Friday 19th of April 2024 06:06:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐரோப்பிய யூனியன் தீர்மானமும் இலங்கை தமிழர்களுக்கான வாய்ப்புக்களும்! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

ஐரோப்பிய யூனியன் தீர்மானமும் இலங்கை தமிழர்களுக்கான வாய்ப்புக்களும்! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


அமெரிக்க காங்கிரஸ் தீர்மான முன்மொழிவை அடுத்து ஐரோப்பிய யூனியன் பலமான ஒரு தீர்மானத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைத்துள்ளது. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய தீர்மானத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 628 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 40 உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். எனவே இது ஒரு பெரும் ஆதரவுத் தளத்தை தந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இலங்கை விடயம் அதிக தெளிவான உரையாடலை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களது தீவிரமான அரசியல் நடவடிக்கைகளே இத்தகைய அணுகுமுறைக்கு ஒரு காரணமாக தெரிகிறது. இக்கட்டுரையும் ஐரோப்பிய யூனியனின் முடிபையும் புலம்பெயர் அமைப்புக்களின் நகர்வையும் மையப்படுத்தியதாக அமையவுள்ளது.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்பூகோள நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதிப்பொருட்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை முறைமையாகும். அதாவது வரி முழுமையாக அறவிடப்படாமை அல்லது பூச்சிய வரி முறைமை மூலமாக ஐரோப்பிய சந்தைக்குள் பொருட்களை அனுமதிப்பதாகும். இதன்மூலம் போட்டி குறைவதுடன் அதிகமான அந்நிய செலவாணியும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை தென்பூகோள நாடுகள் அடைகின்றன. 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இவ்வரிச்சலுகை தொடர்பான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இவ்வரிச்சலுகையை அனுபவித்து வருகிறது. ஆனால் அது முழுமையான வரிவிலக்காக அமையவில்லை. 2005ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட GSP10 (Generalized Scheme of Performance 10) முழுமையான வரிச்சலுகையை அனுபவித்து வருகிறது. இத்தகைய நடைமுறை 2005ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி நிறுத்தப்பட்ட சலுகை 2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மனித உரிமையை பேணுதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்குதல் என்ற உறுதிமொழியோடு விலக்கழிக்கப்பட்டது. இதற்கான தடையை மீள மேற்கொள்ளப்போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்பின் நோக்கங்களை தேடுதல் மிகமுக்கியமான விடயமாகும்.

முதலாவது, அமெரிக்க காங்கிரஸினுடைய முன்மொழிவானது ஆரம்ப நிலையில் இருப்பது போல் அல்ல ஐரோப்பிய யூனியனது தீர்மானம். சற்று தீவிர தன்மையுடன் மிகப்பெரும்பான்மை ஆதரவுடன் ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றம் இலங்கை தமிழர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரதான விடயமாக எடுத்துகொண்டுள்ளது. இது இலங்கைக்கு எதிரானது என்பதை கடந்து நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை பற்றியதாகவே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதாவது தற்போதைய இலங்கை அரசாங்கம் சீனச் சார்பு வெளியுறவுக்கொள்கையை முதன்மைப்படுத்தி இருப்பது பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு காரணியாக ஐரோப்பிய யூனியன் முன்னெடுத்திருப்பது வழிவகுத்துள்ளது என்பது புலனாகின்றது. எனவே ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுடன் இணைந்து இலங்கையின் வெளிவிவகாரத்தில் மாற்றத்தை செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது, இத்தகைய அழுத்தம் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக தவிர்க்க உதவுமா? என்பது பிரதான கேள்வியாகும். எனவே தான் ஐரோப்பிய யூனியனின் நகர்வு ஐரோப்பிய அமெரிக்க நலன்கனை முன்னிறுத்தினாலும் இலங்கை தமிழர் தொடர்பான இலங்கை அரசின் போக்கில் காணப்படும் நெருக்கடிகளை கையாளுவதற்கான உத்தியாக தெரிகின்றது. ஒருவகையில் இலங்கை தமிழர் தொடர்பான பிரச்சினை மிகப்பிரதான அம்சமாக விளங்குவது பயங்கரவாத தடைச்சட்டம் ஆகும். இதனை அகற்றுவதன் மூலம் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த முடியாத போதிலும் தற்காலிக நெருக்கடியிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்களை உருவாக்க முடியும். அதனூடாக ஐரோப்பிய-அமெரிக்க தலையீட்டை ஏற்படுத்த முயலுகிறதைக் காணமுடிகிறது.

மூன்றாவது, இத்தகைய ஜி.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்படுவது இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற வரலாறு கடந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் நிகழ்ந்த பாதிப்பாகவே தெரிகிறது. ஆனால் அத்தகைய பாதிப்பை தற்போதுள்ள அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என்பது கேள்விக்குரிய விடயமே. அல்லது கடந்த நல்லாட்சி அரசாங்கம் போன்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுடன் ஒத்துழைக்கும் அரசாங்கமொன்று மீண்டும் ஆட்சிக்கு வருமாயின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படும் என்ற அனுபவத்தை கடந்த காலம் தந்துள்ளது.. காரணம், ஐரோப்பிய அமெரிக்க அணுகுமுறைகள் அவ்வாறானதாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஏற்படுத்தியுள்ளது.

நான்கு, ஒட்டுமொத்தமாக அவதானித்தால் கொழும்பு துறைமுகநகர சட்டமூலத்தின் பின்னர் இலங்கையின் போக்கு முழுமையாக சீனா சார்புடையதாக இயங்க ஆரம்பித்துள்ளது என்பதுவே அமெரிக்க ஐரோப்பாவினுடைய இலங்கையுடனான முரண்பாட்டுக்கான காரணமாகும். இலங்கை அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்தமையானது அதன் மிலேனிய உடன்பாட்டை நிராகரித்திலிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத்துக்குள் ஐரோப்பிய அமெரிக்க முதலீட்டை அங்கீகரிப்பதென்பதற்காக கொழும்பு அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் அரசியல் இராணுவ ரீதியாக உடன்படுகிறது என்பதல்ல. மாறாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிஜய நாடுகளை இயங்க வைக்கிறது என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். அனைத்துமே ஏகாதிபத்திய அரசுகளே அன்றி இலங்கைக்கானதோ தமிழருக்கானதோ நலனுக்கான அரசுகள் அல்ல. உலகளாவியரீதியில் அமெரிக்க - ஐரோப்பா கூட்டு எவ்வாறு அந்நாடுகளை கையாளுதோ அதனையே இலங்கையிலும் அந்நாடுகள் பின்பற்ற விளைகிறன.

ஆனால், சர்வதேச அரசியலில் எல்லா நாடுகளின் நகர்வுகள் அதிகார நலனை இலக்கு வைத்ததாகவே அமையும். அவ்வாறே அமெரிக்க - ஐரோப்பிய யூனியனது செயற்பாடுகளும் அமைகிறது. ஆயினும் அவ்வகை நகர்வுக்குள்ளேயே இலங்கை தமிழரது இனப்பிரச்சினைக்கான தீர்வும் அகப்பட்டுள்ளது. அதிலிருந்து கொண்டு மட்டுமே தீர்வை எட்ட முடியும். இந்தநிலை கடந்த பல தசாப்த காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதிலும் தற்போதைய அரசாங்கங்கள் போன்று ஆட்சியில் அமருகின்ற மேற்குலகுக்கு எதிரான சீனா சார்பு அரசாங்கங்களினால் அத்தகைய தீர்வை எட்டலாம் என்ற சூழலை கடந்த கால அனுபவம் தந்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கையினுடைய எல்லைக்குள்ளும் பிராந்திய அரசான இந்தியாவின் எல்லக்குள்ளும் இலங்கை தமிழர் நீடித்த இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியும் என்ற நம்பிக்கை முற்றாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இலங்கை - சீனா உறவு மேற்கு நலன்களை பாதிக்கும் வகையில் அமைவதால் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை தனது நலனுக்காக மேற்குலகம் முன்னிறுத்த முயலுகிறது. அதனை புலம்பெயர்ந்த தமிழரும் முதன்மைப் படுத்தி செயற்பட வேண்டிய தருணம் தவிர்க்க முடியாததாக எழுந்துள்ளது.

உள்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளும் அதன் கட்சிகளும் வெறுமனவே தேர்தல் கூட்டுக்காக உருவாக்கப்பட்ட குழுக்களாகவே காணப்படுகிறன. வடக்கு - கிழக்கு மக்களை தமக்கு வாக்களிக்க வைக்கும் மனோநிலையுடன் செயற்படுபவர்களாகவே அவர்களது அணுகுமுறை காணப்படுகிறன. அவர்கள் முன்வைத்துள்ள கொள்கைகளும், கோட்பாடுகளும் சுலோகங்களும், தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே இலக்காகக் கொண்டவை. தமது தனிப்பட்ட நலனை முன்னிறுத்துகின்ற விதத்திலே பேச்சுக்களையும், பிரச்சாரங்களையும், நிவாரணங்களையும் தமக்கிடையிலான பிரிவினைகளையும் கையாண்டு வருகின்றனர். தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனை கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது அதனை தோற்கடிப்பதற்காக உழைப்பது அதன்மூலம் தமது சுயதேவைகளை நிரப்பீடு செய்கின்றவர்களாகவே விளங்குகின்றனர். இதில் தேசியம் பேசியவர்களும், மாற்றென தம்மை அடையாளப்படுத்தியவர்களும், உதிரிகளாக செயற்படுபவர்களும் ஒரேமாதிரியான இயல்பு கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள். அத்தகைய இயல்பூக்கம் கொண்ட அரசியல் குழுக்களோடு தமிழ் மக்கள் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே பயணிக்க முடியுமே அன்றி இலட்சிய நோக்கதர்திற்காக பயணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். அதனைக்கடந்து தீர்மானங்களையோ, வாய்ப்புக்களையோ, அதற்காக உழைக்கும் அரசியல் தலைமைகளாகவோ கொண்டிருக்கிறார்கள் என அவர்களை தமிழ் மக்கள் கருத முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நல்லாட்சி அரசாங்க காலத்தில் கிடைத்த வாய்ப்பை போல் மீண்டும் ஒரு சூழலை தமது தேர்தல் நலனுக்காக இத்தேர்தல் குழுக்கள் தோற்கடிப்பதற்கு தயாராகி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான அழைப்பைக்கூட தமிழ் மக்களுக்கோ உலகுக்கோ வெளிப்படுத்தாதவர்களை தமிழர்களின் பிரதிநிதியென எவ்வாறு மதிப்பீடு செய்வதென்பது பிரதான கேள்வியாகும்.

எனவே ஜி.எஸ்.பி. வரிச்லுகை தொடர்பான ஐரோப்பிய யூனியனின் ஐரோப்பிய பாராளுமன்ற நகர்வுகளை புலமைசார் உரையாடலை முதன்மைப்படுத்தி அதனை கையாளும் அரசியல் தரப்புக்கள் செயற்பட வேண்டும். இதில் நிச்சயமாக புலம்பெயர்ந்த தரப்புக்களே கரிசனை கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. உலகளாவிய அனுபவமும் அதுவாகவே தெரிகிறது. யூதர்களும் தீபெத்தியரும் தமிழருக்கு முன்னோடியாக உள்ளனர். அத்தகைய அமைப்புக்கள் ஜனநாயகபூர்வமான அணுகுமுறைகளையும் அதற்கான உத்திகளையும் ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டதிட்டத்துக்கு உட்பட்ட விதத்திலும் இயங்குவதற்கான முனைவுகளை கொள்ளுதல் அவசியம். புலத்தில் இருக்கும் தேர்தல் குழுக்களை அரவணைத்து செயற்படுவதென்பது தேர்தல் மாற்றங்களுக்கு மட்டுமாகவே அமையுமென்பதை புலம்பெயர் தரப்புக்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே அமெரிக்க ஐரோப்பிய யூனியனின் இலங்கை மீதான அதிகார நலன் காணப்பட்டாலும் அதனூடாக இலங்கை தமிழர்களது பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது. அதனை நோக்கிய அரசியல் அவசியமானது.

- அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் -


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE