Wednesday 24th of April 2024 11:24:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்த ஆண்டின் 9-ஆவது ஏவுகணை சோதனையை இன்று நடத்தியது வட கொரியா!

இந்த ஆண்டின் 9-ஆவது ஏவுகணை சோதனையை இன்று நடத்தியது வட கொரியா!


கொரிய தீபகற்பத்தின் கிழக்கே உள்ள கடலை நோக்கி இன்று சனிக்கிழமை காலை வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missiles) ஏவி சோதனை நடத்தியுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வட கொரியா மற்றொரு ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.

இன்று ஏவப்பட்டது பாலிஸ்டிக் ஏவுகணை என்பதைக் கண்டறிந்துள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகமும் இது சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை என்று கூறியது.

இதேவேளை, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை கண்டிப்பதாக அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகம் தெரிவித்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இவ்வாறான சோதனைகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இன்று வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 9-ஆவது சோதனையாக அமைந்துள்ளது. கடந்த பெப்ரவரி 27-ஆம் திகதி உளவு செயற்கைக்கோளுக்கான அமைப்புகளை ஏவி சோதனை செய்ததாக வடகொரியா கூறியது.

பியோங்யாங்கின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள சுனானுக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து இன்று சனிக்கிழமை ஏவுகணை சோதனையை வட கொரியா செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 27 மற்றும் அதற்கு முன்னரும் பல ஏவுகணைகள் இந்தத் தளத்தில் இருந்தே ஏவப்பட்டன.

முன்னோடியில்லாத வகையில் மீண்டும் மீண்டும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்து வருவதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு பேரவை இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரானது என தென் கொரிய ஜனாதிபதி அலுவலகமான புளூ ஹவுஸ் ( Blue House) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி, இந்த ஏவுகணை சோதனையை ஏற்க முடியாது என்று கூறினார். வட கொரிய இன்று ஏவிய ஏவுகணை 550 கி.மீ. உயரத்தை எட்டியது எனவும் நோபுவோ கிஷி கூறினார்.

தென் கொரியாவில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் வட கொரியாவின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை தொடர் ஏவுகணை சோதனைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், வடகொரியா கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருகிறது. எதிர்காலத்தில் உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரிய தயாராகி வருவதாக தெரிகிறது. மேலும் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (Intercontinental Ballistic Missiles -ICBMs) சோதனைகளையும் வட கொரியா மீண்டும் தொடங்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பில் வட கொரியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் வட கொரிய விரோதக் கொள்கைகளை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று பியோங்யாங் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE