Thursday 20th of January 2022 07:19:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 90 - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 90 - நா.யோகேந்திரநாதன்!


ஏமாற்று வலையாக வடக்கு கிழக்கு இணைப்பு! - நா.யோகேந்திரநாதன்!

'ஒரு விடயத்தை மட்டும்தான் தாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இது வடக்கிலும், கிழக்கிலும் உள்ள மக்கள் தற்காலிக இணைப்புக்கு ஆதரவா, இல்லையா அவர்களே தீர்மானிக்கத்தக்கதாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதியால் தீர்மானிக்கும் ஒரு நாளில் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பொன்று நடத்தப்படும். இது ஒரு சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானிக்கப்படும். அம்பாறையை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் 33 வீதம் முஸ்லிம்கள் 27 வீதம் சிங்களவர்கள் எஞ்சிய 40 வீதம் தமிழர்கள் உள்ளனர். இத் தமிழர்களில் இரு வகையினர் உள்ளனர். அவர்களில் அரைப்பங்கினருக்குக் கூடியோர் மட்டக்களப்புத் தமிழர்கள், யாழ்ப்பாணத் தமிழர் 20 வீதம் இருப்பார்களாயின் 40 வீதமானோர் அத்தகைய இணைப்பை எதிர்ப்பார்கள். எனவே கிழக்கு மக்களின் அங்கீகாரம் இணைப்புக் கோரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மையினர் எதிர்ப்பார்கள். அத்துடன் இணைப்பு முடிந்துவிடும். இந்தத் தற்காலிக இணைப்பினால் பயங்கரவாதத்துக்கு முடிவு கொண்டு வரப்படும்.'

இது இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மூன்று நாட்கள் முன்பு 26.07.1987 அன்று 1,200 பேர் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் ஜே.ஆர்.ஜயவரத்தன வெளியிட்ட கருத்தாகும். அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக வடக்கு கிழக்கு இணைப்பு எவ்வாறு இந்தியாவையும் தமிழ் மக்களையும் ஏமாற்றத்தான் கையாளும் தந்திரம் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஏனைய பிரச்சினைகளை விட முதன்மையானதாகும். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அந்த இனம் காலங்காலமாக வாழ்ந்துவரும் பாரம்பரிய தாயகம் உண்டு. அங்குதான் அந்த இனத்தின் தனித்துவமான மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்பன செழிப்போங்கி நிலைபெற்றிருக்க முடியும்.

வரலாற்றுக் காலம் முதல் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1833ம் ஆண்டு ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கோல்புறூக் ஆணைக்குழுவினால் தமிழர் தாயம் வடக்கு, கிழக்கு என இரு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஆனாலும் அது தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியாகவே விளங்கி வருகிறது.

ஒரு தேசிய இனத்துக்குரிய தனித்துவ அம்சங்களில் பாரம்பரிய வாழிடம் முக்கியமானது. எனவேதான் நாம் எமது பாரம்பரிய வாழிடத்தை இழந்தோமானால் ஒரு தேசிய இனத்துக்கான தகைமையை இழந்து விடுவோம்.

எனவேதான் தமிழர் விடுதலைக் கூட்டணி முதற்கொண்டு ஏனைய சகல போராளி அமைப்புகளும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் உறுதியாக இருந்தனர்.

ஆனால் சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின் தேசிய தனித்துவத்தைச் சிதைக்கும் நோக்குடன் வடக்குக் கிழக்கைப் பிரிப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற ராஜீவ் -பிரபாகரன் பேச்சுகளின்போது வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் மிகவும் உறுதியாயிருந்தார் பிரபாகரன்.

இரண்டு மணிநேரத்துக்கு மேலதிகமாக இடம்பெற்ற பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுயாத நிலையில் மத்திய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னிலையில் ராஜீவ் -பிரபாகரன் எழுதப்படாத இரகசிய உடன்படிக்கை உருவானது.

அதன்படி வடக்குக் கிழக்கு இணைப்பு சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலேயே உறுதி செய்யப்படுமெனவும் புலிகள் பாவனைக்குதவாத ஆயுதங்களை மட்டும் ஒப்படைத்தால் போதுமெனவும் புலிகளின் தலைமையில் வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுமெனவும் அதன் மூலம் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமெனவும் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதில்லையெனவும் உடன்பாடு காணப்பட்டது. அடுத்தநாள் அதாவது 29.07.1987 பிற்பகல் 3.00 மணிக்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் ராஜீவ் காந்திக்குமிடையே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்திய ராஜதந்திரம் இலங்கையைத் தோற்கடித்து விட்டதுபோலவே தோன்றும். ஆனால் இந்த விடயத்தில் இந்தியா ஒரு பகுதி வெற்றியை மட்டுமே பெறமுடிந்தது. இலங்கை அமெரிக்காவின் தளமாக மாறும் ஒரு நிலைமையையும் திருமலை எண்ணெய் குதங்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்படுவதையும் தடுக்க முடிந்தது. ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் ஜே.ஆர். மேற்கொண்ட தந்திரமான காய் நகர்த்தல் மூலம் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட அதேவேளையில் தமிழ் மக்களுடன் போரை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இந்தியா தள்ளப்பட்டது.

வடக்குக் கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கும் விடயத்தில் அதன் தலைமை ஆளுனராக விடுதலைப் புலிகள் சிபார்சு செய்த மேலதிக அரசாங்க அதிபர் பத்மநாதனை நியமிக்க மறுத்து முன்னாள் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்தை ஜே.ஆர். நியமிக்க முயன்றார். இலங்கை விவகாரங்களைக் கையாண்ட துணைத்தூதுவர் டிக்ஷிட் ஜே.ஆருக்கு ஆதரவாகவே செயற்பட்டார். இந்த இழுபறி நிலையை பயன்படுத்தி ஜே.ஆர். வடக்குக் கிழக்கில் சிங்களவரைக் குடியேற்றுவதிலும் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதிலும் தீவிரம் காட்டினார்.

இவ்விடயத்தைப் புலிகள் மீண்டும் மீண்டும் டிக்சிற்றிடம் சுட்டிக்காட்டிய போதும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏற்கனவே இணக்கப்பாடு காணப்பட்ட ராஜீவ் - பிரபா இரகசிய உடன்பாட்டில் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதும், பொலிஸ் நிலையங்களைத் திறப்பது என்பன உடனடியாக நிறுத்தப்படுமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 5 கோரிக்கைகளை வைத்து விடுதலைப் புலிகளின் சார்பில் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறான். அவை சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தல், சிங்கள ஊர்காவல் படையினரிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் அவசரகாலச் சட்டத்தை நீக்கல் என்பனவாகும்.

திலீபனின் 5 கோரிக்கைகளில் எதுவுமே புதிதாக முன் வைக்கப்படவில்லை. அனைத்துமே ராஜீவ் - பிரபா உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்ட விடயங்களேயாகும்.

ஆனால் டிக்சிற்றுக்கும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குமிடையேயிருந்த நெருக்கம் காரணமாக டிக்சிற் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் குழப்பும் நோக்குடனேயே திலீபனின் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்ற வகையில் ராஜீவ் காந்திக்கு டிக்சிற் விடயங்களைத் திரிபுபடுத்தி அறிவித்து வந்தார். அதேவேளையில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இடைக்கால அதிகாரம் புலிகளின் கைகளுக்கு வருவதை விரும்பவில்லை.

கொழும்பில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்பு ராஜீவ் காந்திக்கு மரியாதை இராணுவ அணி வகுப்பு இடம்பெற்றது. அவ்வணிவகுப்பில் கலந்து கொண்ட கடற்படையினன் ஒரு திடீரெனத் துப்பாக்கிப் பிடியால் ராஜீவ் காந்தியைத் தாக்க முயன்றான். ராஜீவ் உடனடியாகவே குனிந்து விட்டதால் ஆபத்து எதுமின்றி தப்பி விட்டார். அந்தக் கடற்படையினன் உடனடியாகவே கைது செய்யப்பட்டான்.

இவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுச் சிறை செய்யப்பட்டான். அவன் சிறைத் தண்டனை முடிவு பெற்று வெளியே வந்த பின்பு இலங்கையின் பெரிய ஜோதிடர்களில் ஒருவனாக மாறி விட்டான். அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய ஜோதிடராக மாறிவிட்டான். அதாவது ஒரு நாட்டின் பிரதமர் மீது இன்னொரு நாட்டின் படையினன் மேற்கொண்ட வன்முறை முயற்சி பெரிதுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடிப்படையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க இந்தியா எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் தயாராயிருந்தது என்பது தான் முக்கிய விடயமாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையழுத்தாகிய அடுத்தநாளே இந்திய அமைதிப் படை திருகோணமலைத் துறைமுகத்தில் வந்து இறங்கியது. காங்கேசந்துறையில் வந்திறங்கிய அமைதிப் படையினர் தங்கள் வாகனங்களில் புலிக் கொடிகளைக் கட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்திய அமைதிப் படையின் வருகையும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வைக் காண்பதற்கான ஆரம்பம் என்றே மகிழ்ந்தனர். யாழ்ப்பாணம் நோக்கி அமைதிப் படையின் வாகன அணி வந்தபோது குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்துத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அத்துடன் இலங்கை இராணுவத்தினர் அவர்களின் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.

இவ்வாறு வடக்குக் கிழக்கெங்கும் இந்திய அமைதிப் படை குவிக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது எனக் கூறிக் கொண்டு திருகோணமலை, மணலாறு ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தது. அவர்களின் பாதுகாப்புக்கெனப் புதிய பொலிஸ் நிலையங்களும் திறக்கப்பட்டன. இன்னொருபுறம் சிங்களப் கிராமவாசிகள் ஊர்காவற் படை என்ற பேரில் ஆயதபாணிகளாக்கப்பட்டனர்.

அதேவேளை வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுவதும் சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுபறி நிலையிலேயே இருந்தது.

இவ்விடயங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் டிக்சிற்றிடம் மீண்டும் மீண்டும் முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏறக்குறைய 2 மாதங்கள் பொறுமை காத்த விடுதலைப் புலிகள் ராஜீவ் - பிரபா ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் 5 கோரிக்கைகளாக முன் வைத்து அஹிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். டிக்சிற்றுக்கு மட்டுமின்றி இந்தியத் தூதரகத்துக்கும் இந்திய அமைதிப் படைத் தளபதிக்கும் அறிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவ்வகையில் 1987 செப்டெம்பர் 15ம் நாள் திலீபன் நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தான்.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்காதெனவும் இரண்டு மூன்று நாட்களில் போராட்டம் கைவிடப்பட்டு விடுமெனவுமே இந்தியப் தரப்பினர் நம்பினர்.

ஆனால் நிலைமைகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகவே இடம்பெற்றன. உண்ணாவிரதப் போராட்ட்துக்கு ஆதரவாக பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி இரவு பகல் பாராது தங்கள் ஆதரவை வழங்கினர்.

இந்திய அமைதிப் படையின் தளபதிகள் மாறி மாறி வந்து உண்ணா விரதத்தைக் கைவிடும்படியும் பின்பு பிரச்சினைகளைப் பேச முடியுமெனவும் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட முடியுமென்று விட்டனர். இறுதியாக டிக்சிற் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டிவருமென மிரட்டியபோதும் எவ்வித பலனும் கிட்டவில்லை.

3ம் நாள் திலீபன் தன் உறுதிப்பாட்டை வெளியிட்டு உரை நிகழ்த்தினான். ஒன்பதாம் நாள் திலீபன் ஹோமா நிலையை அடைந்துவிட்ட போதும் இந்தியா பொருட்படுத்தவில்லை.

பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் கண்ணீரின் மத்தியில் 12ம் நாள் அதாவது 20.09.1987 காலை நல்லூர் வீதியில் திலீபனின் உயிர் பிரிந்தது.

காந்தீய தேசத்துடன் காந்தீய வழியில் போராடி உயிர் நீத்த திலீபனின் வீரச் சாவு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை மட்டுமின்றி கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையம் முற்றாகவே இழந்தனர்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம், நல்லூர்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE