Thursday 18th of April 2024 09:11:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் - ஐ.நா. நிபுணர்கள் பரிந்துரை!

பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் - ஐ.நா. நிபுணர்கள் பரிந்துரை!


மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நியமங்களுக்கு உட்படாதவாறு இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தில் சட்டவதேச நியமங்களுக்கு அமைய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படும் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஆபத்து உள்ளது. குறிப்பாக சட்டத்தில் பயனுள்ள முறையான செயல்முறை உத்தரவாதங்கள் இல்லாமையால் இது மத மற்றும் இன சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஐ.நா. நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் பிற பொறிமுறைகளால் வெளிப்படுத்தப்பட்ட திருத்தங்கள் உத்தேச திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களை இலக்கு வைப்பதற்கும், சித்திரவதைகள் மூலம் பொய்யான வாக்குமூலங்களை பெறுவதற்கும், நீண்டகால தன்னிச்சையான காவலில் வைப்பதற்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல தசாப்தங்களாக எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவல் கால அளவைக் குறைப்பது, கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிப்பது, மற்றும் விசாரணைகளை விரைவுபடுத்துவது போன்ற உத்தேச பயங்கரவாத தடைச் சட்டத் திருத்த முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

எனினும் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளை பூா்த்தி செய்யும் வகையில் இல்லை என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்திள் உள்ள மிக மோசமான சில விதிகளை நீக்கும் முன்மொழிவுகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருத்தத்துக்கு முன்மொழியப்படாத சில சரத்துக்கள் தன்னிச்சையான தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட கடந்த கால மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படுவதற்கு வழிவகுத்தன.

இவ்வாறான சரத்துக்களை திருத்த முன்வராததன் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்தை அர்த்தமுள்ள வகையில் திருத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு கேள்விக்குள்ளாகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கான உடனடி கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. அந்த வகையில் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு இணங்குவதற்கான உறுதி செய்யும் வகையிலான முக்கிய திருத்தங்களை அடையாளம் கண்டு அவற்றை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1. சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க பயங்கரவாதத்தின் வரையறைகளைப் பயன்படுத்துதல்.

2. இந்த சட்டம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மறுப்பதுடன், மத ரீதியான பாகுபாடு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் வகையில் அமையாது என்பதை உறுதி செய்தல்

3. தன்னிச்சையாக சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதை உறுதி செய்ய ஏதுவாக கட்டமைக்கப்பட்ட ஏற்பாடுகளை உறுதி செய்தல்

4. சித்திரவதை மற்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் அவற்றை முழுமையாக இல்லாமல் செய்தல் மற்றும் இழிவுபடுத்த முடியாத நிலைமையை உறுதி செய்தல்

5. நீதித்துறை மேற்பார்வை மற்றும் சட்ட ஆலோசனைக்கான அணுகலை உறுதிப்படுத்துதல்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளும் இலங்கை அதற்குரிய சலுகையை அனுபவிப்பதற்காக உறுதியளித்தவாறு சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு முழுமையாக இணங்கக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், சர்வதேச நியமங்களுக்கு உட்படாத பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE