அதிக கமெராக்களை கொண்ட ஐஃபோன் - 11 என்ற புதிய திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும், அப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் அப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் அப்பிள் நிறுவனம் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி அப்பிள் சீரிஸ் 5 என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரமும், 10.2 இன்ச் அளவுகொண்ட ஐபாடும், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசனுக்கு போட்டியாக வெறும் மாதம் 4.99 டொலருக்கு ஆப்பிள் டிவி பிளஸ் திட்டத்தையும் அப்பிள் நிறுவன அதிகாரிகள் அறிமுகப்படுத்தினார்கள்.
ஐஃபோன் 11 சிறப்பம்சங்கள் என்ன?
முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐஃபோன் 11 மொடல்களில் அதிக கமராக்கள் இருக்கின்றன. மேலும், அதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு குறைவான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மக்ஸ் என மூன்று ரகங்கள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 6.1இன்ச் லிக்விட் ரெட்டினா திரையை கொண்டுள்ள அப்பிளின் புதிய ஐஃபோன் 11ல் ஏ13 பையோனிக் சிப் இடம்பெற்றுள்ளது.
தற்போது சந்தையில் விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களிலே அதிவேக மைய செயலகமும், அதிவேக கிராபிக்ஸ் செயலகமும் கொண்டது ஐஃபோன் 11 என அப்பிள் கூறுகிறது.
எக்ஸ் ஆர் மொடல் ஐஃபோனுடன் ஒப்பிடும்போது, ஐஃபோன் 11னின் கமராவில் மிகப்பெரிய மாற்றங்களை அப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, ஐஃபோன் 11ல் இரண்டு கமராக்கள் உள்ளன. ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மக்ஸ் மூன்று 12MP கமராக்களை கொண்டுள்ளன.
ஒன்றில், வைட் ஆங்கிள் லென்ஸும், மற்றொன்றில் 120 டிகிரியை முழுமையாக திரைக்குள் கொண்டுவரும் வகையில் மிக அதிக வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. மூன்றாவது டெலிபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது.
ஐஃபோன் 11ல் இதன் நைட் மோட்தான் சிறப்பம்சமே. இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் தொழில்நுட்பம் ஐஃபோன் 11ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கமராக்கள் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்கின்றன.
முக்கியமாக, ஐஃபோன்11ல் இருக்கும் செல்ஃபி கமராவும் 12MP திறன் படைத்தது. செல்ஃபி கமேராவும் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும். மேலும், ஸ்லோ மோஷன் காணொளிகளை பதிவு செய்யவும் முடியும்.
ஐஃபோன் எக்ஸ் ஆர் மாடலுடன் ஒப்பிடுகையில், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் ஐஃபோன் எக்ஸ் ஆரைவிட ஐஃபோன் 11 ஒருமணி நேரம் கூடுதலாக இயங்கும் திறன் படைத்தது என்கிறது அப்பிள் நிறுவனம்.
அப்பிள் டிவி பிளஸ் மற்றும் அப்பிள் ஆர்கேட்
அப்பிள் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கென புதிய வீடியோ கேம்களும் , அமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்று அப்பிள் டிவி பிளஸ் என்ற பிரத்யேக சேவையையும் அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒரு குடும்பத்துக்கு மாதம் 4.99 டொலர் என்ற கட்டணத்தில் இந்த சேவை கிடைக்கும்.
புதிய அப்பிள் தயாரிப்பு ஒன்றை வாங்கும்போது, அப்பிள் டிவி பிளஸ் ஓராண்டு சேவையை இலவசமாக பெறலாம். நவம்பர் முதலாம் திகதி முதல் 100 நாடுகளில் அப்பிள் டிவி பிளஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
10.2 இன்ச் ஐபாட்
அப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் திறன்பேசிகளை தவிர்த்து புதிய ஐபாட் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டது.
ஏற்கனவே, கடந்தமுறை 6ஆம் தலைமுறை ஐபாட் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10.2 இன்ச் திரை கொண்ட 7ஆம் தலைமுறை ஐபாட்டை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மொடல்களை காட்டிலும், இதில் ஒளிர்வுதன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆச்சரியப்படுத்தும் அப்பிள் கடிகாரம்
அப்பிள் ரசிகர்கள் மேலும் ஒரு ஆச்சரியமாக அமைந்தது நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நவீன கை கடிகாரம் சீரிஸ் 5. இதன் எப்போதும் ஒளிரும் திரை மற்றும் ஆற்றலை சேமிக்கும் திறன் இந்த கடிகாரத்தின் சிறப்பம்சங்கள்.
மேலும், அப்பிள் நிறுவனம் தனது கை கடிகாரத்தில் புதிதாக உடல் ஆரோக்கியம் சார்ந்த மூன்று அம்சங்களை சேர்த்துள்ளது. அதாவது, செவிப்புலன் சார்ந்த ஆரோக்கியத்தை கணக்கிடுதல், பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் ஆகியவை ஆகும்.
Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags: