Friday 19th of April 2024 05:28:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஓட்டமாவடியில் கொவிட்-19 சடலங்கள் நல்லடக்கப்பணி நிறைவு!

ஓட்டமாவடியில் கொவிட்-19 சடலங்கள் நல்லடக்கப்பணி நிறைவு!


ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர்ப் பகுதியில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி ஒரு வருட பூர்த்தியாகியுள்ள நிலையில் விசேட ஒன்று கூடலும், விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.எஸ்.எம்.தாரிக், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.நியாஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர், பிரதேச சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொவிட் - 19 மையவாடிக்கருகில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைவாக கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை ஓட்டமாவடி மஜ்மாநகர் பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

இதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மாநகர் பகுதியில் பிரதேச சபை, சுகாதார திணைக்களத்தினர், இராணுவத்தினர் ஆகியோரினால் உடல்களை அடக்கம் செய்யும் பணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று வரைக்கும் இராணுவத்தினர், சுகாதாரத்தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி பிரதேச சபையினால் நல்லடக்கம் செய்வதற்கு விரும்புகின்ற அனைத்தின மக்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

05.03.2021 தொடக்கம் 05.03.2022 வரை கொவிட்-19 தொற்றினால் மரணித்த 3,634 நபர்களின் உடல்கள் இம்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைவாக நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் இன்றிலிருந்து. நல்லடக்கம் செய்யலாமென அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி முடிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அனுமதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, சுகாதார மற்றும் பாதுகாப்புத்தரப்பினருக்கும் நாடளாவிய ரீதியில் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களுக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE