Thursday 20th of January 2022 08:20:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் உயிர் நண்பனான இலங்கைக்கு இந்தியாவின் நிதி உதவித்தொகை அறிவிப்பு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

சீனாவின் உயிர் நண்பனான இலங்கைக்கு இந்தியாவின் நிதி உதவித்தொகை அறிவிப்பு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இந்திய-இலங்கை உறவு முரண்பாட்டையும் சுமுக தன்மையையும் மாறிமாறி கொண்டிருக்கும் போக்கொன்று கடந்த பலதசாப்தங்களாக நிகழ்ந்த வரகிறது. இதன்தொடர்ச்சி சமகாலத்திலும் பேணப்படுகிறது.

இலங்கையின் நிதியமைச்சர் டிசம்பரில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கான பதிலை 13.01.2022 900 மில்லியன் டொலர் நிதியுதவியினை வழங்கியதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம் திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பான உடன்பாடும், தமிழ்த்தேசிய கட்சிகளின் இந்திய பிரதமருக்கு அனுப்ப திட்டமிட்ட ஆவணத்தின் வடிவமும் இக்காலப்பகுதி இலங்கை-இந்திய உறவை முதன்மைப்படுத்துவதாக அமைந்து உள்ளது. இக்கட்டுரை சீனாவின் உயிர் நண்பனான இலங்கைக்கு இந்தியாவின் பாரிய நிதியுதவி என்பதை புரிந்து கொள்வதாக அமையவுள்ளது.

இந்திய மத்திய அரசு 900மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியுதவியை இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக வழங்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதேநேரம் ஈழத்தமிழர்களின் நீடித்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அணுசரனை வழங்கும் நோக்குடன் இந்திய பிரதமருக்கு கைச்சாத்திட்ட ஆவணத்தை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கையளிக்க தயாரான போது தூதுவர் புதுடில்லி சென்றிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. இவ்விரண்டு செய்திகளும் இலங்கை இந்திய உறவினையும் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பினையும் புலப்படுத்துகின்ற விதத்தில் அவதானிக்க வேண்டியது அவசியமாகும். முதலாவது, இந்திய தரப்பு தென்னிலங்கையோடு புரிதலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவது என்பது அந்த நாட்டின் நலனுக்கு உட்பட்டது. திருகோணமலை எண்ணெய் குதங்கள், மேற்கு முனையம், பலாலி சர்வதேச விமான நிலையம், காரைக்கால் கப்பல் சேவை போன்ற விடயங்கள் பொறுத்து இந்தியாவின் நகர்வுகள் அவசியமானவையாகும். அத்தகைய நகர்வுகள் இந்திய நலன்களை இலங்கையிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் தென்னாசியாவிலும் உறுதிப்படுத்தக்கூடியது. ஆனால் அதேநேரத்தில் ஈழத்தமிழர்கள் நீண்ட நெருக்கடிக்குள் காணப்படுவது மட்டுமன்றி 2009களுக்கு பின்னர் தீர்வுமின்றி இருப்புக்கான உத்தரவாதமுமின்றி காணப்படுகிறார்கள் என்பது இந்தியாவின் கரிசனைக்குட்பட்டதே. இதனை கருத்திற்கொண்டே இந்தியாவை நோக்கி இந்தியாவின் முக்கியத்துவம் கருதியும் தமிழ்த்தேசிய கட்சிகள் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தன. அத்தகைய திட்டமிடலை இந்திய தரப்பு உதாசீனம் செய்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட தொடங்கியுள்ளது. காரணம் அஜித் கப்ராலை சந்தித்து செய்தி சொல்லும் இந்தியத் தூதுவர் கடிதம் கையளிக்க தயாரான போது புதுடில்லி சென்றதாக செய்தி வெளியானது குழப்பத்தை தருகிறதாகவே தெரிகிறது.

இரண்டாவது, அதேநேரம் தமிழ்த்தேசிய கட்சிகள் நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் உடன்பாட்டில் கையெழுத்திட்ட அதேதினத்தில் திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தமிழ்த்தேசிய கட்சிகளின் நகர்வுகளை முன்னிறுத்தி எண்ணெய் குதங்கள் சார்ந்த உடன்பாட்டை இந்தியா அடைந்துள்ளதா என்ற கேள்வி நியாயமானதாகவே உள்ளது. அதாவது ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்திக்கொண்டு தென்னிலங்கை ஆட்சியாளர்களை தமது கட்டுப்பாட்டுக்குள்ளும் செல்வாக்குக்குள்ளும் கொண்டு வருவதற்கு இந்திய தரப்பு முனைகிறதா என்ற குழப்பமே அதுவாகும். இந்திய-இலங்கை உடன்பாடு மட்டுமல்ல கச்சதீவு உடன்படிக்கை, சிறிமா-சாஸ்தரி உடன்பாடு என்பன எல்லாமே இந்திய நலன்களுக்குட்பட்டதேயாகும்.

மூன்றாவது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை இந்தியாவுடனான புரிதலை ஏற்படுத்தமாயின் தென்னிலங்கையின் ஆட்சி அதீத குழப்பத்தை எதிர்கொள்ளும். இதனை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சிக்காலம் முதல் அவதானிக்க முடிகிறது. அவர் முன்னின்று செயற்பட்டு ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் திட்டமிட்டு பகையாளிகளாக மாற்றினார். அத்தகைய பகைமையே பின்வந்த தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பேணி பாதுகாத்து பலப்படுத்தி வருகின்றனர். அதாவது ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான புரிதல் சாத்தியப்பாடுடைய சூழல் அமைகின்ற போதெல்லாம் இந்தியர்களின் கோரிக்கைகள் எத்தகையதாயினும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அதனை நிறைவேற்றியே வந்துள்ளனர். அதன் ஒரு வடிவமாகவே எண்ணெய் குதங்கள் தொடர்பிலான உடன்பாடு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

நான்காவது, இந்தியா திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் தொடர்பிலே எட்டிய உடன்பாடு தொடர்பிலே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கெதிரான போராட்டங்களும், அமைச்சரவை தீர்மானத்தில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. இதேவிடயத்தை இந்திய தரப்பு கிழக்கு முனையத்திலும் அனுபவித்திருந்தது என்பதை சுட்டிக்காட்டுதல் அவசியமாகும். கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படாமைக்காக அரசாங்கம் இந்தியாவிற்கு தெரிவித்த பிரதான விடயம் தொழிற்சங்க எதிர்ப்பாகும். அதேநேரம் கிழக்கு முனையம் சீனாவிற்கு கையளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். எனவே இதே அனுபவத்தை திருகோணமலை எண்ணெய் குதங்களில் தொடர்பிலான உடன்பாட்டிலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் வழக்கிலும் மக்களது ஆர்ப்பாட்டத்திலும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. மக்களின் எதிர்ப்பினால் அரசாங்கம் இந்தியாவுடனான உடன்பாடுகளை நிராகரித்த செயற்பட வேண்டிய சூழல் ஏற்படுவதாக வெளிப்படுத்துகிறது. அதேநேரம் சீனாவின் நுரைச்சோலை மின்நிலைய திட்டத்திலும் ஹம்பாந்தோட்டை துறைமுக 99 வருடக்குத்தகைக்கு கையளிப்பிலும் மக்கள் போராட்டங்கள் அன்றைய அரசாங்கங்களால் முறியடிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விடயமாகும்.

ஐந்தாவது, இத்தகைய பாரிய நிதியினை வழங்க இந்தியா முன்வந்த போது நிச்சயமாக இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதில் அதிக குழப்பம் இல்லாத போதும் இலங்கைப் பிரதம மந்திரியினது அண்மைய சீனா தொடர்பான அறிவிப்பென்பது கவனத்திற்குரியதாகும். அதாவது 'இலங்கையின் உயிர் நண்பன சீனா' என்பதாகும். அதுவே நிரந்தரமானது. அத்தகைய தென் இலங்கை ஆட்சியாளரின் உபாயம் சரியானதே. இந்தியாவை கையாள சீனா அவசியமானது. சீனாவை முன்னிறுத்தி 900 மில்லியன் நிதியுதவியை இந்தியாவிடம் பெற்றுவிட்டது தென் இலங்கை அரசாங்கம். இந்தியாவால் அத்தகைய நிதியளிப்பட்ட போது சீனாவின் கடன்களை கையளிக்குமாறும் கோரப்பட்டதாகவும் செய்தியொன்றுள்ளது. அதனை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த முடியாதுள்ளது. எதுவாயினும் சீனாவின் உயிர் நண்பனுக்கு இந்தியா நிதியுதவியளித்துள்ளதாகவே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இவ் நிதியுதவிக்காக தென் இலங்கை சீனாவின் நட்பினை கைவிடும் என்று இந்தியா கருதுமாயின் உலக வரலாற்றில் இதனைவிட மோசமான இராஜதந்திர நகர்வாக வேறு எதுவும் அமையாது.

ஆறாவது தற்போது தென் இலங்கையால் பெறப்பட்ட நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கானது மட்டுமல்ல. அது தென் இலங்கையின் அரசியல் நெருக்கடிக்குமானது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் பொருளாதார நெருக்கடியேயாகும். இலங்கை ஏற்றுமதியினாலோ உற்பத்தியினாலோ இயங்கும் நாடு அல்ல. மாறாக கடன், நன்கொடை மற்றும் நிதியுதவியினாலும் முதலீட்டுதர் திட்டங்களாலும் இயங்கும் ஒரு நாடு. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எனக்குறிப்பிடும் விடயம் மேற்கு நாடுகளாலும் அவற்றின் நிதி நிறுவனங்களாலும் ஏற்பட்ட நெருக்கடியாகும். சீனாவுடனான தென் இலங்கை ஆட்சியாளரின் நெருக்கமான அரசியல் இராணுவ உறவும் சீனாவின் இலங்கைக்கான நிதியுதவிகளுமே அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி மறுக்கப்பட்டமைக்கான காரணமாகும். எனவே இது ஒரு தற்காலிகமான நெருக்கடியே அன்றி ஒரு பொருளாதார மந்தம் அல்ல. இலங்கையில் எந்தவொரு நிதி நிறுவனமோ வங்கியோ கம்பனியோ இதுவரை மூடப்படவில்லை. அவ்வகை நிறுவனங்கள் எதுவும் திவாலாகவில்லை.

எனவே இந்தியாவின் தற்போதைய நகர்வுகள் எந்தவிதத்திலும் ஈழத்தமிழருக்கானதல்ல. அது இந்திய நலனுக்கானது. ஆனால் அத்தகைய நலனும் இந்தியாவால் எட்டப்படுமா என்பதே பிரதான கேள்வியாகும். சீனாவின் நண்பனை இந்தியா பாதுகாத்துக் கொண்டு இந்தியாவின் நலனை அடைய முடியுமொன கருதுவது அபாயமானதே. ஆனால் இந்தியாவின் நகர்வுகளை ஈழத்தமிழருக்கானதாக மாற்றுவதென்பது ஈழத்தமிழரது அரசியலிலேயே தங்கியுள்ளது. அது சாத்தியப்படாத வரை ஈழத்தமிழர் இருப்பில் எந்த மாற்றமும் நிகழவாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE