Thursday 28th of March 2024 04:38:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேசிய திட்டத்திற்கு அமைவாக  நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்  -பிரதமர்!

தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் -பிரதமர்!


தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு நேற்று (23) பிற்பகல் அறிவுறுத்தினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் நகர்ப்புற மீளுருவாக்கத் திட்டம் மற்றும் கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஆதரவுத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நகர்ப்புற முறைசாரா குடியேற்றங்களுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் 2010ஆம் ஆண்டு பிரதமர் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோதே தொடங்கப்பட்டது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம அவர்கள் நினைவு கூர்ந்தார். 2024 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற குறைந்த வசதிகொண்ட குடியிருப்புகளுக்கு பதிலாக 50,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதானமாக கொழும்பிலுள்ள குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதே பிரதான நோக்கமாகும். இதன்படி, 14,611 வீடுகள் ஏற்கனவே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 5590 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்களின் முதல் காலாண்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் காலாண்டுகளுக்கான எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார அவர்கள் முன்வைத்தார்.

அதற்கமைய, கலிங்க மாவத்தை, அறுநூற்று ஒன்று தோட்டம் (ஸ்டேடியம் கிராமம்) மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்கள் குறித்தும், கலிங்க மாவத்தை மற்றும் கொலம்பகே மாவத்தையில் இந்த ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

குருநாகல் வில்கொடவில் செயற்படுத்தப்பட்டுவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான 300 வீட்டுத் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சீன மானியத்தின் கீழ் 1996 வீடுகள் கிடைத்துள்ளதாகவும், தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய திட்டமிடுமாறு நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் கொழும்பில் ஆப்பிள் தோட்டம் மூன்று கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் 400 வீடுகள், கிம்புலாஎலயில் 472 வீடுகள் மற்றும் மஹரகமவில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படுதல் உட்பட பல திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சிரேஷ்ட கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

குறித்த திட்டம் கொட்டாவ பழதுறுவத்த (பழத்தோட்டம்) பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கலைஞர்களுக்காக 108 வீடுகள் அங்கு நிர்மாணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

6-7 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டிற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களிடமிருந்து தற்போது அறவிடப்படும் கட்டணம் சுமார் 1 மில்லியன் ரூபாவாகும் எனவும், அந்தத் தொகை 30 வருடங்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாவாகவே அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது குத்தகை அடிப்படையில் வாடகை செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

'நகர்ப்புறங்களில் 20-30 வருடங்களாக வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளனர். ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து குடியிருப்பவர்களும் உண்டு. குழந்தைகளை பிரதான பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்காக சிலர் இவற்றை செய்கின்றனர். எனவே, முறைசாரா குடியிருப்புகளை அகற்ற வேண்டுமாயின், இந்த வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் வீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். அதற்கான அளவுகோல்களை அமைச்சு வகுத்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பது பயனுள்ளதாக அமையும் என கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் இது தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பெறுமதிமிக்க காணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் அதிகாரிகள் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

'அரசாங்கங்கள் மாறும்போது மாறாத தேசியத் திட்டத்திற்கமைய நமது நாடு வளர்ச்சியடைய வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் ஒரு தேசிய திட்டம் அவசியம். எனவே, எங்கும் நிறைந்துள்ள காணிகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களுடன் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். வீடமைப்புத் திட்டங்களை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, போக்குவரத்து நெரிசல், பாடசாலை தேவைகள் மற்றும் சுற்றாடல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அதற்கமைய தேசிய திட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் என்.பி.கே.ரணவீர மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE