Wednesday 8th of February 2023 02:51:03 PM GMT

LANGUAGE - TAMIL
பிக்பாஸ் 3 – நாள் 22 – “பிக்பாஸ் வீட்டின் ‘புதிய’ இம்சை அரசி” - சுரேஷ் கண்ணன்

பிக்பாஸ் 3 – நாள் 22 – “பிக்பாஸ் வீட்டின் ‘புதிய’ இம்சை அரசி” - சுரேஷ் கண்ணன்


திங்கட்கிழமை என்பது பிக்பாஸ் வீட்டில் நிகழும் ஒரு முக்கியமான சடங்கை குறிக்கும் நாள். ‘நாமினேஷன் தினம்’. ஒவ்வொரு போட்டியாளரும் தான் வெளியேற்ற விரும்பும் இரு நபர்களை காரணங்களுடன் குறிப்பிட வேண்டும்.

இன்றைய நாளில் சில கூட்டணிகள் மாறும்; சில பழைய நட்புகள் முறியும்; புதிய விரோதங்கள் முளைக்கும். இந்த வகையில் சில மெல்லிய அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் பார்வையாளர்கள் அறிய முடியும்.

பிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலேயே இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. முன்மொழிபவர் இரு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத்தான் வழக்கமாக காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலோனோர் சொல்லி வைத்தது போல் இன்று மீராவின் பெயரையே வரிசையாகக் குறிப்பிட்டார்கள். பிக்பாஸின் எடிட்டிங் டீமே இதனால் மிரண்டு போய் தன் வழக்கமான பாணியைக் கைவிட்டு மீராவின் திருநாமம் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதைக் காட்டி நம்மையும் மிரட்டினார்கள்.

வனிதாவோடு ஒப்பிடும் போது மீரா அத்தனை கடுமையானவர் இல்லை. ஆனால் இன்னொரு வகையில் இம்சை அரசியாக இருக்கிறார். தன்னைப் பற்றி அறியும் வம்புகளை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக சென்று விவாதிப்பது இவருடைய நல்ல குணம்தான். ஆனால் அந்த உரையாடல் கசப்புடன் முறிந்து போவதற்கு மீராவே பெரும்பாலும் காரணமாக இருக்கிறார். ஓர் உணர்ச்சிகரமான தருணத்தில் உரையாடலை சட்டென்று துண்டித்துக் கொண்டு விலகி விடுகிறார். இதனால் எதிர் தரப்பு கடுமையான வெறுப்பை அடையக்கூடும்.

தன்னிடம் நிகழ்த்தப்பட்ட உரையாடலை தனக்குச் சாதகமான வகையில் மற்றவர்களிடம் மாற்றி மாற்றிச் சொல்லும் குணாதிசயமும் மீராவிடம் இருப்பது போல் தெரிகிறது. என்றாலும் அவர் பெரும்பாலோனோரால் ஒதுக்கப்படுவது சற்று பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

**

IMAGE_ALT

இன்றைய நாமினேஷனில் மீராவிற்கு அடுத்தபடியாக அதிகமான எதிர்வாக்குகளைப் பெற்றவர் சரவணன். இவர் இயல்பில் அமைதியான குணாதிசயத்தைக் கொண்டவர். ஆனால், ‘ஒருவரின் மனம் புண்படுமே’ என்கிற கவலையேதும் இல்லாமல் வார்த்தைகளை மிக அலட்சியமாக, சட்டென்று வெளிப்படுத்தி விடுகிறார். துவக்க நாளிலேயே ஷெரீனைப் பார்த்து ‘என்ன குண்டாயிட்டிங்க?” என்று கேட்டு விட்டார். ஏற்கெனவே நொந்து போய் கலையத் துவங்கியிருந்த ஷெரீன் ஆர்மியின் மீது வெடிகுண்டை வீசினார்.

இன்றைய தினத்தின் காலையில் கூட மோகன் வைத்யாவுடன் ஒரு பஞ்சாயத்து நடந்தது. காஃபி தயாரிக்க தாமதம் ஆனதால் பிக்பாஸ் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மோகன் தனக்கான காஃபியை தயாரித்துக் கொண்டிருந்தார். “நீங்கள் மட்டும் தயாரித்துக் குடிக்கலாமா, மற்றவர்களுக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே?” என்று அபிநயத்தால் மோகனிடம் கேட்டார் சரவணன். அதில் காணப்பட்ட சில சைகைகளும் உடல்மொழியும் மோகனை காயப்படுத்திற்று.

பரதநாட்டியம் கற்ற ஆண்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. பெண்களின் உடல்மொழி தன்னிச்சையாக அவர்களிடம் படிந்துவிடும். இது இயல்பானதுதான். ஆனால் பொதுப்புத்திக்கு இது புரியாது. ஆபாசமாக கிண்டலடிக்கும். கமல்ஹாசனுக்கும் இது போன்ற சங்கடம் நேர்ந்ததாக ஒரு தகவல் உண்டு. பரதநாட்டியம் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் இது சார்ந்த விமர்சனங்கள் வரத்துவங்க, அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக் கொண்டதாக சொல்வார்கள்.

இந்த நோக்கில் மோகன் வைத்யாவின் புண்படுதல் புரிந்து கொள்ளக்கூடியது. அவர் திரைப்படங்களிலும் இவ்வாறான பாத்திரங்களில் நடித்திருப்பதால் கேலிக்கு ஆளாவது எளிது. நடுத்தர வயதைக் கடந்தவர்கள், இளையவர்களுடன் பழகும் போது ஜாக்கிரதையாக தங்களின் எல்லையைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ரொம்பவும் இறங்கி ஜோதியில் ஐக்கியமானால் இளைஞர்களின் மோசமான கேலிக்கு ஆளாக நேரிடும். சேரனும் இதைத்தான் குறிப்பிட்டார்.

பிறகு மோகனிடமே இதைப் பற்றி விசாரித்த சரவணன், ‘தான் அந்த நோக்கில் சொல்லவில்லை, இயல்பாகத்தான் சைகையில் விசாரித்தேன்’ என்று பொய்யாக சாதித்தார். ஆனால் பிறகு சேரனிடம் இது பற்றிய விளக்கம் அளிக்கும் போது சரவணனின் உடல்மொழி ரசிக்கத்தக்கதாக இல்லை. மோகனின் அழுகையும் புகாரும் நியாயம் என்றே பட்டது.

இது போல் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் சரவணன் அடிக்கும் கமெண்ட்டுகள் பிறரின் வெறுப்பை எளிதில் சம்பாதிக்கும். சமீபத்தில், சமையல் அணியிலிருந்து மதுமிதாவை அவர் நிராகரித்துக் கொண்டேயிருக்கும் ஒரு விஷயமே போதும். வனிதா இருக்கும் போதாவது, வனிதாவின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக அவர் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகும் மதுமிதாவை அவர் துரத்திக் கொண்டேயிருப்பது அராஜகம். அரைகுறை சமையல் அறிவை வைத்துக் கொண்டு அவர் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் இருப்பது கேலிக்கூத்து. ‘சும்மா நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன்’ என்று பிறகு சரவணன் சமாளிக்க வேண்டியிருந்தது.

இந்தக் காரணம் மட்டுமல்லாமல், ‘தாமரை இலை தண்ணீராகவே’ அந்த வீட்டில் வளைய வருகிறார் சரவணன். ஹோம் சிக்னெஸ் பிரச்சினை வேறு. ‘ஆளை விடுங்கடா சாமி’ என்கிற மனோபாவத்தில் இருப்பது போல் தெரிகிறது. எனவே நாமினேஷனில் சரவணனின் பெயர் அதிகமாக வந்தது.

ஆக.. மீரா, சரவணனைத் தாண்டி அதிகமாக நாமினேட் ஆனவர்கள் மோகன், சேரன் மற்றும் அபிராமி.

அபிராமியின் பெயரை சாக்ஷி முன்மொழிந்தது சற்று அதிர்ச்சியானது. வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையேயான நட்பு புதுப்பிக்கப்பட்டது போல்தான் தெரிந்தது. ஆனால் அது உண்மையில் அப்படியாகவில்லை போல.

‘பஞ்சாயத்து தலைவராக’வே உலவும் சேரனையும் சிலர் வெறுக்கிறார்கள் போல. ‘கொலையாளி’ டாஸ்க்கில் சிறைத்தண்டனையை அவர் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டது போல்தான் இருந்தது. ஆனால் பிறகு அது குறித்த தன் அதிருப்தியை சில போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். அதற்காகவே சிலரால் நாமினேட் செய்யப்பட்டார்.

ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் மோகனை நாமினேட் செய்ய சிறப்புக் காரணம் எதுவும் தேவையில்லை. அவரது அநாவசியமான அழுகையும், முதல் சீஸன் சிநேகனையும் மிஞ்சும் கட்டிப்பிடி வைத்தியமுமே போதுமான காரணங்கள்.

**

பிக்பாஸ் வீட்டில் சில டாஸ்க்குகள் நுட்பமாக வடிவமைக்கப்படுகின்றன. ஒருவர் மற்ற போட்டியாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்கிற உண்மைகளை விளையாட்டுக்களின் மூலம் கசிய வைத்து விடுகிறார்கள். இதனால் ஒருவரையொருவர் கோர்த்து விட்டு சண்டைகளையும் கசப்புகளையும் வளர்க்கிறார்கள். வம்புகள் பெருகுகின்றன. நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகர்கிறது.

அந்த நோக்கிலான விளையாட்டு ஒன்று இன்று நடைபெற்றது. ஒரு கண்ணாடி குடுவையில் ‘இரு கேள்விகள்’ அடங்கிய துண்டுச்சீட்டுகள் இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் தற்செயலான துண்டுச்சீட்டை எடுத்து அதற்கான பதில்களை பொதுச்சபையில் சொல்ல வேண்டும். நாமினேஷனைப் போலவே இந்த விளையாட்டிலும் மீராவிற்கு எதிரான கருத்துக்கள் அதிகம் சொல்லப்பட்டன.

முதலில் சேரன். ‘இந்த வீட்டை விட்டு வெளியே சென்றாலும் நீடிக்கக்கூடிய உறவாக’ லொஸ்லியாவைக் குறிப்பிட்டது எதிர்பார்த்ததே. ‘ஒரு நல்ல மாப்பிள்ளை’ அவளுக்கு கிடைக்கும் என்று குத்தல் நகைச்சுவையுடன் சொன்னார். ‘இந்த விளையாட்டு முடிந்ததும் மறந்து விடக்கூடிய உறவு’ என்று ‘மீரா’வைக் குறிப்பிட்டார்.

IMAGE_ALT

‘பொறாமைப்பட வைக்கும் நபர்’ என்று சாண்டியைக் குறிப்பிட்டார் மோகன். ஒரு நல்ல entertainer-ஆக சாண்டி இருக்கிறாராம். சாண்டியின் கேலிகளால் சமயங்களில் மனம் புண்பட்டாலும் அவரை மனதார மோகன் ரசிக்கிறார் போலிருக்கிறது. இருவருக்கும் இடையேயான உறவு டாம் அண்ட் ஜெர்ரி எலி –பூனை விளையாட்டாக இருக்கிறது. ‘பொறாமைப்பட எதுவுமில்லை’ என்கிற நபராக மீராவைக் குறிப்பிட்டார் மோகன்.

“நீ நண்பனானது என் பாக்கியம்” என்கிற கேள்விக்கு முகினை குறிப்பிட்டார் அபிராமி. அவசியமான சமயங்களில் துணை நின்றிருக்கிறாராம். நட்பிற்கும் மேலான உறவாக அது மலர்ந்து கொண்டிருக்கிறதாம். ‘ஐ லவ் யூ’ என்று அபிராமி முகினைப் பார்த்து சொன்னதும் ‘ரஜினி’ பாணியில் சுண்டு விரலைக் கடித்துக் கொண்டு வெட்கப்பட்டார் முகின். அபிராமி முதலில் கவினுடன்தான் அதிகம் பழகிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டின் காதல் நாடகங்கள் ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டைப் போலவே இருக்கிறது. ‘உன்னைப் பார்த்தது என் வாழ்வின் சாபம்’ என்று மீராவைக் குறிப்பிட்டார் அபிராமி. மீராவின் முகபாவத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.

அடுத்தது லொஸ்லியா. அவர் வெட்கப்பட்டு கண்களை மூடிச் சிரிக்கும் போதே அது கவின் தொடர்பானது என்று மக்கள் யூகித்து விட்டனர். ‘யாருடன் பேசப் பிடிக்கும்?” என்ற கேள்விக்கு ‘கவினுடன் கதைக்கப் பிடிக்கும்” என்றார். (உதைக்கப் பிடிக்கும் என்றிருந்தால் லொஸ்லியா ஆர்மி சந்தோஷப்பட்டிருக்கும்). ‘கதைக்கப் பிடிக்காத ஆசாமி’யாக சாண்டியை பாவனையாக குறிப்பிட்டார். கலாய்த்துக் கொண்டே இருக்கிறாராம்.

‘நீ உண்மையானவர்’ என்கிற தேர்விற்கு சரவணணைக் குறிப்பிட்டார் அடுத்து வந்த கவின். “உன்னை நம்ப முடியாது” என்ற ஆப்ஷனுக்கு இவரும் மீராவைத் தேர்ந்தெடுத்தார். மாற்றிப் மாற்றி பேசுகிறாராம். என்றாலும் இதை வலிக்காத வகையில் கவின் கூறியது நன்று.

‘கண்ணியமான நபர்’ என்று சேரனைத் தேர்ந்தெடுத்தார் ரேஷ்மா. ‘அநாகரிகமான நபர்’ என்று ஆப்ஷனிற்கு ‘சாண்டி’யைக் குறிப்பிட்டார். எப்போது பார்த்தாலும் கக்கூஸ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாராம் ‘கக்கா’ கூட்டத்தின் தலைவனான சாண்டி.

“உன்னுடன் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை’ என்கிற ஆப்ஷனுக்கு அபிராமியைத் தேர்ந்தெடுத்தார் முகின். இந்தக் கூட்டணி என்று மாறுமோ என்று தெரியவில்லை. ‘அறுவையான நபர்’ என்பதற்கு மீராவைத் தேர்ந்தெடுத்தார்.

‘அடக்கமான நபர்’ என்கிற கேட்டகிரிக்கு லொஸ்லியாவைத் தேர்ந்தெடுத்தார் மதுமிதா. சாண்டி அதிகப் பிரசங்கியாம். (அப்பாடா! மீரா தப்பித்தார்).

IMAGE_ALT

‘உன்னைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடு’ என்கிற ஆப்ஷன் சாண்டிக்கு வந்தது. இதற்கு அவர் யாரைத் தேர்ந்தெடுத்திருந்திருப்பார் என்பது வெளிப்படை. மோகனை தேர்ந்தெடுத்தார். ஆனால் மோகனின் இன்னொரு கோபமான முகத்தை பார்த்தேயாக வேண்டும் என்று அடம்பிடித்தார். “நீ என்ன நினைத்தாலும் கவலையில்லை’ என்கிற ஆப்ஷனுக்கு, சாண்டி தேர்ந்தெடுத்தது ‘லொஸ்லியா”வை. (பழிக்குப்பழி, புளிக்குப் புளி).

பலருடைய பகைமையைச் சம்பாதித்திருக்கும் மீரா அடுத்து வந்தார். (“அமானுஷ்ய சக்தி கிளம்புது.. எல்லோரும் அலர்ட்டா இருங்க” – சாண்டி) எல்லோரும் ஆவலாக கவனித்தார்கள். ‘தன் தகுதிக்கு ஏற்ற போட்டியாளராக’ தர்ஷனை அவர் குறிப்பிட்டது நன்று. இருவருக்கும் இடையில் சமீபத்திய மனக்கசப்புகள் இருந்தாலும் இதை வெளிப்படையாக குறிப்பிட்டார். தர்ஷனே இதைக் கேட்டு சற்று ‘ஜெர்க்’ ஆனார். ‘போட்டியாளராகவே பார்க்கவில்லை’ என்று மீரா குறிப்பிட்டது சேரனை. (இன்னொரு, பழிக்குப்பழி).

தன்னைப் பற்றி பலர் எதிர்மறையாக குறிப்பிட்டதைப் பற்றி ‘பழிபோடும் உலகம் இங்கே.. பலிவாங்கும் உயிர்கள் எங்கே’ என்று இன்ஸ்டன்ட் கவிதையெல்லாம் சொல்லி அசர வைத்தார் மீரா. தான் ஒரு கடுமையான போட்டியாளராக இருக்கும் காரணத்தினாலேயே மற்றவர்கள் இவரை ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி வைத்து விடுகிறார்களாம். மற்றவர்களை விட இவர் ஓரடி உயர்ந்தவராம். (பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்க்கறாங்கன்னா.. யாரு பலசாலி?” என்று தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்த் கேட்டதுதான் நினைவிற்கு வருகிறது).

‘வீரன்’ என்கிற கேட்டகிரிக்கு தர்ஷனை தேர்ந்தெடுத்தார் சரவணன். சரியான தேர்வு. வனிதா என்கிற பூனைக்கு முதலில் மணியைக் கட்டியவர் தர்ஷன். ‘கோழை’ என்கிற தேர்விற்கு மோகனைத் தேர்ந்தெடுத்தார்.

**

சரவணுனுடைய குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார் பிக்பாஸ். பொதுவாக உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தாத சரவணன், இந்த விஷயத்தை சரியாக யூகித்து விட்டது ஆச்சரியம். தர்ஷன் ‘சர்ப்ரைஸ்’ செய்ய முயற்சித்தாலும் அது நடக்கவில்லை. புகைப்படத்தை பார்த்து விட்டு ‘சரி’ என்றார் சரவணன். “அவர் ரியாக்ஷன் அவ்வளவுதான் விடு” என்றார் மதுமிதா. பிக்பாஸ் வீட்டு மக்கள் அனைவரும் புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள். பிறகு மெளனமாக தனிமையில் ஃபோட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தார் சரவணன். அவரின் இன்னொரு முகம் இது.

எல்லோரும் விளையாட்டாக இணைந்து லொஸ்லியாவை ‘அண்ணா’ என்று அழைக்க வைத்தார்கள். இவ்வாறு அழைக்கப்பட்டவர் கவின். இதைக் கேட்டதும் முகம் சுருங்கினார் கவின். தான் விரும்புகிற பெண்ணால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுவது ஓர் ஆணிற்கு ஆழமான மனக்காயத்தை ஏற்படுத்தும் விஷயம். அனுபவித்தவர்களுக்கு இது தெரியும். ஆனால் மலர் விட்டு மலர் தாவும் வண்டாக கவின் நடந்து கொள்வதால் அவர் மீது பெரிதும் பரிதாபம் உண்டாகவில்லை.

அதே சமயத்தில், ஒருவர் தன் மீது தெரிவிக்கும் விருப்பத்தை ‘அண்ணா’ என்று சொல்வதின் மூலம் ஒரு பெண் நாகரிகமாக மறுக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆண்கள் பொதுவாக இதை விரும்புவதில்லை. குறைந்தபட்சம் ‘பிரெண்டாக இருக்கலாமே’ என்றுதான் பசப்புவார்கள். அது எப்போதாவது காதலாக மாறும் என்று கொக்கு போல் காத்திருப்பார்கள். இவ்வாறான உறவுக் கேடயங்கள் இல்லாமல் ஓர் ஆணும் பெண்ணும் உண்மையிலேயே நண்பர்களாக இருப்பது மிகக் குறைந்த சதவீதம்தான்.

‘ஓபரா’ இசையை மோகன் விளையாட்டாக பாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் இன்றைய நாள் முடிவுற்றது. மோகன் பாடியதை கேட்கப் பொறுக்காமலோ, என்னமோ வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE