Friday 29th of March 2024 09:50:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும்! - நா.யோகேந்திரநாதன்!

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின்போது தீ்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அனுசரணை வழங்கியபோதும் அண்மையில் அதிலிருந்து விலகிக்கொண்டது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. தற்சமயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பிரச்சினையை முன் வைத்தே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தம் காரணமாக திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2005ம் ஆண்டு முதன்முதலாக சலுகை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணமாக 2009 இறுதிப் பகுதியில் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுப் பின் 2010ல் அத்தடை நிரந்தரமாக்கப்பட்டது. இத்தடை காரணமாக இலங்கை வருடாந்தம் 782 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலவாணி வருமானத்தை இழந்தது.

எனினும் நல்லிணக்க அரசாங்க ஆட்சிக் காலத்தில் 2017ல் முதலில் மீள் ஏற்றுமதிக்கான சலுகை வழங்கப்பட்டுப் பின் முழுமையாக இலங்கையின் சகல ஏற்றுமதிப் பொருட்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைால் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கப்பட்டது.

மீண்டும் தற்சமயம் வரிச் சலுகையை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இச்சலுகை நீக்கத்துக்கு ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப்போவதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமையே காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நாம் தனி ஒரு விடயமாகப் பார்க்கமுடியாது. கனடாவின் ஒன்றியோ மாநிலத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமெரிக்க செனட்டர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக நிறைவேற்றி அமெரிக்க வெளிவிவகார அமைச்சுக்கு அங்கீகாரத்துக்கென அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் என்பனவற்றின் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டியுள்ளது.

அதாவது இலங்கைக்கு எதிராக மேற்குலக வல்லரசுகள் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் மீண்டும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளதாகவே தோன்றுகிறது.

அதேவேளையில் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகெலிய ரம்புக்வெல அவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் முன்பும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்தியதாகவும் அதனால் இலங்கையின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்படவில்லையெனவும் திமிருடன் பதிலளித்தது மட்டுமின்றி வெளிநாடுகளின் விருப்பத்துக்கமைய இலங்கையின் அரசியல் சட்டங்களை மாற்ற முடியாதெனவும் இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 45 வீதம் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றன என்ற அடிப்படையில் இந்த வரிச் சலுகை நிறுத்தம் இலங்கையைப் பாதிக்காது எனச் சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இலங்கை சர்வதேச நியமங்களை மீறும் போதெல்லாம் எழும் கண்டனங்களின் முன்பு இலங்கையின் இறைமை, தேசியப் பாதுகாப்பு போன்ற விடயங்களையே கேடயங்களாக முன் வைப்பது அப்படியொன்றும் புதிய விடயமல்ல.

ஒரு நாட்டின் சில சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லாத போதிலும் அவற்றை மாற்றுவதா இல்லையா எனத் தீர்மானிப்பது அந்த நாட்டின் இறைமை என்றால் இன்னொரு நாடு அந்த நாட்டுக்குச் சலுகைகளை வழங்குவதா அல்லது விடுவதா என்பதும் அந்த நாடுகளின் உரிமை என்பதை மறுத்துவிடமுடியாது.

ஆக இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தின் பிரதானமான உற்பத்தி தைக்கப்பட்ட ஆடைகளேயாகும். இவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இறக்குமதி செய்கின்றன. எனவே ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தம் இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் இந்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனங்களாகும். எனவே இந்த வரிச்சலுகை நிறுத்தம் இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதிப்பது போன்றே அந்தப் பல்தேசிய நிறுவனங்களையும் பாதிக்கும். எனவே வரிச்சலுகை நீக்கம் உடனடியாக இடம்பெறாதென இலங்கையின் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கக் கூடும்.

இந்தப் பல்தேசிய நிறுவனங்களுக்கு ஆடைத் தொழிற்சாலைகள் இலங்கையில் மட்டுமல்ல பங்களாதேஷ், மலேசியா, இந்தோனேஷியா போன்ற பல நாடுகளிலும் உண்டு.

வரிச்சலுகை மூலம் இலங்கைத் தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் லாபம் குறைவடையும்போது அவர்கள் ஏனைய நாடுகளில் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் ஈடு செய்வார்கள். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இலங்கையில் மூடி விட்டு அவற்றை வேறு நாடுகளுக்கும் கொண்டும் செல்ல முடியும். ஏற்கனவே 2017ம் ஆண்டு ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்பட்டபோது பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பங்களாதேஷுக்குக் கொண்டு செல்லப்பட்டமை நினைகூரத்தக்கது.

இப்படியான நிலையில் இலங்கை அரசு இரு விதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். ஒன்று ஏற்றுமதிக் குறைவினால் ஏற்படும் அந்நியச் செலவாணி வருவாய் இழப்பு, வேலையற்றோர் தொகை அதிகரிப்பு.

எனவே வரிச்சலுகை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவது இலங்கை ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத தேவையாக எழுந்துள்ளது.

அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்த அடுத்து சீன சுகாதார அமைச்சு இலங்கையில் கடலுணவு வகைகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் முடிவுகளில் தாக்கம் செலுத்தாது என்று சொல்லிவிடமுடியாது.

இப்படியான ஒரு நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபகஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் திடீரெனப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு சர்வதேச நெருக்கடி எழுந்துள்ள நிலையில் த,தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டமைக்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்று சொல்லிவிடமுடியாது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகப் பேசவே அழைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். துறைமுகநகரப் பிரச்சினை, எரிபொருள் விலை உயர்வு, கொவிட் நோய்ப் பரவல் எனப் பல சிக்கல்களில் அரசாங்கம் மாட்டுப்பட்டுள்ள நிலையில் அரசிலமைப்பைப் பற்றிப் பேச த.தே.கூட்டமைப்பை அவசரமாக அழைத்திருக்குமென்பதை நம்ப முடியுமா? அப்படியானால் த.தே.கூட்டமைப்பினர் ஏன் மக்களிடம் உண்மையான காரணத்தை மறைக்கின்றனர்.

அரசாங்கம் கண்துடைப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாதகமான விடயங்கள் நீக்கப்படாமலே மாற்றம் கொண்டு வர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியா இது என்ற சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாது.

வேறு சில உள்நோக்கங்களின் அடிப்படையில் கிடைக்கும் சில சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டுப் பின்பு சிங்களத் தலைமைகள் ஏமாற்றி விட்டனர் என ஒப்பாரி வைப்பது தமிழ் தலைமைகளுக்குப் புதிய விடயமல்ல.

இலங்கையின் சீன சார்புப் போக்குக் காரணமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நிரலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் எமக்கு ஒரு சாதகமான சூழலைத் தோற்றுவித்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகள் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் இது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

22.06.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE