப்புவாதம்! - நா.யோகேந்திரநாதன்!

தமிழ் மக்களிடம் திணிக்கப்படும் சீன எதிர்ப்புவாதம்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியின் “நேர்படப் பேசுதல்” என்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இந்தியா தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குமானால் தாங்கள் இங்கு சீனாவைக் காலூன்ற விடப் போவதில்லையெனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையில் தமிழ் மக்கள் சார்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை எதிர்த்து வருவதாகவும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பன தொடர்பாக சீனா பலவீனமான போக்கைக் கொண்டிருப்பதால் தங்களால் அந்த நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்திருந்தார்.

இப்படியான ஒரு கருத்தைச் சுமந்தி்ரன் வெளியிட்டது தொடர்பாகவும் ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எவர் ஒருவருமே ஆட்சேபனை தெரிவிக்காமையும் பெரிதாக ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. சேர்.பொன்.இராமநாதன் காலத்திலிருந்து சம்பந்தன் காலம்வரை தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு மேட்டுக்குடி அரசியலையே முன்னெடுத்து வந்தனர் என்பதும் ரஷ்யா, சீனா போன்ற பொதுவுடமைக் கொள்கைகளைக் கொண்ட நாடுகள் மீது வெறுப்பைக் கொட்டி வந்தனர் என்பதும் மறந்து விட முடியாது. ஏனெனில் அவர்கள் காலம்காலமாக சிங்கள மேட்டுக்குடி அரசியலுடன் நல்லறவைப் பேணி வந்த அதேவேளையில் இடது சாரிகளுடனும், சிங்கள தேசிய சக்திகளுடனும் ஏனைய முற்போக்கு சக்திகளுடனும் விரோத அரசியலையே முன்னெடுத்து வந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் என்றாலென்ன, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியென்றாலென்ன ஐ.தே.கட்சி ஆட்சியிலிருக்கும் போது ஒரு சமரச அரசியலையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்து வந்தமை வரலாறாகும். அதுமட்டுமன்றி சமசமாஜக் கட்சி தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி் பிரதேச சுயாட்சி கோரியும் போராட்டங்களை நடத்தியபோதும் தமிழ்த் தலைமைகள் அவர்களுடன் இணைந்து செயற்பட மறுத்து அவர்களுக்கு எதிரான பிரசாரங்களையே மேற்கொண்டு வந்தனர்.

இனப் பி்ரச்சி்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகக் கருதப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தும், தமிழ் மக்களுக்கு உயிரழிவு உட்படப் பேரழிவுகளை ஏற்படுத்தி 1958 கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. ஆனால் 1965 ல் தமிழ்த் தலைவர்கள் ஐ.தே.கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து அமைச்சுப் பதவியும் பெற்று உறவு கொண்டாடினர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மக்கள் அர்ப்பணிப்புடன் பங்குகொண்ட போதிலும் அத்தியாகங்கள் மேட்டுக்குடி அரசியலுக்குக் காவு கொடுக்கப்பட்டன என்பதை எவருமே மறுத்து விடமுடியாது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009ல் புலிகள் களத்தில் இல்லாமற் போன பின்பு தமிழ் மேட்டுக்குடி அரசியலின் குவி மையமாகியது. முற்போக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உறுதியாக நின்ற பலர் வெளியேற்றப்பட பிற்போக்கு சக்திகள் உள் நுழைந்து த.தே.கூட்டமைப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன.

அதன் விளைபலனே தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

கடந்த சில வாரங்களின் முன்பு எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்வில அவர்கள் மன்னார் வளை குடாக் கடலில் எரிவாயு இருப்பதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதை பொருத்தமான நிறுவனத்திடம் உரிய முறையில் குத்தகைக்கு விடப்பட்டால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடிகள் முற்றாக நீங்கி விடுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இனப்பிரச்சினை தொடர்பாக விசேட அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளன. அதேபோன்று அண்மையில் இடம்பெற்ற சீனத் தூதுவரின் வடபகுதி விஜயம், அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள சீன வெளியுறவு அமைச்சரின் வருகை என்பனவற்றுக்கும் மன்னார் எரி வாயுவை இலக்கு வைப்பதற்கும் சம்பந்தமில்லை யெனக் கூறிவிட முடியாது.

அதேவேளையில் கரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீதப் பங்கையும் இலங்கைக்கான எரிவாயு விநியோகத்தையும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கான “யுகதெனிய“ ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு எதிராக நாடுபரந்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. எரிவாயு விநியோக உரிமையின் அடுத்த கட்டமாக மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை அமெரிக்க நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சாத்தியம் இல்லையென்று கூறிவிட முடியாது. எனவேதான் தங்கள் அமைச்சுப் பதவிகள் பறிபோகக் கூடிய நிலைமையிலும் அமைச்சர்களான உதய கம்மன்வில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் “யுகதெனிய“ ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இப்படியான ஒரு நிலையில் தான் அமெரிக்கா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகப் பேச்சுகளை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோ இன்றி சுமந்திரனும் வேறு இரு சட்டத்தரணிகளுமே த.தே.கூட்டமைப்பின் பேரில் கலந்து கொண்டனர்.

அதையடுத்துச் சுமந்திரன் சீனா தொடர்பான கர்ணகடூரமான எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இறுதிப் போரின் போது சீனா இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கியே விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படத் துணைபோனதென்ற குற்றச்சாட்டு சீனா மீது சுமத்தப்பட்டது. இறுதிப் போரில் சீனா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது உண்மை. சீனா ஒரு ஆயுத வியாபரி என்ற வகையில் இலங்கைக்கு மட்டுமின்றி வேறு பல நாடுகளுக்கும் ஆயுதங்களை வழங்கி வந்தது. தற்போதும் வழங்கி வருகிறது.

ஆனால் அமெரிக்கா புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்ததன் மூலம் விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச உறவுகளைப் பலவீனப்படுத்தியது. அது மட்டுமின்றி புலிகளின் கடல் போக்குவரத்து உட்படப் பல முக்கிய புலனாய்வுத் தகவல்களை இலங்கைக்கு வழங்கியதன் மூலம் புலிகள் இறுதிப் போரில் பி்ன்னடைவு ஏற்பட வழி வகுத்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க தரப்பு மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவதே இதுவரை இடம்பெற்று வந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இறுதிப் போரில் இலங்கையுடன் ஒரு பங்காளியாகச் செயற்பட்டுப் போரை வழி நடத்தியது மட்டுமன்றி ஆயுத உதவி, ஆளணி உதவி, புலனாய்வுத் தகவல்கள், ராடர் தொழில் நுட்பவியலாளர்களின் பங்களிப்பென இலங்கையின் வெற்றிக்கு முழுமையாக உதவி செய்தது. இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒருமுறை கூட இலங்கைக்கு எதிராக வாக்களித்ததில்லை.

எனவே சீனாவோ அமெரிக்காவோ இந்தியாவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையிலோ, ஜனநாயக அடிப்படையிலோ நோக்கியதுமில்லை நோக்கப் போவதுமில்லை.

யதார்த்தம் அப்படியிருக்கும்போது அமெரிக்காவின் குரலாகவோ, இந்தியாவின் கைப்பொம்மையாகவோ சீனாவை எதிர்ப்பது என்பது வலிந்து எமக்கென ஒரு வலிமையான எதிரியை உருவாக்கும் முட்டாள்தனமாகும். தொடர்ந்தும் எமது பிரச்சினைகள் பூகோள, பிராந்திய வல்லாதிக்க சக்திகளால் தமது நலன்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுபவையாகவே நீளும் பரிதாமமே நாம் எதிர்நோக்கும் முடிவாக அமையும்.

நாம் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் என்ற அடிப்படையில் எந்தவொரு வல்லாதிக்க சக்திக்கும் விலைபோகாது எதிரி்க்கும் எமக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் எம்மைப் பயன்படுத்த முனையும் மேலாதிக்க சக்திகளுக்கிடையே உள்ள முரண்பாடுகள் என்பவற்றைச் சரியாக இனம் கண்டு தந்திரோபாய அடிப்படையில் எமக்கும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதே ஒரே மார்க்கமாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

04.01.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ம.ஆ.சுமந்திரன், சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மன்னார்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE