Thursday 25th of April 2024 11:05:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை புரட்டியெடுத்து தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!

சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை புரட்டியெடுத்து தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!


இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டியெடுத்த நியூசிலாந்து 22 வருடங்களிற்கு பின்னர் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்து.

முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 2வது டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 101 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பேர்ன்ஸ் மற்றும் லோரன்ஸ் ஆகியோர் தலா 81 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், ஹென்றி 3 விக்கெட்டுக்களையும், பட்டேல் 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் தனது முதலாசவது இனிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 119.1 ஓவர்களில் 388 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக வில் யங் 82 ஓட்டங்களையும், அறிமுக இனிங்சிலேயே இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த டெவோன் கொன்வே மற்றும் ரோஸ் ரெய்லர் ஆகிய இருவரும் தலா 80 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் ஸ்ருவேட் பிரோட் 4 விக்கெட்டையும், மார்க் வூட் மற்றும் ஒல்லி ஸ்ரோன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 85 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இனிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

போட்டியின் 3வது நாளாகிய நேற்று 9 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த இங்கிலாந்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் அதே ஓட்ட எண்ணிக்கையில் இறுதி விக்கெட்டையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட் 29, ஒல்லி பொப் 23 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிந்தனர். 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி மற்றும் நீல் வோக்னர் தலா 3 விக்கெட்டும், போல்ட் மற்றும் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

இதன் மூலம் 38 ஓட்டங்களை மட்டும் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 41 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1:0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து மண்ணில் 1999 ஆம் ஆண்டிற்கு பின்னர் தொடர் ஒன்றை கைப்பற்ற முடியாத வரலாற்றை இந்த சாதனை வெற்றி மூலம் நியூசிலாந்து புதுப்பித்துள்ளது.

22 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து அணி.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை மேட் ஹென்ரியும் தொடர் நாயகன் விருதை டெவோன் கொன்வேயும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE