Thursday 20th of January 2022 08:18:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
தற்போதுதான் சிங்களவர்கள் பொருளாதாரத் தடையை உணர்கிறார்கள் - சிறிதரன் எம்பி!

தற்போதுதான் சிங்களவர்கள் பொருளாதாரத் தடையை உணர்கிறார்கள் - சிறிதரன் எம்பி!


பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் இன்றைய தினம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினை யும் நாங்கள் தான் பேணிவளர்க்க வேண்டும் நாங்கள் தான் அவற்றை கட்டிக்காக்க வேண்டும் நாங்கள் அதற்கான முதுகெலும்பாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் இன்றைய நாள் ஒரு பண்பாட்டு நாளாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்திருக்கிறது. மிக முக்கியமாக தமிழர்களிடமிருந்து அருகிப் போகின்ற போர்த்தேங்காய் உடைத்தல் தலையணைச்சமர் முட்டி உடைத்தல் கிளித்தட்டு போன்ற எங்களுடைய பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் தமிழரோடு பிறந்து வளர்ந்த அவர்களுடைய கலாச்சாரத்தோடு இயல்புடைய கூடிய இந்த நிகழ்வுகள் எங்களை விட்டு விலகிச் செல்லுகின்றன. அவ்வாறு விலகிச் செல்லுகின்ற இந்த விளையாட்டுக்களை மீண்டும் நினைவூட்டுகின்ற வகையில் பண்பாட்டு விழாவாக தமிழர்களுடைய திருநாளான தைப்பொங்கலை மையமாக வைத்து நீங்கள் முன்னெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

இங்கே வருகிறபோது பார்த்தேன் நெற்கதிர்கள் பூத்துக்குலுங்க இந்த மண்டபம் மேடையை அலங்கரித்து இருக்கிறீர்கள். எங்கள் மக்களுடைய வரலாற்றிலே நாம் நெல்லோடும் இந்த நெல்லின் வாழ்வோடும் வாழ்ந்தவர்கள். இம்முறை விவசாயிகளுக்கான பசளைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் விவசாயிகளின் அறுவடை என்பது மிகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது .

ஒரு ஏக்கரில் 8 அல்லது ஒன்பது பை நெல்லுத்தான் அறுவடை செய்கின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் இப்போது மியன்மாரில் இருந்தும் வேறு நாடுகளில் இருந்தும் எத்தனையோ இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய தயாராக இருக்கிறது. இவ்வாறு அங்கு ரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட அரிசிகளை இங்கு இறக்குமதி செய்ய முனைகிறார்கள் இங்கு விவசாயம் செய்பவர்களுக்கு உரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அறுவடை செய்கின்ற காலத்தில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிலவற்றில் இனித்தான் விதைப்பு ஆரம்பமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கில் விவசாயிகள் நெல் அறுவடை செய்கின்ற காலத்தில் இந்த அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரசியினை இறக்குமதி செய்வது மேலும் எமது மக்களை துன்பத்துக்கு உள்ளாகும்.

ஆனால் நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில் 90 களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்ற போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள் அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கணேசலிங்கன் பாடசாலைகளின் அதிபர்கள் கிராம அலுவலர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE