Thursday 20th of January 2022 08:08:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 89 - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 89 - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையைக் கலக்கிய ஒப்பரேசன் பூமாலை! - நா.யோகேந்திரநாதன்!

'தமிழ் தேசியப் பிரச்சினையின் தீர்வுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுதி பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டுள்ளதுடன் எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குப் போதாமலுள்ளது. எனவே எமது மக்களின் உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கிற அளவுக்கு மட்டும் நாம் ஒப்பந்தம் அமுல் செய்யப்படுவதற்கு எமது ஒத்துழைப்பை நீடிக்க உறுதியளிக்கிறோம். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு ஒப்பந்தத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்படி துப்பாக்கி முனையில் வலியுறுத்திக் கோருவது நேர்மையற்றதும், நியாயமற்றதுமாகும்'.

இது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் 1987ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் நாள் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முதல்நாள், டெல்லியில் வைத்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை ஏற்கும்படி பிரபாகரனிடம் வலியுறுத்தியபோது ஆணித்தரமாக வெளியிட்ட கருத்தாகும். அதேநேரம் பிரதமர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாவிடிலும் எதிர்க்காமலாவதிருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து அடுத்த நாள் 29.08.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் கொழும்பில் வைத்து இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையே கையெழுத்தானது.

விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய போராளி அமைப்புகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், ஜே.ஆர். உட்பட இலங்கை அரச தரப்பினர் இது மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தனர்.

எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழர் தரப்புடன் கலந்துரையாடப்படாமலே ஏற்கனவே இலங்கை அரச தரப்புக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலர் நட்வர்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கிடையே எட்டப்பட்ட டிசம்பர் 12 உடன்படிக்கையின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருந்தது. 29ம் திகதி கையெழுத்திடப்படவிருந்த நிலையில் 28ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியும் விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய முக்கிய போராளிகளும் டில்லிக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒப்பந்தம் வாசித்துக்காட்டப்பட்ட பின்பு ராஜீவ் அவர்களுடன் பேச்சுகளை நடத்தினர். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தபடியால் ஒப்பரேஷன் லிபரேசனையடுத்து எந்த நேரமும் படையினர் வடமராட்சி கிழக்கு நோக்கி முன்னேறக் கூடும் என்ற நிலையில் அவர் போர்த் தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இந்திய வான்படை இலங்கை வான் எல்லைக்குள் புகுந்து 'ஒப்பரேஷன் பூமாலை' மூலம் உணவுப் பொதிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'பாரசூட்' மூலம் போட்டமை இலங்கைத் தரப்பினரைக் கதிகலங்க வைத்திருந்தது.

இந்தியா இலங்கை மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் எனக் கருதப்பட்ட நிலையில் அமைச்சர் காமினி திசநாயக்க இந்தியக் கிரிக்கெட் அணித்தலைவரான கே.பி.சால்வேயுடன் தொடர்பு கொண்டு தொழிலதிபர் சி.டி.ஏ.ஷாட்டா, இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார். பின்பு அக்குழுவினர் இந்தியத் துணைத் தூதுவர் டிக்சிற்றின் அனுசரணையுடன் பேச்சுகளை நடத்தினர். ராஜீவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவும், மருந்தும் அனுப்பப் போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இலங்கை திரும்பி காமினி திசநாயக்க, சாள்ஸ் அபயசேகர ஆகியோர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவைச் சந்தித்து நிலைமையை விளக்கினர். ஜே.ஆர்.முதலில் மறுத்தாலும் தான் அனுமதிக்க மறுத்தால் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பாதுகாப்பு என்ற பேரில் இந்தியப்படை இறங்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக வேண்டா வெறுப்பாகச் சம்மதம் தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஜூன் 23ம் திகதி காங்கேசந்துறையை அடைந்தது. அதிலிருந்து நிவாரணப் பொருட்கள் லொறிகளில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டபோது அத் தொடரணியின் முன்னால் இந்தியத் தூதரக அதிகாரிகளான ஹர்திப் பூரி, கப்டன் குப்தா, இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் ஆகியோர் வந்தனர். இரு மருங்கிலும் நின்ற மக்கள் 'எங்களுக்கு ஆயுதம் தா', 'எங்களுக்குப் பாதுகாப்புக் கொடு' போன்ற வாசகங்களைத் தாங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

உணவு விநியோகத்துக்காக புலிகளும் அரசும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருந்த போதிலும் வடமராட்சிப் பகுதியில் துரிதமாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி அடுத்தநாள் அதிகாலையில் வடமராட்சி கிழக்கை நோக்கி முன்னேறப் படையினர் தயாரிப்புகளை மேற்கொண்டனர்.

அவர்கள் படை நடவடிக்கை ஆரம்பிக்கவிருந்த நாளுக்கு முதல்நாள் இரவு தான் நெல்லியடி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கரும்புலி மில்லர் என்ற போராளியால் செலுத்தப்பட்ட வெடி மருந்து நிறைக்கப்பட்ட வாகனம் முன்வாசல் தடையரண்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மண்டபத்துக்குள் புகுந்து வெடித்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். மண்டபமே முற்றாக நொருங்கி விழுந்தது. போராளிகள் சுற்றி வளைத்து மேற்கொண்ட தாக்குதலில் மேலும் பல இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர்.

ஏற்கனவே யாழ்.தேவி நடவடிக்கையின் தோல்வி, அத்துமீறி இந்திய விமானங்கள் உணவுப் பொதி போட்டமை, கப்பல் மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியமை போன்ற சம்பவங்களால் ஈடாடிப் போயிருந்த ஜே.ஆர். நெல்லியடி கரும்புலித் தாக்குதலுடன் கலங்கி விட்டார். அதற்கு முக்கிய காரணம் படையினர் மனோரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனவே அவர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதெனவும் அதன்பின்பு அதிலுள்ள பலவீனங்களைப் பாவித்து அதற்குள்ளால் சுழியோடுவது எனவும் அதனைப் பாவித்து இந்தியா மூலமாகவே ஆயுதப் போராட்டத்தைப் பூண்டோடு இல்லாமற் செய்வது எனவும் முடிவெடுத்துக் கொண்டார்.

ராஜீவ் காந்தி அனைத்துத் தரப்பினரின் சம்மதத்தையும் பெற்று நீண்ட கால இனப் பிரச்சினையை ஒரு முடிவுக்கே கொண்டுவர விரும்பினார். அவ்வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர், புலிகள் தவிர்ந்த ஏனைய போராளிக் குழுக்கள் ஆகிய தரப்பினரின் சம்மதத்தைப் பெற்றுவிட்ட நிலையில் பிரபாகரனின் சம்மதத்தைப் பெறும் முயற்சிகளில் இறங்கினார்.

அதன் காரணமாக பிரபாகரனை அழைத்துவர இந்திய வான்படை உலங்கு வானூர்தி யாழ்ப்பாணம் சுதுமலைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி சந்தித்துப் பேச விரும்புகிறார் எனக் கூறப்பட்டே அவர் அழைக்கப்பட்டார். அவரும் அவருடன் யோகி, திலீபன் ஆகியோரும் சுதுமலையிலிருந்து புறப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பின்பு அங்கிருந்து விமானம் மூலம் நால்வரும் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

டில்லியில் அவர்கள் தங்க அரச ஆடம்பர விடுதியான அசோகா ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அங்கு சென்றடைந்த போதே 'கரும்பூனைகள்' என அழைக்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இரவு 10 மணிக்கு அங்கு போய்ச் சேர்ந்த அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அவர்கள் சென்றடைந்த சிறிது நேரத்தில் ஒரு உயர் புலனாய்வு அதிகாரி வந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியே செல்லவோ, தொலைபேசியில் பேசவோ அனுமதி இல்லையென்று கூறியதுடன் இன்னும் சிறிது நேரத்தில் டிக்சிற் வந்து சந்திப்பார் என சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து வந்த டிக்சிற் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது எனவும், அதில் தமிழர் பிரச்சினைக்கு நல்லவிதமான தீர்வு உண்டென்றும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார். பின்பு ஒப்பந்த நகலை அன்ரன் பாலசிங்கத்திடம் கொடுத்து அதை வாசித்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தும்படியும் தான் 2 மணி நேரத்தில் வரும்போது நல்லமுடிவுடன் இருக்கும்படியும் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருந்ததோடு மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. வடக்குக் கிழக்கு இணைப்பும் தற்காலிகமானதே. ஒப்பந்தம் கைச்சாத்தாகி 72 மணி நேரத்துக்குள் ஆயுதங்கள் யாவும் ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் வரையப்பட்டிருந்தது.

டிக்சிற் 2 மணி நேரம் கழித்து வந்தபோது பிரபாகரன் எக்காரணம் கொண்டும் ஒப்பந்தத்தை ஏற்கமுடியாதெனக் கூறி விட்டார். காரணங்களை அன்ரன் பாலசிங்கம் விளங்கப்படுத்தினார்.

டிக்சிற் 'இது இரு நாடுகளுக்கிடையே செய்யப்படும் உடன்பாடு. நீங்கள் இதை ஏற்காவிடில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். நீங்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் ஒப்பந்தம் நிறைவேறும்' என மிரட்டினார்.

'எத்தனை வருடமோ, எத்தனை காலமோ என்னைத் தடுத்து வைத்தாலும் ஒப்பந்தத்தை நான் ஏற்கப் போவதில்லை' எனப் பிரபாகரன் உறுதியாகக் கூறிவிட்டார்.

மீண்டும் டிக்சிற்றால் மேற்கொள்ளப்பட்ட மிரட்டல்கள், எச்சரிக்கைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் இந்தியப் புலனாய்வுத் துறை அதிபர் எம்.கே.நாராணனன், வெளிவிவகார அமைச்சின் கூட்டுச் செயலர் சகாதேவன், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ரிகல் செத், இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பூரி போன்ற பல முக்கியஸ்தர்கள் மாறிமாறி முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் பிரபாகரன் இரும்பு போன்ற உறுதியுடன் தனது நிலைப்பாட்டில் நின்றார்.

அடுத்து சென்னையிலிருந்து எம்.ஜி.ஆர். வரவழைக்கப்பட்டார். டில்லி தமிழ் நாடு இல்லத்துக்கு போராளிகள் தரப்பினர் அழைத்துச் செல்லப்பட்டனர். பிரபாகரன் ஒப்பந்தம் பற்றியும் அதன் போலித்தனம் பற்றியும் எம்.ஜி.ஆரிடம் தெளிவாக விளக்கினார்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். 'பிரபாகரன் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு எனது முழுமையான ஆதரவு உண்டு' என ஒரே வசனத்தில் சொல்லி முடித்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் மூலம் பிரபாகரனை வழிக்குக் கொண்டுவர முயன்ற இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அந்த நோக்கம் நிறைவேறாமற் போகவே அடுத்த நகர்வை மேற்கொண்டனர். அதாவது அன்ரன் பாலசிங்கத்தையும் பிரபாகரனையும் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க வைப்பதாகும்.

ஜுலை 28ம் திகதி இரவு இருவரும் பிரதமரின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மிகவும் அன்புடனும் பண்புடனும் நடந்து கொண்ட ராஜீவ் பிரபாகரனின் கருத்துக்களை பாலசிங்கம் மொழி பெயர்க்க உன்னிப்பாகக் கேட்டு விட்டு 'உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். அத்துடன் இவ்வொப்பந்தத்தின் போதாமையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முதலில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு விட்டு, பின்பு நான் ஜே.ஆருடன் பேச்சுகளை நடத்தி தேவையான மாற்றங்களைச் செய்யமுடியுமென நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

அதேநேரம் இனப்பிரச்சினையை நியாயபூர்வமாகத் தீர்ப்பதில் ஜே.ஆருக்கு உள்ள விருப்பின்மையையும் அவரின் நயவஞ்சகமான ஏமாற்றுக்களையும் பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் தொடர்ந்த பேச்சுகளின் பின்பு ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை ஏற்காது விட்டாலும் எதிர்க்காமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மாகாண சபைகள் உடனடியாக அமைக்கமுடியாதெனவும் அக்காலப்பகுதியில் புலிகள் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி அதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் பிரபாகரனுடன் செய்யலாமெனவும் தெரிவித்தார். முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கத் தேவையில்லையெனவும் பாவனைக்குதவாதவற்றை மட்டும் ஒப்படைத்தால் போதுமெனவும் தெரிவித்தார்.

பிரபாகரன் அதை நம்பாவிட்டாலும் உடனடியாக ஒப்பந்தத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ போவதில்லையெனவும் அடுத்த நடவடிக்கைகளுக்கமைய தாம் முடிவெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இரண்டு மணியளவில் பேச்சுகள் நிறைவு பெற்றன. ராஜீவ் திருப்தியுடன் விடை பெற்றார்.

அடுத்தநாள் 1987 ஜுலை29ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஜே.ஆராலும் ராஜீவ் காந்தியாலும் கையெழுத்திடப்பட்டது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு, சென்னை, புது தில்லிபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE