Thursday 20th of January 2022 07:44:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை இந்திய உறவும் இலங்கையின் இனப்பிரச்சினையும்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கை இந்திய உறவும் இலங்கையின் இனப்பிரச்சினையும்! - நா.யோகேந்திரநாதன்!


திருகோணமலையிலுள்ள எண்ணெய்த் தாங்கிகள் அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதையண்டி 3,000 ஏக்கர் நிலம் அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி கெரதனிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படவும், இலங்கையின் எரிவாயு விநியோகத்தையும் அதே நிறுவனத்துக்கு வழங்கவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இவ்விவகாரங்கள் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்ததுடன் ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. உதயகம்மன்வில, வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச ஆகிய அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த நிலையில்தான் திருமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பாக அமைச்சர் உதயகம்மன்வில ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது திருமலை எண்ணெய்க் குதங்களில் 14 ஐம்பது வருடக் குத்தகைக்கு இந்திய லங்கா ஓ.ஐ.சி. நிறுவனத்துக்கு வழங்கவும் 51 வீதம் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் 49 வீதம் லங்கா ஓ.ஐ.சி. நிறுவனத்தையும் பங்காகக் கொண்ட லங்கா பெற்றோலியம் ரெமினல் என்ற தனியார் நிறுவனத்துக்கு 61 தாங்கிகளை வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் உதயன் கம்மன்வில தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு திருமலையில் உள்ள இந்த எண்ணெய்த் தாங்கிகளை ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசு அமெரிக்காவுக்கு 30 வருடக் குத்தகைக்கு வழங்க முற்பட்டபோதே இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து அழுத்தம் கொடுத்து இலங்கை – இந்தி்ய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் அடிப்படையிலேயே 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்சமயம் இலங்கை இந்திய ஒப்பந்தம் செயலிழந்துபோய் விட்டாலும், அது இன்னும் உயிருடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே மீண்டும் திருமலைத் துறைமுகத்தின் எண்ணெய் குதங்களில் பெரும் பகுதி மீண்டும் இந்திய லங்கா ஓ.ஐ.சி. நிறுவனத்தி்ன் கைக்கு வந்துள்ளது.

கடந்த வருடம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தின் மீது உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியைத் தனது இந்திய விஜயத்தின்போது சந்தித்த சந்தர்ப்பத்தில் மோடி 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இவ்வாறே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த போதும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் இவ்விடயம் பற்றி வலியுறுத்தியிருந்தார். இந்தியத் தூதுவரும் இவ்விடயம் பற்றி அடிக்கடி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இந்தியாவை விட்டு தூரவிலக முயலும் போதெல்லாம் இந்தியா சில சமயங்களில் தமிழ் மக்களுக்குச் சார்பாகவும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிராகவும் கையாண்டு வருவது புதிய விடயமல்ல. இது 1980 தொடங்கி இன்று வரை மாற்றப்படாத ஒரு விதியாக விளங்கி வருகிறது. தற்சமயம் அமெரிக்காவுக்கு இலங்கைக்கும் இடையே உருவாகிவரும் நெருக்கம், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை அமெரிக்கா இந்தியாவைப் புறமொதுக்கி விட்டு நேரடியாக கையாள முயலுதல், சீனா வடக்கில் காலூன்றுவதற்கான முன் முயற்சிகளில் இறங்கியமை போன்ற விடயங்கள் இந்தியாவை இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறை காட்ட வைத்துள்ளன.

எனவே இன்று தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்பது மறுக்கப்படவேண்டிய விடயமாகும். இதை எப்படி தமிழ் அரசியல் தலைமைகள் கையாளப்போகின்றன என்பதுதான் இப்போது எழும் கேள்வியாகும்.

இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ எமது பிரச்சி்னைகளை நியாயத்தின் அப்படிடையிலோ அல்லது அனுதாபம் கொண்டோ அணுகுவதில்லை. அவரவர் தங்கள் பிராந்திய, பூகோள நலன்களுக்கு ஏற்ற வகையில் எங்கள் பிரச்சினைகளைக் கையாள்கின்றனர். அப்படியான சந்தர்ப்பங்கள் கிட்டும்போது அதை லாவகமாகவும் தந்திரோபாய அடிப்படையிலும் நாம் அணுக வேண்டும். அதை முன்னெடுத்துச் செல்வதில் நீண்டகால, குறுகிய கால வேலைத்திட்டங்கள் அவசியம். எல்லாவற்றுக்கும் எம்மிடையே ஐக்கியமும் ஒருமித்த கருத்தும், உறுதியும் எம்மிடம் இருக்கவேண்டும்.

இப்படியான நிலையில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் முயற்சியில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் மூலம் இந்தியப் பிரதமர் மோடிக்கு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கடிதம் அனுப்பும் முயற்சிகள் ஆரம்பித்தன. இதில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முன்வந்தன.

தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளின் ஐக்கியம் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாயிருந்த போதும், தமிழரசுக் கட்சி பின்னடித்தே வந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்தவொரு ஒற்றையாட்சியின் கீழான தீர்வுக்கும் உடன்பட முடியாதெனக் கூறி இணைய மறுத்துவிட்டது.

மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி வேறு ஒரு அறிக்கையை முன் வைத்து தலைப்பை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதென மாற்றியது. முஸ்லிம் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளாத போதிலும் பேச்சுகளின் பின்பு சிறு திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது.

எல்லோரும் ஒன்றிணைந்து அறிக்கையைப் பூர்த்தி செய்த பின்பு வெளியே வந்த தமிழரசுக் கட்சி அந்த அறிக்கையை ஏற்கப் போவதில்லையெனக் கூறிவிட்டது. தங்கள் கொள்கை சமஷ்டியே எனவும் கூறுகிறது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சில நாட்கள் பிந்தினாலும் எல்லோரும் கையொப்பமிட்ட அறிக்கை அனுப்பப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் இவ்விடயத்தைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மூத்த அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியின் கடமையாகும். நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி இவ்விடயத்தைக் குழப்ப முயல்வது மக்கள் விரோத நடவடிக்கையென்றே பார்க்கப்படவேண்டும்.

சமஷ்டி என்பது தமிழ் மக்களின் நீண்டகால இலக்காகும். அரசாங்கம் புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளை இல்லாமற் செய்வது பற்றி ஆலோசிக்கும் இவ்வேளை 13வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யக் கோருவது இருப்பதையும் பறிகொடுக்காமல் இருப்பதற்கான உத்தியாகும். இது குறுகிய கால இலக்காகும்.

இந்தக் குறுகிய கால இலக்கு நீண்டகால இலக்குக்கு பாதகமாக அமையாத வண்ணம் விழிப்பாக இருக்கவேண்டும்.

ஆனால் நீண்டகால இலக்கையும் குறுகிய கால இலக்கையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவது புத்திசாலித்தனமல்ல என்பதுடன் சுயநல உள்நோக்கம் கொண்டதாகவும் கருத வேண்டியுள்ளது.

எனவே தற்போது உருவாகிவரும் இலங்கை இந்திய உறவை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் எமது உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும். அதைத் தவிர அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பலவீனமடைந்துள்ள தமிழ் பேசும் மக்களுக்கு வேறு மார்க்கம் இருக்கமுடியாது.

ஆனால் கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி முஸ்லிம், மலையகத் தரப்புகள் மேற்படி அறிக்கையில் கையெழுத்து வைப்பதற்கு பின்னிற்பதாகத் தெரியவருகிறது. அதற்கு தமிழரசுக் கட்சி முன்வைத்த சில திருத்தங்களே காரணமெனக் கூறப்படுகின்றது. நீண்ட காலத்திற்குப் பின்பு உருவாகியிருந்த தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் ஐக்கியம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படாமல் இடையூறுக்கு உட்படுத்தப்படுவது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்குமே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழரசுக் கட்சி ஏன் கணக்கிலெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.

எப்படியிருந்தபோதும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட குற்றங்களை மீண்டும் மீண்டும் இழைத்துவருவது ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே எதிர்காலத்தை நம்பிக்கையற்றதாக்கும் ஒரு படுமோசமான நடவடிக்கை என்றே பார்க்கப்படவேண்டியுள்ளது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

11.01.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE