Friday 29th of March 2024 04:50:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களும் இலக்கு வைக்கப்படுகின்றனவா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களும் இலக்கு வைக்கப்படுகின்றனவா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


2009 களுக்கு பின்பான இலங்கைத் தமிழர் அரசியலில் பிரிக்க முடியாத ஓரங்கமாக புலம்பெயர்ந்த தமிழர் மாறியுள்ளனர். 2009 களுக்கு முன்பும் அவர்களது பங்களிப்பு பொருளாதார இராஜதந்திர ரீதியில் முக்கியம் பெற்றதாக அமைந்த போதும் முள்ளிவாய்க்கால் போருக்கு பின்பே அதிகம் தனித்துவமாக அமைந்திருந்தது.

தற்போதைய அரசியலில் புலத்தை நகர்த்துவதுடன் புலம் பெயர்ந்த தளத்திலும் இராஜதந்திர மற்றும் அரசியல் நகர்வுகளை மேற்கொள்பவர்களாக விளங்குகின்றனர்.ஆனால் அவ்வகை அமைப்புகளிலும் இலங்கை-இந்திய மற்றும் ஐரோப்பிய அரசுகளின் நலன்களுக்காக இயங்கும் அமைப்புக்களும் தமது பிடிக்குள் இலங்கை தமிழர் அரசியலை இயக்க வேண்டும் (Remote Control Politics) எனும் அவாவுடன் இயங்கும் சக்திகளும் இல்லாமலில்லை. இக்கட்டுரையும் புலம்பெயர் தமிழர்களை நோக்கிய தோற்கடிப்புவாதம் ஆரம்பித்துள்ளது என்பதை அடையாளம் காட்ட முயலுகிறது.

முதலில் கடந்த 15 ஆம் திகதி (யூன் 2021) இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் சாரம்சமாக நாடுகடந்த அரசாங்கம் பற்றியும் அதன் தோற்றம் கொள்கை மற்றும் அதன் தற்போதைய போக்குப் பற்றியும் தெளிவான கட்டுரையொன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. அதில் அத்தகைய நாடுகடந்த அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக கனடாவைச் சேர்ந்த குழுவொன்று இலங்கை தேசியத்தை ஏற்றுக் கொண்டு கூட்டு ஆட்சிமுறைக்குள் செயல்பட உடன்பட்டிருப்பதாக அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமன்றி அத்தகைய அரசாங்கத்திற்குள் பலபிரிவுகள் உள்ளவென்றும் வெவ்வேறு சித்தாந்தங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தகைய பிரிவுகள் சுயாட்சி அலகொன்றை ஏற்றுக் கொள்கின்றன எனவும் அச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது. இந்திய அளவில் வெளியாகியுள்ள திரைப்படங்களும் அவை சொல்லும் செய்திகளும் இலங்கைத் தமிழர்களை பாதிப்பதுடன் புலம்பெயர்ந்த தளத்தில் இயங்கும் அமைப்புகள் மீதும் தாக்குதல்களை தொடுக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாடுகடந்த அரசாங்கத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள விதம் அவ்வமைப்பினை சிதைப்பதற்கான உபாயமாகவே தெரிகிறது.

இதே போன்றே 13.06 2021 அன்று பிரித்தானியாவில் இரகசியமான ஒரு சந்திப்பு நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கூர்மை இணையத் தளம் விரிவான கட்டுரையை தந்துள்ளது. இலங்கையின் ஆளும் தரப்பின் சகோரர்களில் ஒருவருடனான உரையாடல் ஒன்றினை அமெரிக்கா பிரித்தானியா மற்றும் இந்திய தரப்புக்கள் புலம்பெயர் அமைப்புக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் மையப்படுத்தி அந்த சந்தி-ப்பினை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதன் ஊடாக ஒர் உடன்பாட்டை எட்டத் திட்டமிட்டதாகவும் அவ்விணையத் தளம் வெளிப்படுத்தியுள்ளது. இதே காலத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கையின் ஜனாதிபதி பேச அழைத்திருந்தமையும் பின்பு அது கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளது. .இதற்கான ஆதாரத்தை கூர்மை கணணியின் பதிவுகளைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றது.

இதனோடு இணைத்ந்த விதத்தில் நோர்வே தரப்புடனும் ஏனைய வெளியுறவு மட்டத்திலும் மீண்டும் ஒரு நல்லிணக்க செய்முறையை ஆரம்பிக்க இருப்பதாக ஐரோப்பிய புலம்பெயர் அமைப்புக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏன் தற்போது மீண்டும் ஒரு நல்லிணக்கம் தேவைப்படுகிறது.

முதலாவது இலங்கைத் தமிழரது அரசியல் புலத்தில் உள்ள அரசியல் சக்திகள் எவரிடமும் கிடையாது என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். புலத்திலுள்ள அரசியல் சக்திகளை இலகுவில் கையாளவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்பதுடன் தேர்தல் குழுக்களாகவே அவர்கள் செயல்படுவார்களே அன்றி வேறு எந்தவிதத்திலும் தமக்கு ஆபத்தானவர்களாக அவர்கள் இல்லை என்பதில் நன்கு தெளிவாக உள்ளனர். பேச்சில் மட்டுமே வல்லவர்களே அன்றி செயலில் பூச்சியமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து அவர்களுக்கில்லை.

இரண்டாவது இந்தியா இலங்கைத் தமிழர்களை ஒப்பீட்டடிப்படையில் ஆதரிக்காது என்பதில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். தென் இலங்கை ஆட்சியா தமிழர்களா என்ற நிலையில் ஆட்சியே தமக்கு வேண்டும் என்ற முடிபினை எடுப்பார்கள் என்பதில் தென் இலங்கைக்கு தெளிவுள்ளது. அது மட்டுமன்றி இந்தியா தற்போது ஒரு புவிசார் சக்தியே இல்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை எடுத்துள்ளது. தென்னாசியா முழுமையாக சீனாவின் புவிசார் நலன்களுக்குள் அகப்பட்டு;ளளது. 1962 முதல் அருணாசலப் பிரதேசத்தில் இலங்கைப் பரப்பளவுள்ள பிரதேசத்தை சீனாவிடமிருந்து மீட்க முடியாத இந்தியா இலங்கையிலும் தென்னாசியாவிலும் இருந்து சீனாவை எப்படி மிரட்டப் போகிறது என்பதில் இலங்கைப் புலமையாளர்களுக்கு தெளிவுள்ளது. தற்போது சீனாவே தென்னாசியாவின் புவிசார் சக்தி என்பதை தென் இலங்கை நன்கு உணர்ந்துள்ளது. இலங்கைத் தமிழரைப் பாதுகாத்துக் கொண்டு தனது நலனையும் இந்தியா அடைய முயலாது என்பதில் தென் இலங்கைக்கு மாற்றுக் கருத்துக்கிடையாது. தனது நலனுக்காக ஏதாவது செய்யுமே அன்றி இலங்கைத் தமிழருக்காக எதனையும் மேற்கொள்ள முயலாது. அதனையும் தனது பல்தேசியக் கம்பனிகளது நலனுக்கானதாகவே அமையுமே அன்றி இந்திய தேசியத்திற்கானதாக அமையுமா என்பதும் சந்தேகமானதே.

மூன்றாவது ஜெனீவா ஐரோபட்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கத் தீர்மான முயற்சிகளுக்கு பின்னால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலமாக இருப்பதாக இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய மேற்கு-புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நகர்வு ஏதோ ஒரு அடிப்படையில் இலங்கையின் இருப்புக்கு தொடர் ஆபத்தாக அமைவதுடன் நிரந்தரமான ஆட்சியதிகாரத்தை குடும்பம் தக்கவைக்க முடியாத நிலையொன்று நிலவுகிறது. நீட்சியான ஆட்சியை கட்டமைக்க விரும்பும் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கான அடித்தளத்தை தகர்ப்பதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரதான காரணம் எனக்கருதுகின்றன. அதனால் அவற்றை நல்லிணக்க மேசைக்கு அழைத்து சிதைத்துவிட முனைகிறது. ஆரம்பத்தில் பல புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்ததுடன் அவற்றுடன் தொடர்புடைய தனிநபர்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. தற்போது நேரடியாக நல்லிணக்கத்திற்கு அழைத்து அவற்றை உடைத்துவிட விரும்புகிறது.

நான்காவது புவிசார் அரசியல் ரீதியில் சீனாவின் நட்பு இலங்கைக்கு அவசியமானது என்பதில் தெளிவாக உள்ள இலங்கைத் தீவின் புலமையாளரும் அரசியல் தலைமையும் ஆட்சியாளரும் மேற்கை எதிர்கொள்ள பல முனைப்புகளை மேற்கொள்கின்றனர். உள்நாட்டில் மேற்கு எதிர்ப்பு வாதமே ஆட்சியதிகாரத்தை பாதுகாக்கும் எனக்கருதும் தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச மட்டத்தில் மேற்குடன் கைகோர்க்க முடியுமெனக்கருதுகின்றனர். தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தோ-பசுபிக் உபாயத்தை இலங்கைக்கு வெளியே ஏற்றுக் கொள்ளவும் இலங்கைக்குள் எதிர்க்கவும் விரும்புகின்ற இரட்டை அணுகுமுறையை கொண்டுள்ளனர். இந்தியாவை கையாளவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் சீனாவை முன்னிறுத்திக் கொண்டு ஜெனீவாவையும் மேற்கையும் புலம்பெயர் அமைப்புக்களையும் கையாள இலங்கை ஆட்சியளர்கள் முனைகின்றனர். மேற்கும் இந்தியாவும் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தால் சீனாவுடன் இலங்கை முழுமையாக ஒன்றிணைந்துவிடும் என்ற அரசியலை மேற்கொண்ட நிலை மாறிவிட்டதனால் களத்தில் இறங்கி மேற்கை கையாள வேண்டிய நிலைக்குள் தள்ளப்ட்டுள்ளனர். மேற்கு தனது நலனை இலங்கைக்குள்ளும் இலங்கை மேற்கின் நலனை இலங்கைக்கு வெளியேயும் நடைமுறைப்படுத்த முயலும் ஒர் இழுபறி நிலவுகிறது.

எனவே தற்போதைய இலங்கை ஆட்சியாளரின் பிரதான இலக்குபுலம்பெயர் அமைப்புக்களே. அவற்றை வளைத்துப் போட்டுவிட்டால் இலகுவில் மேற்குலக அரசியலை கையாண்டுவிடலாம். அதற்கான முனைப்புக்களையே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேறிவருகிறது. புலத்திலும் புலம்பெயர் தளத்திலும் தமிழர் அமைப்புக்கள் உதிரிகளாக இருப்பதால் ஆபத்தெனக் கருதிய நிலை கடந்து தற்போதைய சூழலில் பாதுகாப்பானதென கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.இது இந்தியாவுக்கும் மேற்குக்கும் நெருக்கடியானதாகவே உள்ளது. இதில் மேற்கைவிட இந்தியாவே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் ஒர் அரசியல் கட்சி தமிழக அரசியலை விட்டு இலங்கைத் தமிழர் அரசியலை நிகச்சி நிரலாகக் கொண்டு இயங்குகிறது. அது தமிழக ஆட்சியையும் இந்திய அளவிலான ஆட்சியையும் இலங்கைத் தமிழரை முன்னிறுத்தியே தாக்குதல் நிகழ்த்துகிறது. ஏறக்குறைய அத்தகைய தமிழக கட்சி கூறுவதுதான் இலங்கைத் தமிழரது கடந்த கால அரசியல் சமூகம் பண்பாடு என்றாகும் நிலை வளர்ந்து கொண்டு செல்வதுடன் புலம்பெயர் தமிழர்களது நிதியிலும் அங்கத்துவத்திலும் தமிழருக்கான ஆட்சியை வழங்கப் போவதாக திரிபுவாதங்களை மேற்கொள்கிறது. இத்தகைய செய்முறை இலங்கைத் தமிழர்களை தமிழகத்தின் எதிரிகளாக மாற்ற வழியமைக்கும். கட்சிகளைக் கடந்த உறவொன்று தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் வேண்டும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE