Thursday 20th of January 2022 08:57:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாடகக் கீர்த்தி, கலைத் தவசி குழந்தை செ.செபமாலை காலமானார்!

நாடகக் கீர்த்தி, கலைத் தவசி குழந்தை செ.செபமாலை காலமானார்!


மன்னார் மாவட்டத்தின் கூத்திசைக் காவலன் முத்தமிழ் வேந்தர் குழந்தை செபமாலை, மன்னார் மாவட்டத்தின் புகழ் பெற்ற நாட்டுக்கூத்து அண்ணாவியார் கலைத் தவசி குழந்தை செ.செபமாலை 08.01.2022 அன்று காலமானார்.

மன்னார் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாக விளங்கும் வாசகப்பா, நாடகம் எனும் அரங்கத் துறைகளிலும் ஆன்மீக, இலக்கிய, சமூகப் பணிகளிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முழுமூச்சுடன் செயற்பட்டு வந்தவர் செபமாலை.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரச நாடக விழாவில் நாட்டுக்கூத்து கலைஞர் குழந்தை செபமாலைக்கு “நாடகக்கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் அவருக்கான இறுதிக் கிரியைகளும் நல்லடக்கமும் நடைபெறுகின்றன. 12.08.2012 இல் வசாவிளான் தவமைந்தனால், கலைத் தவசி குழந்தை செ.செபமாலை பற்றி எழுதப்பட்ட கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது.

கூத்துக்கலை என்பது எமது தொன்மையான ஆற்றுகை வடிவங்களுள் முதன்மையான இடத்தில் திகழ்ந்து வருகின்றது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரியதான தனித்துவப் பண்புகளோடு இவை வளர்க்கப்பட்டுள்ளதால் அங்கே வாழும் மக்களால் மனதார நேசிக்கப்படும் உயிர்ப்புள்ள கலை வடிவங்களாக இவை விளங்கி வருகின்றன. இவ்வாறான பல்வேறு வகைப்பாடுகளும் பாணிகளும் கொண்டமைந்த நாட்டுக்கூத்துக் கலை மரபில் மன்னார் மாவட்டத்தில் ஆடப்பட்டு வரும் கூத்துக்கள் ஈழத்தின் கூத்துக்கலை ஆற்றுகை முறையில் தனித்துவமான பண்புகள் கொண்டதாக இன்று வரை ஆடப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் கூத்துக்கலையின் இணையற்ற அண்ணாவியாராகவும் சிறந்த நடிகராகவும் நாடக எழுத்தாளராகவும் முகாமைத்துவத் திறன் கொண்ட நெறியாளராகவும் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் இயக்குனராகவும் விளங்குவதுடன் பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், பேச்சாளர், வில்லிசையாளர், சமய, சமூகப் பணியாளர் எனும் பன்முக ஆளுமைகளோடு கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கும் மேலாக அர்ப்பணிப்புடன் கலைப்பணியாற்றி வருபவர் திருக்கலை வேந்தன் குழந்தை செ.செபமாலை. அமரர்களான செபஸ்ரியான் - செபமாலை தம்பதியரின் மகனாக 03.08.1940இல் மன்னார், முருங்கனில் இவர் பிறந்தார். முருங்கன் கிறீஸ்து அரசர் பாடசாலையில் எஸ்.எஸ்.சி வரை கற்று கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1959இல் ஆசிரியப் பயிற்சி நெறியை நிறைவு செய்து 1960இல் ஆசிரிய நியமனம் பெற்று அல்லைப்பிட்டி, அடம்பன், இசைமாலைத்தாழ்வு, அட்டபாகை (கண்டி), பொன்தீவுக்கண்டல், அரிப்பு, பெரிய முறிப்பு போன்ற இடங்களில் உள்ள றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலைகளில் ஆசிரியராகவும் உப அதிபராகவும் பணியாற்றியதுடன் கற்கிடந்த குளம் றோ.க.த.க. பாடசாலையில் அதிபராகவும் பணியாற்றி 2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஆசிரியத் தொழிலில் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய இவர் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஆற்றுகைத் திறன் கொண்ட கலைஞராக வளர்ச்சி கண்டு வந்தார்.

மத்தள அண்ணாவியாராகப் புகழ் பெற்றிருந்த தந்தையும் தமிழ்ப் புலவராக அந்தக் காலத்தில் விளங்கிய பெரிய தந்தையாரும் இவரது கலைத்துறை சார்ந்த ஈடுபாட்டிற்குக் காரணமானவர்களாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் விளங்கினர். யாழ்.மாவட்ட ஆயரும் தமிழர் கலைகளின் தீவிர ஆதரவாளருமாக விளங்கிய அமரர் தீயோகுப்பிள்ளை ஆண்டகை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபராக இருந்த காலத்தில் அங்கு கற்றமையால் இவரது கலைத் துறைகள் அனைத்தும் வளர்ச்சி காண்பதற்கான களமாகக் கலாசாலை வாழ்க்கையானது அமைந்தது.

மன்னார் மாவட்டத்தின் ஏழு பாடசாலைகளில் பணியாற்றிய காலத்திலும் மாணவர்களிற்கான கலை நிகழ்வுகள் அனைத்தையும் நெறிப்படுத்தி மேடையேற்றிய மாபெரும் படைப்பாளியாகவே இவர் தடம் பதித்து வந்துள்ளார். அதே நேரத்தில் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி ஏனைய கலைஞர்களை இணைத்து எண்ணற்ற நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றிய அற்புதக் கலைஞராகவும் இவர் விளங்குகின்றார். 1964இல் இவரால் தொடங்கப்பட்ட முத்தமிழ்க் கலாமன்றமானது மன்னார் மாவட்டத்தின் சகல இடங்களிலும் கலை நிகழ்வுகளை அரங்கேற்றியதுடன் எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கி அவர்களது ஆற்றுகைகளைத் திறம்பட மேடையேற்றி ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புகழ் பெற்று விளங்கியதுடன் தேசிய மட்டத்திலான நாடகப் போட்டிகளிலும் வெற்றியீட்டி உற்சாகத்துடன் செயற்பட்டு வந்தது. ஈழத்தின் இசைநாடக, கூத்துக் கலைகளை உயர் நிலையடையச் செய்ததுடன் அதன் ஆற்றுகையாளர்களையும் தேசியப் புகழ் கொண்டவர்களாகத் தரமுயர்த்திய முயற்சியில் 1950களில் முன்னின்றுளைத்து அரும் பெரும் கலைப்பணியாற்றிய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் செயற்பாடுகளில் இணைந்து செயலாற்றிய அனுபவமும் மன்னார் மாவட்டத்தில் இருக்கும் கலைஞர்களிற்கு எடுத்துக்காட்டான ஒருவராகவும் செயல் திறன் கொண்ட உண்மையான சாதனையாளராகவும் விளங்குகின்ற இவரது பல தசாப்தங்களைக் கடந்து நிற்கின்ற கலைப்பணியானது தனியான ஆய்வு நூலாகத் துறைசார்ந்தோரால் எழுதப்பட வேண்டியதாகும்.

இதுவரையில் எழுபத்தெட்டிற்கும் அதிகமான நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியும் பல நாடகங்களைச் சுயமாக எழுதியும் ஏராளமான கூத்துக்களில் நடித்தும் நீண்ட காலக் கலைத்துறைப் பட்டறிவுடையவராய்த் திகழ்கின்ற இவர் அறப்போர் அறைகூவல், நாம், இன்பத் தமிழன், இதய ஓலம், மரபு வழி நாடகங்கள், பரிசு பெற்ற நாடகங்கள் போன்ற நூல்களையும் மாதோட்டம் என்னும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளதுடன் வியாகுல இசைப்பாக்களும் வியாகுலப் பிரசங்கமும் எனும் இயேசுவின் பாடுகளைப் பற்றிய துன்பியல் பக்தி இலக்கிய இறுவட்டினையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார். கடினமான ஒத்திகைகளின் பின்னர் சிறந்த முறையில் நாடகத்தை மேடையேற்றும் பண்பு கொண்ட இவர் ஹார்மோனியம், மத்தளம் போன்ற கருவிகளை இசைக்கவல்ல கருவியாளராகவும் கத்தோலிக்க மக்களின் தவக்காலத்தில் ஆலயங்களில் இசைக்கப்படுகின்ற 'பசான்' என்னும் இசைப் பாடலை பக்தியுடனும் இசையிலக்கணங்கள் வழுவாமலும் இசைப்பதில் ஈடு இணையற்றவராகவும் விளங்குகின்றார். 'தூய மனதோடு பணத்தை எதிர்பார்க்காமல் கலைத்துறையில் ஈடுபடுகின்ற ஒருவனே உண்மையான கலைஞன் ஆவான்.

நாட்டுக்கூத்துக் கலையை உயிரென நேசிக்கும் நானும் எனது நண்பர்கள், உறவினர்கள் பலரும் அந்தக் காலத்தில் கால நேரம் பார்க்காமல் ஒத்திகைகளில் ஈடுபட்டதையும் வெற்றிப் படைப்புக்களாகக் கூத்துக்களை மேடையேற்றியதையும் நினைத்தால் உண்மையில் மெய் சிலிர்க்கும். எத்தனை விதமான கலைகளைத் தற்காலத்தில் நாம் கற்று வந்தாலும் எமது முன்னோரால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கலையான கூத்துக்கலையை நாம் மறந்து விடக் கூடாது. ஏனெனில் அது தான் எமக்குரிய அடையாளம். எமது தேசியக் கலைவடிவமும் அதுவே. இந்தக் கலையை ஆவணப்படுத்துதல், ஆய்வு செய்தல், கலைஞரைக் கௌரவித்தல் என்பதற்கும் மேலாக நாட்டுக் கூத்துக் கலையை நிகழ் கலையாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்' எனத் தனது கருத்துக்களை இவர் அன்புடன் கூறுகின்றார்.

வசாவிளான் தவமைந்தன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE