Tuesday 19th of March 2024 01:49:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயம் - வே.இராதாகிருஷ்ணன் எம்பி!

வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயம் - வே.இராதாகிருஷ்ணன் எம்பி!


"வடக்கு, கிழக்கு, மலையகம் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்." - இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக மலையக மக்கள் முன்னணி எந்தப் போராட்டத்தையும் வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் இணைந்து நடத்தத் தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் கையெழுத்து வேட்டை இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.

நுவரெலியா பிரதான நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்த கருத்துத் தெரிவித்த இராதாகிருஷ்ணன் எம்.பி.,

"பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த நாட்டில் பலரும் கருதுகின்றார்கள். ஆனால், அந்தச் சட்டமானது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தகின்ற ஒரு சட்டமாகும்.

இந்தச் சட்டத்தின் மூலமாக எந்தவொரு நபரையும் கைதுசெய்கின்ற அதிகாரம் பொலிஸாரிடம் இருக்கின்றது. எனவே, அனைத்து மக்களும் இணைந்து இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்.

இந்தச் சட்டத்தின் மூலமாக அதிக பாதிப்பைச் சந்தித்த மலையகக் கட்சி என்றால் அது மலையக மக்கள் முன்னணி என்பதை அனைவரும் அறிவார்கள். எங்களுடைய கட்சியின் தலைவர் இந்தச் சட்டத்தின் மூலமாகக் கைதுசெய்யப்பட்டார். அவர் துன்புறுத்தப்பட்டார். அதேபோல் எங்களுடைய கட்சியின் விசுவாசிகள் கைதுசெய்யப்பட்டு எந்தக் காரணமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டனர்.

எனவே, போர் வடக்கு, கிழக்கிலே நடந்தாலும் மலையகப் பகுதியில் இருக்கின்ற இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்தச் சட்டம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மலையகத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்றபோது வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளைப் பாடசாலைகளில் செய்திருக்கின்றேன். அதன்போது எனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

அதற்குக் காரணம், நாங்கள் இரண்டு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அப்படிச் செயற்பட்டால் மாத்திரமே வடக்கு, கிழக்கு மக்களும் மலையக மக்களும் எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் பூர்த்திசெய்து கொள்ள முடியும். அதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் நன்குணர்ந்து செயற்படுகின்றது. இந்த நிலைமை தொடர வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE