Friday 19th of April 2024 07:07:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுபவர்கள்! - நா.யோகேந்திரநாதன்!

சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுபவர்கள்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காவிடில் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்படவேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் ஆதரவாகவும் எதிராகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதேவேளையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராய ஜனாதிபதியால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகச் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அது நீக்கப்படுவது பற்றியதாக அமைந்திருந்ததேயொழிய அதைத் திருத்துவது பற்றியல்ல என்ற போதிலும் இப்படியான ஒரு குழு அமைக்கப்படுவது காலத்தை இழுத்து விடயத்தை நீர்த்துப் போக வைக்கும் ஒரு முயற்சியாக இருக்கமுடியுமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

இது தொடர்பாகப் பொதுசன பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிடுகையில், நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருப்பதாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் துணைபோனவர்களையும் கைது செய்ய முடிந்தது எனவும் அதை நீக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துவது ஒரு மனிதாபிமானமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார். மனிதாபிமானம் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் அர்த்தத்தைப் பொறுத்தவரை அவர்கள் இச்சட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பது தெளிவாகிறது. அப்படித் தவிர்க்க முடியாத நிலையில் நீக்கினாலும் இதன் சில சரத்துகள் வேறு சட்டங்களுக்கு உட்புகுத்தப்படும் என்பது நிச்சயம்.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இலங்கை பயங்கரவாதச் சட்டத்தை இரத்துச் செய்யவேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தாம் வரவேற்பதாகவும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போன்று சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என அரசு நினைத்தால் அது மிகப் பெரும் தவறெனவும் இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்றமுடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 36/1 தீர்மானத்தின் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பது ஒரு முக்கிய விடயமாக உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராகவும் கொண்டிருந்த அந்த அரசாங்கம் நான்கரை வருடங்கள் ஆட்சியிலிருந்தபோதும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுலாக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை. மாறாக அதற்குப் பதிலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. ஆனால் அது கூட நிறைவேற்றப்படவில்லை.

அந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாயிருந்த போதிலும் சகல விடயங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவே விளங்கினர்.

வரவு – செலவுத் திட்டங்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்ற விடயங்களில் அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியினரைத் திட்டமிட்டு ஓரங்கட்டி கூட்டமைப்பை விட்டு வெளியேற வைத்தனர்.

தங்களது கட்சி உடைந்து பலவீனமடைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கினர். இறுதியில் ரணிலின் அமைச்சரவை கலைக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையை உருவாக்கியபோது வழக்காடி மீண்டும் ரணிலை அரியாசனமேற்றியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் பங்குண்டு.

இவ்வளவுதூரம் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ரணிலைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்துடனும் ஒட்டி உறவாடிய போதும் அந்த அரசாங்கத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏன் நீக்க வைக்க முடியவில்லை? ஏன் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பளிக்க வைக்க முடியவில்லை?

அப்படியானால் நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்துப் பறித்து ஏமாற்றவில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நல்லாட்சி அரசாங்கம் 31/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் 2010ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. சலுகையை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. காணாமல் போனோர் விவகாரங்கைள ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க திருமதி சந்திரிகா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதுவும் செயற்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் மேற்படி தீர்மானங்களை நிறைவேற்ற தலா இரண்டு வருடங்கள் படி இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. பல எதிர்ப்புகள் மத்தியில் இவ்வாறு கால அவகாசங்கள் வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஆதரவை வழங்கியது.

எதுவுமே நி்றைவேற்றப்படாமல் 5 வருடங்கள் நல்லாட்சி அரசு இழுத்துப் பறித்துவிட்டு தன் ஆட்சியை முடித்துக்கொண்டது.

அடுத்து ஆட்சிக்கு வந்த கோத்தபாய அரசு மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறி விட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கால அவகாசம் வழங்கப்பட்டதேயொழிய தீர்மானங்களை நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சீபா உடன்படிக்கை, மிலேனியம் சவால் போன்ற மேற்குலகை இலங்கையில் கால் பதிப்பதற்கான கதவுகளை திறப்பதற்கான வழிவகைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது.

எப்படியிருப்பினும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்வது, காணாமற் போனோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பது போன்ற விடயங்களை நிறைவேற்றப் போதிய வாய்ப்பிருந்தும் அதை நிறைவேற்றவில்லை.

அவற்றை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்ற வைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சக்தியும் சந்தர்ப்பமும் கிடைத்தபோதும் அவர்களும் அதைப் பயன்படுத்தவில்லை.

அப்படியானால் தமிழ் மக்களையும் சர்வதேசத்தை ஒரே நேரத்தில் ஏமாற்றியவர்கள் யார் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களையோ சர்வதேசத்தையோ ஏமாற்றுகிறது என்பது வெறும் கற்பனை. அவர்கள் தமிழ் மக்கள் மீது எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்ததுமே மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டார்கள். அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லமுடியுமா?

ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில், சம்பந்தர், சுமந்திரன் ஆகியோர் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றினர் என்பது அழிக்க முடியாத வரலாறு.

எனவே தமிழ் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது தேசிய மக்கள் சக்தியையோ ஆட்சிக்குக் கொண்டு வருவதை மட்டுமே இலக்காக வைத்து அரசியல் செய்யாமல் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விசுவாசத்துடன் கையிலெடுத்து அரசியல் செய்வதே இன்று எம்முன் உள்ள ஒரே மார்க்கமாகும்.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

06.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, ம.ஆ.சுமந்திரன், மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, மாவை சோ.சேனாதிராஜா, இரா சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE