Wednesday 24th of April 2024 03:11:46 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் பின்னடைவு - ஐ.நா. ம.உ.ஆணையாளர்!

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் பின்னடைவு - ஐ.நா. ம.உ.ஆணையாளர்!


இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வருந்தத்தக்க வகையில் கடந்த ஆண்டு மேலும் தடைகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்படுகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.

தண்டனை விலக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் கடந்த கால விதிமீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் மிகவும் அவசியமான, ஆழமான சட்ட மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு கருத்து வெளியிட்ட போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் சிவில் சமூக நடவடிக்கைகளின் இராணுவ அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைகிறேன். இவ்வாறு சிவில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவ அதிகாரிகள் சிலர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்கள் எனவும் மிச்செல் பச்லெட் கூறினார். இராணுவத்தில் தங்கியிருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினார்.

சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல் தொடர்வதாக தொடர்ந்து வரும் அறிக்கைகளால் நான் ஆழ்ந்த கவலை அடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு நடைமுறைகள் தாமதம் குறித்து கரிசனை வெளியிட்ட ஆணையாளர், மிச்செல் பச்லெட், பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படுகின்ற கவலைக்குரிய குறைபாடுகள் உத்தேச திருத்தச் சட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.

இதேவேளை, ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்த இலங்கை அரசு குழுவுக்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த அறிக்கை ஆழமான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கையும் மற்ற உறுப்பு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கின்றன. குறிப்பாக, தீர்மானத்தின் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை கடுமையாக எதிர்ப்பதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE